காஞ்சு கிடந்த குதிரைக்கு கொள்ளும்,கானமும் கலந்து கொடுத்தா ரேஸ்ல பிச்சுக்கிட்டு ஓடும்ல.அத மாதிரி நைஸ் குத்தா தெர்மாகோல், பீப்,காவிகளின் வெறியாட்டம் ,அரசியல் குத்தல்,குடைச்சல்களுடன் மலையாளக்கதையை தமிழுக்கு தகுந்த மாதிரி கலந்து பிரியாணி விருந்து போட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
தலைமை ரசிகர் மன்றத் தலைவர் பதவிக்கு ஒரு இடத்தை ரிசர்வ் பண்ணி வையுங்க ரசிகாஸ்!
தனது ஆருயிர் இஸ்லாமிய நண்பன் சசிகுமார், அன்பு மனைவி திரிஷா இருவரும் வெடி வைத்து காலியான பிறகு சம்பவத்துக்குக் காரணமானவர்களை கருவறுக்க கிளம்புகிறார் ரஜினி. கல்லூரி ஆஸ்டல் வார்டனாக பலத்த சிபாரிசில் சேருகிறார். அங்கு சசிகுமாரின் மகனை காப்பாற்றவும்,யாரைத் தேடி வந்தாரோ அவனை போட்டுத்தள்ளவும் பல்வேறு சித்து வேலைகளை செய்கிறார். எல்லாம் கை கூடியதா காலை வாரியதா என்பதுதான் கதை.!
பக்கா கமர்சியல் பார்முலா.
வயதான ரஜினி மீது அந்தக்கால வாலிப வயது ரஜினியின் ஸ்டைல்களை ஏற்றி வைத்து பட்டாசுகளை வெடித்திருக்கிறார்கள். ரசிகக்கண்மணிகள் தியேட்டரை தெறிக்க விடுகிறார்கள். குளோஸ் அப் மட்டும் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் கிருதா மீசை ரஜினி தனி ரகம். மனைவியை இழந்த ரஜினியும்,கணவன் இல்லாத சிம்ரனும் காதல் வயப்படுவது முத்தின காதலிலும் முந்திரி ருசி! பழுத்த பழம் தித்திக்குமடி அந்த பாழும் காயும் கசக்குமடி பாட்டு நினைவுக்கு வருகிறது.
நம்பும்படியாக சண்டை காட்சிகளை அமைத்திருப்பதும் ஒளிப்பதிவு செய்திருப்பதும் பீட்டர் ஹெயின் ,திருநாவுக்கரசு ஆகியோரின் கூட்டு முயற்சி.சிறப்பு. மகிழ்ச்சி.
பாபி சிம்ஹாவின் மிரட்டல் முற்பாதியிலும் விஜயசேதுபதியின் அசத்தல் பிற்பாதியிலும் கூடுதல் பலம் .படத்துக்குப் படம் விஜய சேதுபதியின் வரை பட கிராப் ஏறுமுகம். ரஜினியை ஓவர் டேக் பண்ணி விடக்கூடாதே என்கிற கவலை இயக்குநருக்கு இருந்திருக்கிறது. லகானை இழுத்துப் பிடித்திருக்கிறார்.
“புதுசா வர்றவனை மிரட்டுறதும் பயம் காட்றதும் இங்கதான் நடக்கிது” ( எந்த கட்சி மாட்டுச்சோ!) “நல்லா இல்லேன்னா கேள்வி கேட்கணும் .இல்லேன்னா நாமே எறங்கி மாத்தணும்” (யாருக்கு வச்ச ஆப்பு?) “மறுபடியும் என்னை தொட்ருக்கக்கூடாது.என்னை தொட்டவனை நான் விட்டதில்ல.”( எந்த கட்சிக்கு வச்ச குறி?) “பிரச்னை வேணாம்னு இத்தன நாளா ஒதுங்கி இருந்தோம்.அப்படியே இருந்திருவோமா என்ன ,ஒதுங்கல..பதுங்கி பாய இருந்தோம்” (ரசிகாஸ்க்கு) இப்படி நிறைய ஆப்புகள்.!
ரஜினியுடன் நடிக்கலியே என்கிற ஆதங்கத்தில் இருந்த சிம்ரன்,திரிஷா இருவருக்கும் ஆறுதலாக சில காட்சிகள். செட் பிராப்பர்ட்டி மாதிரி என்றும் சொல்லலாம்.
உறவினர் படத்துக்கு முதன்முதலாக இசை அமைத்திருக்கிறார் அனிருத்.”மரணம்,மாஸ் மரணம்,”படம் விட்டு வந்த பிறகும் காதுகளில்.ஆனால் பிஜிஎம்.மில் தேவா அளவுக்கு இல்லை பிரதர்.டைட்டிலில் இருக்கிற சூப்பர் ஸ்டார் பெயருக்கு இருந்தளவு கூட இல்லியே.! அப்பப்ப பழைய பாடல்கள் அமிர்தம்.!
பேட்ட க்கு எத்தனை மார்க் போடலாம் என்பதை விட எத்தனை கோணிப்பைகளை நோட்டு நிரப்ப போகிறது என்று கணக்குப் பண்ணலாம்.
இருந்தாலும் நம்ம மார்க்.4/5