“அரசியலுக்கு வருவேன்”என்று சொன்ன வேகத்தில் கட்சியை ஆரம்பித்திருந்தால் திருவாரூர் இடைத்தேர்தலில் இந்த நேரத்தில் ரசிகக் கண்மணிகள் களப்பணி ஆற்றி இருப்பார்கள்.ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு என்ன தயக்கமோ,அல்லது யாரது உத்திரவு தேவையோ காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த காத்திருத்தல் அப்படியே நெடுந்தொடராகி விடுமோ என்னவோ! தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதற்காகவே அமெரிக்காவில் மருத்துவ சோதனைகளை முடித்துக் கொண்டு திரும்பி இருக்கிறார் என்கிறார்கள்.
முருகதாஸ்,கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கு படங்கள் பண்ணப்போகிறார்கள் என்கிற செய்தி கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இவை தவிர பாகுபலி டைரக்டர் ராஜமவுலியின் படம் ஒன்றிலும் நடிக்கப்போகிறார் என்கிறார்கள்.
இந்த செய்திகள் உண்மையாக மாறுமேயானால் அடுத்த இரண்டு வருடங்களில் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இவரது ஆதரவு கண்டிப்பாகத் தேவைப்படும்.
“வடக்கில் பாஜகவுக்கு ஆதரவு குறைந்து வருகிறது” என்று ரஜினிகாந்த் சொன்னதை பிஜேபியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ரஜினியும் தன்னை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளத் தயங்காதவர்.ஆகவே முன்னைப் போல ‘வாய்ஸ் ‘கொடுத்து விட்டு படங்களைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
எப்படியும் ஆகலாம். அது காலத்தின் கையில்!