ஊசிப்போன மாவில் தோசை சுட்டா என்ன இட்லி சுட்டா என்ன,என்று சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள். மாரியை பார்த்த கண்களால் மாரி 2 வை பார்க்க முடியவில்லை சாமி.!தனுஷ் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார் போலும் இயக்குநர் பாலாஜி மோகன்.
ரவுடியாக இருந்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என நினைப்பவர் மாரி தனுஷ்.. போதைப்பொருள் கடத்தல் கூடவே கூடாது ,தன்னுடைய கோஷ்டியைச் சேர்ந்த யாரும் அந்த தொழில் பக்கமே போகவேகூடாது என்பதில் கடுமையாக இருப்பவர். உயிர் நண்பனான கிருஷ்ணா தடம் மாறி எதிரி டொவினோவுக்கு விசுவாசியாகி சிக்கி உயிர் இழக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் புகழ் பெற்று அரசியல்வாதியாக மாறுகிற டொவினோவை தனுஷ் எப்படி போட்டுத்தள்ளுகிறார் என்பதுதான் கதை.
ஆரம்ப காட்சிகளை பார்த்து அசத்தப்போகிறார்கள் என நினைத்தது தவறு என்பது போகப் போக நாம் அடிவாங்கும்போதுதான் தெரிகிறது, இது தனுஷ் ரசிகர்களுக்கான படம் என்பதை சீனுக்கு சீன் உணர்த்துகிறார்கள்.
மலர் டீச்சராக வந்த சாய்பல்லவியா இந்த அராத்து ஆனந்தி? செம..செம.!”ரவ்டி பேபி”என்று தனுஷை கொஞ்சுகிற காட்சியெல்லாம் ஆடியன்சை கிளுகிளுக்க வைத்து விடும்.இவரளவுக்கு டான்ஸ் ஆடி அசத்த யாருமே இல்லை. அட்டகாசம்! காதல் உருக்கம் என ஸ்கோர் செய்திருக்கிறார் ஆட்டோ ஆனந்தி.
தனுஷின் நண்பனாக கிருஷ்ணா.இடையிலேயே துரோகியாகும் நண்பர்கள் கதையை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது?
டொவினோ அராஜக வில்லன். “அவனை உடனே கொல்ல மாட்டேன்”என எதிரிக்கு டைம் கொடுத்து கடைசியில் அவரே பரிதாபமாக சாகிறார். படத்தில் வரலட்சுமி சரத்குமாரும் இருக்கிறார்.மகன் யுவன் சங்கர்ராஜா இசையில் அப்பா இளையராஜா பாடி இருக்கிறார். இனிமையான பாடல். அதற்கான காட்சியில் தனுஷ் சாய்பல்லவி இருவரும் அழகாக இருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் உழைப்பு இந்த படத்தில் தனித்தன்மையுடன் ஒளிர்கிறது.வாழ்த்துகள்.
மறுமுறையும் சொல்கிறோம் இது தனுஷ் ரசிகர்களை திருப்திப் படுத்தும்.