என்ன காரணத்தால் அந்த மோதல் வந்ததோ ,அதைதோண்டி எடுத்து இன்று போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது அந்த இரண்டு ஜாம்பவான்களையும் அவமதிப்பது போலாகிவிடும்.
இசைஞானி என்னுடன் நல்ல நட்புடன் இருக்கிறார். பாக்யராஜும் உரிமையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.ஆக காரணத்தை ஆராயாமல் கதைக்குள் போவது நல்லது. அவர்கள் இருவரும் இன்று நல்ல நட்புடன் இருக்கிறார்கள். அன்று பிரிவு வந்து விட்டது.அதாவது மனக்கசப்பு ஏற்பட்டது என்று சொல்லலாம். விதி என்றால் சீர்திருத்தவாதிகள் கோபித்துக் கொள்ள நேரிடும்!
“மணி, வாங்களேன். கார்ல பேசிக்கிட்டே ஸ்டுடியோவுக்கு போவோம்!” என்று காலையிலேயே அழைப்பு வந்துவிட்டது. ராஜன்தான் பேசினார்.. அதாவது பாக்யராஜ்.
அன்றுஅவரது வீடுவள்ளுவர் கோட்டம் லேக் ஏரியாவில். போர்பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டருக்கு பின்புறம் இருந்தது. இன்று முதல் சந்துக்கே வந்து விட்டார்.
ஏவி.எம். நோக்கி பயணம். ஹாட் நியூஸ் இருக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் அவர் முகத்தில் தெரியவில்லை. வழக்கம் போல பேசிக்கொண்டு வந்தவர் மீனாட்சி கல்லூரியை கார் கடந்தபோது அந்த செய்தியை சொன்னார்.
“என்னடா இவ்வளவு குறிப்பாக மீனாட்சி கல்லூரியை சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா? மாணவிகள் கூட்டம் பட்டாம்பூச்சி கூட்டமாக தெரிந்ததால் மனதில் படக்கென கல்லூரி பதிவாகி இருக்கலாம் அல்லவா! வயசு அப்படி!
“இந்த படத்துக்கு ராஜா மியூசிக் இல்ல!” என்றார் .
“என்ன சொல்றீங்க ராஜன்.? அவர் இல்லேன்னா வேற யாரு? அவர்தானே உங்களுக்கு நிறைய ஹிட்ஸ் கொடுத்தவரு?”
“நானே மியூசிக் பண்றேன்னு எழுதிடுங்க. அதென்ன கம்ப சூத்திரமா?”
“காரணம் என்னன்னு சொல்ல?”
“பாக்யராஜின் புதிய முயற்சி'”ன்னு போட்டுக்க வேண்டியதுதானே!” –அவரே தலைப்பையும் சொல்கிறார்.!
“ரொம்பவும் பரபரப்பான தகவலா இருக்கே!”
“இது நம்ம ஆளு படத்துக்கு’நான்தான் மியூசிக்” ! எக்ஸ்குளூசிவ் நியூஸ்!
வார இதழில் செய்தி எழுதுவதெற்கென ஒரு பாணி உண்டல்லவா! கை வரிசையை காட்டி எழுதியாச்சு. அந்த வார கோடம்பாக்க பரபரப்பு அதுதான்!
1988-ல் வெளியான அந்த படத்தில் “அம்மாடி இதுதான் காதலா” “நான் ஆளான தாமரை” என்ற இரண்டு பாடலும் செம ஹிட். சிறந்த படத்துக்கான அவார்டையும் பெற்றது .அதற்கு பின்னர் சில படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார். தொடரவில்லை. அது அவருக்கு கூடுதல் சுமை என்றே நினைத்தேன்.
பாக்யராஜின் நலம் விரும்பி டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். ராஜனுக்கும் ராஜாவுக்குமான பிணக்கை தீர்க்கும் முயற்சியில் இறங்கியிருந்த நேரம். .இதற்கு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.
அந்த காலத்தில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை அவுட்டோர் ஷூட்டிங் அழைத்து செல்வார்கள். .ஸ்பாட்டில் மதிய உணவு நேரத்தில் டைரக்டர்,நடிக நடிகையர் மற்ற டெக்னிஷியன்களும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம்.
அன்று படமாக்கப்படும் சீனை பற்றி டைரக்டர் விவரிப்பார். கதை சுருக்கத்தையும் சொல்வார். ஹீரோ ஹீரோயின்களும் அவர்களுடைய வித்தியாசமான அனுபவத்தை சொல்வார்கள்.மாலையில் ஷூட்டிங் முடிந்ததும்விரிவான பேட்டிகள் நடக்கும்.
இப்படியெல்லாம் நடக்குமா என்பதை இந்த காலத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. கதையையும் சொல்ல மாட்டார்கள். காட்சிகளையும் சொல்ல மாட்டார்கள்.
கேட்டால் சீரியல் எடுக்கிறவர்கள் சீனை சுட்டுவிடுவார்கள் என்பார்கள்.
“இவர் கொரியன் படத்தை சுட்டு விட்டு நம்மிடம் கதை விடுகிறார் “என்று பத்திரிகையாளர்களுக்குள் பேசிக்கொள்வோம்.
அந்த காலம் என்பது தமிழ்ச்சினிமாவின் பொற்காலம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி,விஜயகாந்த், சிவகுமார்,கமல்,ரஜினி,சரத்குமார்,ஜெய்சங்கர், என அனைவரும் சகோதரர்கள் மாதிரி பழகினார்கள். நாயகிகளும் அப்படித்தான்.!ஆனால் இன்று அத்தகைய உணர்வு மங்கிப்போய்விட்டது .சிலர் மட்டும்விதி விலக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.சுந்தரராஜனுடன் பொள்ளாச்சிக்கு பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப் பட்டார்கள். அவர்களில் அடியேனும் ஒருவன்.! முன்னரே சொல்லியிருக்கிறேன் ஆர்.,சுந்தரராஜனின் சமரச முயற்சியைப் பற்றி!
எப்போதும் போல சுந்தரராஜன் பேசினார். பேச்சுக்கு இடையில் தனது சமரச முயற்சியைப் பற்றியும் சொல்லி விட்டு “செய்தியை’ வெளியிட வேண்டாம் ” என்றும் கேட்டுக் கொண்டார்.
தலைநகரம் திரும்பியதும் எனது பொள்ளாச்சி ஷூட்டிங் எக்ஸ்குளூஸிவ் கட்டுரை அச்சுக்கு போய் விட்டது.! அது பத்திரிகையாளனுக்கே உரிய திமிர் என்றும் சொல்லலாம். இதன் விளைவு என்னாயிற்று?
சுந்தரராஜன் உக்கிரமானார்!
நாளை மறுநாள் சொல்வேன்!
–தேவிமணி.