பழைய நினைவுகளை மூளை ரீவைண்ட் பண்ணுகிறபோது மைண்ட் விழித்துக் கொண்டு வியப்புடன் வியப்புக்குறிகளை அடுக்கிக்கொண்டே போகும்!
ஓ..இத்தனை நடந்திருக்கிறதா ,?
காலவெள்ளத்தில் அவைகள் அடித்துச் செல்லப் படாமல் அடிமனதிலேயே தங்கி விட்டவையோ?
நான் ‘தேவி வார இதழில்’ பணியாற்றிய காலம். திரைப்பட பகுதி ஆசிரியராக.!
ஆசிரியர் அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தன் மாலை முரசு அலுவலகம் வந்ததும் எனக்கு அழைப்பு வந்தது. அவரால்தான் நான் பட்டை தீட்டப்பட்டிருக்கிறேன்.
“டி.ராஜேந்தரும் பாக்கியராஜும் பேசிக்கொள்வார்களா?”
அவரது அறைக்குள் நுழைந்ததுமே நான் எதிர்கொண்ட கேள்வி!
அவர்கள் இருவருடைய படங்களுக்கும்தான் அன்றைய காலக்கட்டத்தில் போட்டி இருந்தது.
“சந்தித்தால் பேசிக்கொள்வார்கள் அய்யா!”
“இருவரையும் தேவியின் அட்டையில் போட்டு இருவரது சந்திப்பையும் கட்டுரையாக எழுதலாமே?முடியுமா?”
விடை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தாகிவிட்டது.
எனக்குள் சின்ன சந்தேகம் இருந்தது,இருவருமே பிசியாக இருக்கிறார்கள் .அவர்களை எந்த இடத்தில் சந்திக்க வைக்க முடியும்?
இருவருக்கும் போனில் தகவலைச் சொன்னேன்.அவர்களுக்கும் மகிழ்ச்சி.
“முயற்சிக்கலாம் மணி. ராஜேந்தரிடம் கேட்டுப்பாருங்கள்”என்றார் பாக்யராஜ்.
“மைதிலி என்னை காதலி ஸ்பெஷல் ஷோ ஒன்னு போட்டு விடலாம்ணே,. வாகினிக்கு அவங்க ரெண்டு பேரையும் வரச்சொல்லிடு.நான் உஷாவை கூட்டிட்டு வந்திடறேன்”என்று எனக்கு சாதகமான பதிலை சொல்லி விட்டார். டி.ஆர்..
இன்று விஜயா ஹாஸ்பிடல் இருக்கும் இடத்தில்தான் அன்று ஆசியாவின் மிகப்பெரிய வாகினி ஸ்டுடியோ இருந்தது.
சிறிய தியேட்டர். நால்வரும் முன் பின் தாமதமாக வந்து சேர்ந்தனர்,
ராஜேந்தர்.உஷா தம்பதியர் பாக்யராஜ்-பூர்ணிமாவை வரவேற்றனர். பரஸ்பரம் குடும்பநலம் பற்றி பேசிய பிறகு’ மைதிலி என்னை காதலி ‘திரையில் பயணத்தை தொடர்ந்தாள்.
ஒன்று சேருவார்களா என அன்றைய சூழலில் எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் ஜோடி ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிற மேட்டர் வெளியில் செல்லாமல் இருக்குமா கூட்டம் கூடி விட்டது..படம் முடிந்ததும் உடனே கிளம்பிவிடவில்லை.சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் டி.ஆர்.
சிறிய உரையாடல்தான்!
“அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள்தான் நாங்கள்!” என்றார் ராஜேந்தர்,
பட்டென நினைவுக்கு வந்தார்கள் புரட்சித்தலைவரும் நடிகர் திலகமும்!
“ஒரே துறையில இருக்கோம். எங்களுக்கு போட்டியோ பொறாமையோ கிடையாது. அப்படிப்பட்டவர்கள் நண்பர்களாக இருப்பதில் தப்பில்லையே”என்றார் பாக்யராஜ்.
“எதோ இந்த படத்தில இருந்துதான் பிரண்ட்ஸா பழகுறோம்னு நினைச்சிடாதேண்ணே!அரசியலுக்கு வர்றதுக்கு முன்னே நாங்க நண்பர்கள். ‘தூறல் நின்னு போச்சு படம் எப்ப வந்ததுன்னு நினைவு இருக்கா,,அப்போதே என்னை படம் பார்க்க கூப்பிட்டார்.நானும் போனேன்.அன்னேலிருந்து எங்கள் நட்பு தொடருது”என்கிற தகவலை சொன்னார் டி.ஆர்.
