தளபதி விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ .வாக இருந்தவர் பி.டி.செல்வகுமார். இவர் தலைமையில் அன்புச்செல்வன்,மீராகதிரவன்,ஜெபஜோன்ஸ்,மணிகண்டன் ,சந்திரசேகரன்,ஆகியோர் இளையராஜா மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பாடல்களில் வரும் வருவாய் தயாரிப்பாளர்களுக்கே சேரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மற்ற இசை அமைப்பாளர்கள் இந்த வழக்கில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதை அவர்கள் சொல்லவில்லை .குறிப்பாக இளையாராஜா மட்டுமே குறி வைக்கப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்காக இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுக்க இருக்கிற நிலையில் இப்படி ஒரு மூவ் கிளம்பி இருக்கிறது. விஷாலை எதிர்ப்பவர்களின் இன்னொரு யுக்தியாக இருக்கலாம் என தெரிகிறது. பி.டி.செல்வகுமார் அனுப்பிய பத்திரிக்கை குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.
இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.
இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கியுள்ளனர். அதில் வரும் ராயல்டி 50% பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு எக்காரணத்தை கொண்டும் சாராது என்று தயாரிப்பாளர்கள் கேட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பங்குபணம் வரவேண்டியதிருக்கிறது.
படங்களின் பாடல்களின் மூலம் வரும் ராயல்டி தொகையை மீட்டெடுக்க தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன், சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர். கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம் வரும் வருவாயில் தங்களுக்கு உரிய பங்கு வரவேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.