பொங்கல் திருநாளுக்காக இயக்குநர் சிறுத்தை சிவா தைத்துள்ள பட்டுச்சட்டை தான் இந்த ‘விஸ்வாசம்’.
நரையிலும் பேரழகு,டை அடித்தாலும் கொள்ளை அழகு என திகழும் அஜீத்குமாருக்கு அந்த சட்டை சரியான அளவில் பொருந்தி இருக்கிறதா என பார்க்கலாமா?
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பெரிய குடும்பத்து தல தூக்குதுரையாக அஜித். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் நடத்துவதற்காக வருகிற டாக்டர் நிரஞ்சனாவான நயன்தாராவை ஊர் சண்டியர் தடுக்கிறார். லட்சங்கள் கொடுத்தால் முகாம் நடத்து இல்லையேல் காலி பண்ணு என நாஸ்தி பண்ணுகிறார்.இப்ப கதாநாயகன் என்ட்ரி.அவருடைய ரைஸ் மில்லில் முகாம் நடக்கிறது. அவரது பெரிய குடும்பம் ,பாசம், வீரம் இதெல்லாம் நயனை ஈர்க்கிறது. கல்யாணம் நடக்கிறது,குழந்தையும் பிறக்கனும்ல. அதை மையமாக வைத்துத்தானே கதையே பண்ணியிருக்கிறார் இயக்குநர்.!
அஜித்தின் அடிதடி,ரத்தக்களரியால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்கிற கவலையில் அஜித்தை பிரியும் நயன் மும்பைக்குப் போய் விடுகிறார்.
பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு பிள்ளைப்பாசம் பெவிக்காலாக உதவுகிறது.
அஜித் அளவுக்கு எந்த நடிகருக்கும் கிருதா மீசை பொருந்தியதில்லை என சொல்லலாம், கம்பீரம். !
அவரது ‘இஞ்சாரா’ கிராமத்துப் பாணி வசனம் படம் முழுவதும் நிறைவாக இருக்கிறது. பலரது கூட்டு முயற்சியில் வசனம் என்பதால் எதையும் வலிந்து திணிக்கவில்லை என்பது ஆறுதல். மனைவியை ‘மேடம்’ என சொல்லி அழைக்கவேண்டிய கட்டத்தில் அந்த கேரக்டரின் பண்பு சிதையாவண்ணம் ஆணாதிக்கம் தலை தூக்கவில்லை என்பது ஆறுதல்.பலமும் கூட!
அஜித்தின் சில வசனங்களுக்கு ரசிகர்கள் வெடி வெடிப்பார்கள். ‘அடிச்சு தூக்கு’ பாட்டுக்கு அஜித் செம குத்து!இந்த அஜித்தைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆச்சு என்கிற பெருமூச்சு சிவாவுக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் இதே பாணியில் இனிவரும் காலத்திலும் கதையை கடத்த முடியுமா?
பத்தாண்டுஇடைவெளியில் எல்லோரும் நரையாண்டிகளாக இருக்கிறபோது நயனுக்கு மட்டும் விதிவிலக்கு. கோடீஸ்வரி என்பதால் டை அடித்திருக்கலாம்.
ரோபோ சங்கர், தம்பி ராமையா காமடியை கூட மன்னித்து விடலாம்.ஆனால் விவேக்,கோவை சரளா கொடுமைக்கு இயக்குநருக்கு கடும்தண்டனை கொடுக்கலாம்.
இமானின் இசையில் ‘கண்ணான கண்ணே ‘மெலடி மேற்குத் தொடர்ச்சி மலையின் மெல்லிய தென்றல்.
வில்லனாக கஜபதி பாபு. மகா கோடீஸ்வரர்.தரை மட்ட லெவலுக்கு சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.
மகளாக வரும் அனிகாவுக்கு பாராட்டுகள்.
சிவாவின் முந்தைய படங்களில் விஸ்வாசம் வேற லெவல்.!
எங்களது மார்க்.4/5