“மணியண்ணே!எப்பவுமே நம்மிடம் இல்லாதது மத்தவங்களிடம் இருந்தால் நமக்குப் பிடிச்சுப்போகும்.பாக்யராஜின் காமடி பாணி இருக்கே ,அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!அதனால அவரது படங்களை நான் பார்ப்பேன்”என்றார் ராஜேந்தர்…
உடனே ராஜன் “சினிமாவில சம்பாதிச்சதை இந்த படத்தில் நிறைய செலவு செய்திருக்கார் ராஜேந்தர். இப்ப வெளியார் படங்களுக்கு இவ்வளவு செலவு செய்தார்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குங்க.என்ன சொல்வாங்க.அடுத்தவன் காசுல விளையாண்டு பார்த்திருக்கான்னு சொல்வாங்க.தொழில் மீது நம்பிக்கை வச்சு அந்த உணர்வினால நாம் நினைச்சதை படமாக்கனும்கிற டெக்னிஷியனுக்கு இருக்கிற வேகம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு!”என்று மனதிலுள்ளதை சொன்னார் ராஜன்.
நான் பாக்யராஜை இன்றும் ராஜன் என்றுதான் அழைக்கிறேன். இந்த பழக்கம் அவரின் மறைந்த மனைவி பிரவீணாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. பாக்யராஜும் பிரவீணாவும் காதலித்துக்கொண்டிருந்த நேரம். பாக்யராஜை அவர் அன்புடன் “ராஜன்”என்றுதான் அழைப்பார்.பிரவீணா வீட்டு தோசை மிகவும் ருசியாக இருக்கும் .இதற்காகவே மாலையில் சில நாட்கள் அங்கு போய்விடுவேன்.சரி,மேட்டருக்கு வருவோம்.
“நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டுதான் படம் எடுக்கிறீங்க போலிருக்கே?”
ராஜேந்தர் உரிமையுடன் “அப்படியில்லேண்ணே!பாக்யராஜ் படத்தை என்னோட படத்துக்கு போட்டியா நினைக்கவே இல்லை.அவர் ஸ்டைல் வேற .என் ஸ்டைல் வேற.ரெண்டுமே பயங்கர கான்ட்ராஸ்ட்.இப்ப நான் செண்டிமெண்ட்,சோகம்னு ஆழமா சொல்வேன்.ஆனால் அவர் காமடியாக செண்டிமெண்டோடு சொல்லிடுவார்.இது எப்படி போட்டி ஆகும்?தான் மட்டுமே திறமைசாலின்னு நினைக்காம அருகே உள்ள திறமைசாலியையும் மதிக்கும்போதுதான் அவன் பண்புள்ள மனுசன் ஆகிறான்.அந்த பண்பாட்டையும் பண்பையும் நான் என்னிக்குமே காப்பவன்“
“நீங்க ஒவ்வொரு படத்திலும் புது முகங்களை அறிமுகப்படுத்துறதுக்கு செண்டிமெண்ட் ஏதோ இருக்கு .இல்லையா ராஜன்?” என்று பாக்யராஜை பார்க்க “அப்படியெல்லாம் இல்ல..முந்தானை முடிச்சுக்காக கதாநாயகியை தேடிப்பிடிச்சு எடுத்தேன்.அப்ப ஒரே படத்தில்தான் கவனம் இருந்துச்சு.அதே போல மைதிலி படம் மட்டும் எடுத்ததால் ராஜேந்தர் முழுக்கவனமும் அதில் செலுத்த முடிஞ்சது. அதிகமான படங்களைஒப்புக் கொண்டால் புது முகங்களை தேட முடியிறதில்ல.சில நேரங்களில் புது முகங்கள் கிடைக்கலாம்.சமயத்தில் நேரம்தான் வீணாகும் இதனால் இருக்கிற ஆர்ட்டிஸ்ட்களை வச்சு எடுக்க வேண்டியதா இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.என் படத்த பார்த்திங்கன்னா சப்ஜெக்ட்களில் வெரைட்டீஸ் இருக்கும்.ஆனா எல்லாத்திலும் காமடி,செக்ஸ்,செண்டிமெண்ட் எல்லாம் மிக்ஸ் ஆகி இருக்கும்.”என்றார் பாக்யராஜ்.
“பாக்யராஜ் சொல்றது கரெக்ட்.!நான் காதலுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுப்பேன் பொதுவா எனக்கு ஒரு பாலிசி இருக்கு.நியூ பேஸ்களை அறிமுகம் செய்றதுதான் அது,!”என்றார் டி.ஆர்.
இன்றுவரை இருவரும் நண்பர்கள்தான்.அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து எடுத்த புகைப்படம் தாங்கி தேவி வார இதழ் அந்த வாரமே வெளியாகியது. அவர்களின் அட்டைப்படம் தாங்கிய இதழ் அமோக விற்பனை. அன்றைய கட்டத்தில் அவர்கள் ஹாட் கேக்ஸ் !
மம்பட்டியான் தியாகராஜன் நடிக்க டி.ஆர்.இயக்க என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்தின் படப் பிடிப்பு தியாகராயநகரில் நடந்தது.அங்கு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை அடுத்து சொல்வேன்.
—தேவிமணி