பாரம்பரியமான விவசாயம் அது பட்டுப்போய் விடக்கூடாது.அதுவாகவே வந்து நம்மை ஆக்கிரமித்துக்கொண்ட கிரிக்கெட்.அதில் நாம்தோற்று விடவும் கூடாது. இந்த இரண்டிலும் வெறி பிடித்த கொள்கை கோமான் டெல்டா மாவட்டத்து ஏழை விவசாயி சத்யராஜ்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்று விட கண் கலங்குகிறார். அதை பார்த்த மகள் ஐஸ்வரியா ராஜேஷ்க்கு “நாம்ப விளையாடி இந்தியாவை ஜெயிக்கவச்சு அப்பாவின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கணும்” என்கிற ஆசை. அது லட்சியமாகவே மாறி விடுகிறது. மகளிர் கிரிக்கெட் போட்டி வழியாக அது நிறைவேறவும் செய்கிறது.அது எப்படி சாத்தியமாகியது,அதற்காக அந்த குடும்பம் படும் இன்னல்கள் என்ன என்பதை அறிமுக இயக்குநர் அருண் காமராஜ் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக சொல்லி இருக்கிறார்.
நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமாகுமா என்பது வேறு!
ஆனால் அந்த தடைகளையும் கோடிட்டுக்காட்டதவறவில்லை.சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு நேர்மையான ஆள் இருந்தால் கிராமத்து ஏழை எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
விவசாயம்-கிரிக்கெட் இந்த இரண்டையும் நேர் கோட்டுக்கு கொண்டு வந்து திரைக்கதை அமைத்திருப்பது படத்துக்குப் பலம்.
நடிப்பில் முதலிடம் சத்யராஜூக்கா,ஐஸ்வரியா ராஜேஷுக்கா?
“பசி இருக்கிற வரை விவசாயத்தை ஒண்ணும் பண்ண முடியாது”என நம்பிக்கையுடன் இருந்த சத்யராஜை கூட்டுறவு வங்கி அதிகாரியின் ஆணவம் அவமானப்படுத்துகிறது. வீடு ஜப்தியில்!.மனிதர் என்னமாய் உடைகிறார்.!அந்த பெருங்கவலை,துக்கமும் இளவரசுவின் உரக்கடை டி.வி.யில் கிரிக்கெட் போட்டி பார்க்கிறபோது எப்படி மறைகிறது! மகளின் விளையாட்டு அவருக்கு வழி நிவாரணி.நாற்பதாண்டு கால அனுபவசாலியாச்சே!
கிரிக்கெட் வீரர்களின் பாடி லாங்குவேஜ் அப்படியே பொருந்தியிருக்கிறது ஐஸ்வரியா ராஜேஷ்க்கு! படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் காட்சியில் பரிசு வாங்கும்போது கலங்குகிறாரே இரும்பு மனதையும் அசைத்துப் பார்த்து விடுமய்யா.”இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க பதினோரு பேரு இருக்கோம்.இந்தியாவின் விவசாயத்தைக் காப்பாற்ற யாரு இருக்கா?இந்த பரிசு பணத்தை எங்கப்பா வாங்கின கடனுக்காக எடுத்துக்குங்க”என அவர் சொல்வதை அமைச்சர்கள் கேட்டால் நாணித் தலை குனிய வேண்டும் .ஆனால் அது நடக்காது.
கோச்சராக வரும் சிவகார்த்திகேயன் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்.கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வீரர்களுக்கு இடையில் ஏற்படுகிற ஈகோ பிரச்னைகளை தீர்த்து வைத்தல் ,நம்பிக்கை ஊட்டல் என பல கோணங்களில் நம்மை கை தட்ட வைக்கிறார்.”ஜெயிக்கிறேன்னு சொன்னா கேக்க மாட்டாங்க.ஜெயிச்சவன் சொன்னாத்தான் கேப்பாங்க.ஜெயிச்சிட்டு பேசு!”இந்த வசனம் அவருக்கும் பொருந்துகிறது.
“ஒன்னு லஞ்சம் கொடு,இல்ல மரியாதை கொடு,ஏன்யா ரெண்டையும் கொடுத்து கெடுக்கிறீங்க” இளவரசு பேசுகிற இந்த வசனத்தை ஒவ்வொரு ஊர் எல்லையிலும் எழுதி வைக்கவேண்டும்.
தினேஷ்கிருஷ்ணன் கேமராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.ஸ்டேடியத்தை அள்ளிட்டு வந்திட்டார். “வாயாடி பெத்த புள்ள” இன்னும் காதுக்குள்ளேயே இருக்கு.பாடல்களும் பின்னணி இசையும் பெஸ்ட் சப்போர்ட்!
கனா …அதான் கலாம் அய்யாவே சொல்லிட்டாரே ‘கனவு காணச்சொல்லி!