கடலில் அணை கட்டமுடியுமா?
காற்றுக்கு வேலி போட முடியுமா?
கற்பனைக்கு கடிவாளம் கட்ட முடியுமா?
இவையெல்லாம் சாத்தியம் என்றால் வைரமுத்துவையும் பெசன்ட் நகர் ஏரியாவுக்குள் அடக்கிவிட முடியும்!. பெரிய இடைவெளிக்குப் பின்னர் பெரிய திரைப்பட விழாவில் அவரது உரையை கேட்க முடிந்தது. திரை அரங்கமே கல்யாண மண்டபமாக மாறி இருந்தது.
இயக்குநர் சேரனில் இருந்து மொத்தப் படப்பிடிப்புக் குழுவினரும் பட்டு வேட்டி சட்டையில் பள பளத்தார்கள். சேரனின் ‘திருமணம்’ சில திருத்தங்களுடன் என்கிற படத்தின் முன்னோட்ட படச்சுருள் வெளியீட்டு விழா
.நாதசுரம் என்ன ,குழாய் ஒலிபெருக்கியில் எம்.ஜி.ஆர்,சிவாஜி படப்பாடல்கள் என்ன…!
அகல ஜரிகைக்கரை வேட்டியில் அனைவரையும் வாசலில் நின்று வரவேற்றார். சேரன்.!
இன்று தைப்பூசம். சேரனின் மறு பிரவேசம்.!
வாழ்த்திப் பேசியவர்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, மகேந்திரன்,கவிப்பேரரசு வைரமுத்து, சேரனின் குரு கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட இன்றைய கோபி நைனார், லெனின் பாரதி,மாரி செல்வராஜ் உள்ளிட்ட இடது சாரி இயக்குநர்களும் கலந்து கொண்டார்கள்.
வைரமுத்துவின் பேச்சு இனி…
“தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்தால் செல்வம் கொழிக்கும், நடிகர்களின் ஆதிக்கம் அரசியல் வளர்ச்சி, இயக்குநர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகும் போது சமுதாய மாற்றம் நிகழும்.
இன்றைய இளம் இயக்குனர்களுக்கு தடம் பதித்துக் கொடுத்தவர்கள் பாரதிராஜா, பாலசந்தர்,மகேந்திரன்,ஆகியோராவர்.தமிழ்ச்சினிமாவைப் பார்த்து எடுக்கப்பட்ட படங்கள் இருந்த காலம் ஒன்று இருந்தது. வாழ்க்கையை பார்த்தே படம் எடுத்தவர்கள் பாரதிராஜா,மகேந்திரன்,இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதே நமக்கு பிரமாண்ட காட்சி.!
என்னிடம் பாட்டுக் கேட்டு வருவார்கள். எந்த காட்சி என்பேன்.
“காதலன் காதலி சந்திப்பு “என்பார்கள்.
“ஸ்பரிசம் உண்டா?”
“நீங்களே முடிவு செய்யுங்கள்.!”என்பர்
“காதலன்,காதலி நகரமா,கிராமமா?”
“அவர் நகரம்.கிராமத்தில் சந்திக்கிறார்கள்”
“காலை என்றால் வார்த்தைகள் வேறு. உச்சி வெயில் என்றால் சொற்கள் வேறு. மாலை என்றால் பாடல் வேறு.இரவு என்றால் வார்த்தைகள் வேறு!விண்மீன் என்றால் வேறு,நிலவு இருந்தால் வேறு. இப்படி உளவியல் தெரிந்துதான் பாட்டு எழுதுவேன்.
திருமணம் என்பது சமீப காலத்திய நாகரீகம்தான்.
ஆணுக்கும்,பெண்ணுக்குமான பந்தமே இது! தாலி வந்தது எல்லாம் இந்த 3 0 0 0 ஆண்டு காலத்தில்தான். இந்த பந்தமே இன்னும் ஐம்பதாண்டு அல்லது நூறு ஆண்டு காலம்தான் இருக்கும்.” என்றார்.