செல்போன்.கம்ப்யூட்டர் திரைகளில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற சிறப்புக்குரிய படம் சிகை.சிறந்த படமும் கூட.!
தியேட்டர் கிடைக்கவில்லையே என திக்குமுக்காடி முனகும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக, முன்னோடியான சிகைக்கு வாழ்த்துகளை சொல்லி விட்டு விமர்சனத்துக்கு செல்வோம்.
சமுதாயத்தில் மாமாக்களையும் விலை மாதுகளையும் தவிர்க்க முடியாது. அவர்கள் இல்லாத உலகம் எங்கிருக்கிறது? இயக்குநர் சிகரம் அமரர் கே.பாலசந்தருக்குப் பின்னர் பாலியல் தொழிலை சிகையில் விரிவாகத் தொட்டிருக்கிறார்கள். எழுதி இயக்கிய ஜெகதீசன் சுபுக்கும் துணிச்சலுடன் நடித்திருக்கும் ராஜ்பரத்,கதிர்,மீரா நாயர் மூவருக்கும் பாராட்டுகள்.
திருநங்கைகளும் உணர்வு உள்ளவர்கள்தான் என்பதை நயமுடன் வெளிக்கொணர்ந்த ஜெகதீசன் சுபுக்கு பொன்னாடை போர்த்தலாம். கதையை உள்ளங்கைக்குள் எழுதி விடலாம்.ஆனால் அதன் விரிவாக்கத்தை தொடராக எழுத முடியும்.
பிரசாத் ஒரு மாமா. நிம்மி என்கிற விலை மாதுவை வாடிக்கையாளருக்கு அனுப்புகிறான். அவள் வீடு திரும்பவில்லை. ஏன் வரவில்லை என்பதுதான் கதை. இந்த கதைக்குள் எப்படி திருநங்கை வந்து இணைகிறாள் என்பது கிளைமாக்ஸ்.
பிரசாத் கேரக்டரில் ராஜ்பரத் .படம் முழுக்க வருகிறார். ஹை கிளாஸ் மாமாவுக்கு உரிய தோரணை.இழிவான தொழில் என்பதை முக இறுக்கத்தில் காட்டினாலும் அதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது என வாழ்வதை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது. தனது நேசத்திற்குரிய புவனாவை ( ரித்விகா.)தொழிலுக்கு அனுப்புகிறோமே என்கிற வலி முகத்தில் வந்து போகிறது.
திருநங்கையாக கதிர் .கேரக்டரை உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார். பரிஏறும்பெருமாளாக வந்தவரா இவர் என்கிற சந்தேகம் வருமளவுக்கு தோற்றத்தில் மாற்றம். கேரக்டருக்கு ஏற்ப தனது நண்பன் தனக்கே உரியவன் என்கிற உரிமை நடிப்பில் மேலோங்கி இருக்கிறது. அது பாலியல் ரீதியானதா,நட்பு ரீதியானதா ?அது எதுவாக இருந்தாலும் சரி,ஒரு விலைமாதுவை நண்பன் தொட்டு விடக்கூடாது, அவனுக்கு எல்லாமே நாமாக இருக்கவேண்டும் என்கிற பெண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் பாங்கு சூப்பர்.
நிம்மியாக வருகிற மீரா நாயர் அழகு. சிறப்பாக நடித்திருக்கிறார். பாலியல் ரீதியான படத்தில் கவர்ச்சியை அள்ளி விட வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்திருக்கிறார்கள்.சிறப்பு.
ரான் யோகன் இசை சில இடங்களில் வசனத்தை தின்றுவிடுகிறது. கவனித்திருக்கலாம்.
நவீன்குமாரின் ஒளிப்பதிவு திரில்லர் படத்தின் மேன்மை!
நல்ல படத்தை திரையிடுகிற வாய்ப்பு தியேட்டர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே , அவைகளுக்கு அனுதாபங்கள்.!