திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
“இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன். அதனால் இந்த படத்துக்கு நான் தான் எல்லோருக்கும் வில்லன்” என்றார் எடிட்டர் ரூபன்.
“சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது”என்றார் கலை இயக்குனர் இளையராஜா.
“சிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள் “என்றார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
“படத்தின் ஆரம்பத்தில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையானவை மட்டுமே. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன். ஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையரங்கில் என் மகளுடன் படத்தை பார்க்கும்போது இந்த படத்தின் எமோஷனை உணர முடிந்தது. விக்ரமன் சார் புது வசந்தம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார், அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார் நடிகர் இளவரசு.
“குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா. இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள்.ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிற காலத்தில் நிஜமாகவே வெற்றி பெற்ற படம் கனா ” என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
“சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதை விட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார் அருண்ராஜா காமராஜ்.
“அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது. இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார்”என்றார் நடிகர் சத்யராஜ்
“நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம்”என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.