கடந்த வருட இறுதியில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது ரஜினி ரசிகர் மன்றத்தை ”ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து புதிய உறுப்பினர்களையும் சேர்த்து வருகிறார். இந்நிலையில் தனது அரசியல் பிரவேசத்திற்கு வசதியாக சொந்தமாக புதிய டி.வி. சேனல் ஒன்றை தொடங்க உள்ளார்.இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போதுதொடங்கப்பட்டு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் டெல்லியில் புதிய டிவிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில், சூப்பர் ஸ்டார் டி.வி, ரஜினி டி.வி., தலைவர் டி.வி. என மூன்று பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன . அந்த விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் கையெழுத்திட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தனிக்கட்சி துவக்கும் மும்முரத்தில் ரஜினி இருக்கிறார்.கட்சி ஆரம்பித்தால் பிரசாரத்திற்கு தனக்கென தனி சேனல் அவசியம் என ரஜினி நினைக்கிறாராம்.இதில் பிரபல சேனலில் இருந்து விலகிய பிரபலம் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.