இசைஞானி இளையராஜா பேசினால் அதில் பிரச்னைக்குரிய ஏதாவது ஒன்று இருந்துவிடும். அல்லது அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படும் வகையில் அமைந்து விடும்.
நல்லவேளை அப்படி எந்த ஒரு பலூனையும் அன்று அவர் பறக்கவிடவில்லை.
சர்வதேச பலூன் பறக்கவிடும் விழா சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடந்தது. அந்த விழாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது.
விழாவில் சங்கத்தலைவர் விஷால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். பேசிய அனைவரும் இளையராஜாவை இசைக்கடவுள் என குறிப்பிட்டு உச்சி முகர்ந்தார்கள்.
காரியம் ஆகவேண்டுமே.. அதனால் புகழ்ச்சியின் சுருதி ஓங்கியே ஒலித்தது. இதற்கெல்லாம் மயங்கக்கூடிய ஆளா அவர்?
அவர் பேசியபோது “இங்கு பேசியவர்கள் கடவுள் என சொன்னார்கள். நான் கடவுள் இல்லை.ரத்தமும் சதையும் கொண்ட சாதாரண மனிதன்.நான் எப்படி கடவுளாக முடியும்?என் லெவலுக்கு கடவுளை கீழிறக்கிவிடாதீர்கள்!”என்று கேட்டுக்கொண்டார்.
அவர் பாடிய இதயம் ஒரு கோவில் என்கிற பாடலை கூட்டத்தினர் கரவொலி எழுப்பி ரசித்தார்கள்.தொடக்கத்தில் இளையராஜாவும் விஷாலும் இரண்டு நிமிடம் பலூனில் ஏறி பறந்தார்கள் .