வில்லங்கம் பண்ணனும்னே வம்பா வந்து தமுக்கடிக்கிறவனுடன் மல்லு கட்டித்தானே ஆகணும்?
கம்புடன் வந்து நிற்பவர் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர்.
“அடிச்சுப் பார்”என்று தெம்புடன் நெஞ்சை நிமித்துகிறவர் டைரக்டர் பிரசாந்த் மாம்புல்லி.
ஸ்ரீ தேவி பங்களா என்கிற பெயரில் படம் இயக்குபவர்தான் இந்த பெரும்புள்ளி.!
பிரியா வாரியர்தான் முக்கிய நடிகை.
இந்த படத்தில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் மறைமுகமாகவோ,நேரடியாகவோ இருக்கலாம் என போனிகபூர் நம்புகிறாராம்.
படத்தின் நாயகி மது அருந்துகிறார், பாத் டப்பில் மயங்கிக் கிடக்கிறார் என சில பல சந்தேகங்கள்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் வந்திருந்தார்.
மீடியாக்கள் ஆளுக்காள் கேள்விகளை நாலாபக்கமும் இருந்து ஏவினார்கள்.
இரைச்சலில் ஸ்ரீ தேவி பங்களா படம் பற்றிய கேள்வி ஜான்வியின் காதில் விழவில்லை. ஆனால் மானேஜர் காதில் கேட்டிருக்கிறது.
“கேள்வியை மறுபடியும் கேளுங்கள்” என்று ஜான்வி சொல்ல, குறுக்கே பாய்கிறார் மானேஜர். எக்குத்தப்பான சிக்கலில் கொண்டுபோய்விடும் என்பதை உணர்ந்த அவர் ஜானவியை பேச விடாமல் தடுத்து கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
மகளுடன் வந்திருந்த போனிகபூர் அங்கேயே “படத்தை எடுக்கவிடமாட்டேன். நானா அவரா என்று ஒரு கை பார்த்து விடுவோம்” என்று முண்டாசு கட்டிவிட்டார் .
ஆனால் டைரக்டர் அசரவில்லை. “ஸ்ரீ தேவி பொதுவான பெயர்.யாரையும் குறிக்காது. பார்த்து விடலாம் .ஒரு கை”என்று நெஞ்சு நிமிர்த்தி இருக்கிறார்.
பார்ப்போம் ,கிளைமாக்ஸ் எப்படி வருகிறது என்பதை!