உக்கிரம் எந்த அளவில் இருந்திருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?
கோபம் என்பது வேறு.அது தடித்த வார்த்தைகளுடன் நின்று விடும் .ஆனால் உக்கிரம் அதையும் தாண்டி……!
“உங்கிட்ட போடாதேன்னு சொல்லியும் நீதானே நியூஸ் போட்டே! உன்ன விட மாட்டேன்டா!” என்று என் மீது பாய்ந்து விட்டார்.
எங்கே என்று சொல்லவில்லையே!
பிரசாத் டப்பிங் தியேட்டர் மாடியில்!. அப்போது எஸ்.எஸ்.சந்திரன்,செந்தில் ஆகியோருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும்.
கேப்டன் விஜயகாந்த், இயக்குநர் ராம.நாராயணன் , முரசொலி செல்வம்,ராதா ரவி, சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன், இவர்களெல்லாம் ஒரே குழுவாக இருப்பார்கள்.நல்ல நண்பர்கள். அவர்களுடன் நானும் ஒரு நண்பன்
.திருச்சியில் எனது பிறந்தநாளை நட்சத்திர விழாவில் ராதாரவி மிக சிறப்பாகக் கொண்டாடியவர் என்பதை இங்கு மறக்க முடியாது.
மாலை நேரத்தில் செல்வம்,ராம.நாராயணன் தவிர்த்து நாங்கள் சந்தித்துப் பேசுவது நடிகர் சங்கத்தில்.
வழக்கம் போல ஸ்டுடியோ ரவுண்ட் சென்றவன் பிரசாத் டப்பிங் தியேட்டருக்கும் சென்றேன். அங்கு வருகிற நடிக நடிகையருடன் பேசி செய்திகளை சேகரிப்பது ரொட்டீன் ஒர்க். அன்றும் அது போலவே.!
சுந்தரராஜனின் ஆவேசத்தை பார்த்த சந்திரன் அவரை தடுத்துப் பிடித்துக் கொண்டார். தாக்குதலை தடுக்க முயன்ற என்னை செந்தில் பிடித்துக் கொண்டார். ஆனால் இருவரும் வார்த்தைகளை கொட்டியபடியே பாய முயன்றோம்.
“விடுங்க சந்திரன்!அவனை இன்னிக்கி ஒரு கை பார்க்காம விடமாட்டேன்!”
“இவரு ஒரு கை பார்க்கிறவரை எங்க கை பேனாவ பிடிச்சிட்டிருக்குமாக்கும்! என்னை விடுங்க செந்தில்!அவரென்ன பெரிய மம்மா கொடுக்கு !” -மதுரைத் திமிரு.
மம்மா கொடுக்குன்னா மதுரை சண்டியர் ஏரியாவில் புழங்கப்பட்ட சொல்.
எவ்வளவு நேரம் முண்டிக் கொண்டே இருக்க முடியும். இருவரும் எங்களை மோதவிடாமல் பிரித்து விட சுந்தரராஜன் குமுறியபடி “நீ கீழே இறங்கித் தானே வருவே! வா “என சொல்லிக்கொண்டே மாடியை விட்டு இறங்கிச்சென்றார்.
என்ன நினைத்தாரோ அப்படியோ சென்று விட்டார் .நானும் அலுவலகம் சென்று விட்டேன்.
நடந்ததை ஆசிரியரிடம் சொன்னேன்.
“மறுபடியும் அவர் பிரச்னை பண்ணினால் மேல் நடவடிக்கை எடுக்கலாம்”என சொல்லிவிட்டார்.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதைப்போல முன்னர் ஒரு தடவை ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அதை பின்னர் பார்க்கலாம். தொடக்கத்தில் இருக்கிற படத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.
கே.ஆர்.ஜி.ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் எடுக்கப்பட்ட படம் ‘நெஞ்சில் ஒரு ராகம்.’
இயக்குநர் டி.ராஜேந்தர். ஒளிப்பதிவாளர் அமரர் என்.கே.விஸ்வநாதன் . பாசத்திற்குரிய நண்பர்.
தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எனது சுவேகா மொபெட் அங்கு போய் நின்றது.
“வாங்க மணி!” இது என்.கே.வி.
“வாண்ணே” இது டி.ஆர்.
“நீங்க வருவீங்கன்னு தெரியும்.உங்களுக்கு பெரிய கவுரவம் காத்திருக்கு. போயிறாதிங்க” என சஸ்பென்ஸ் வைத்தார் என்.கே.வி.!
வழக்கம் போல கலாட்டா பண்ணுகிறார் என நினைத்தால் டி.ஆரும் “ஆமா ஆமா “என சிரிக்க அப்போதுதான் எனக்கு டவுட் வந்தது.
ஏனென்றால் டி.ஆருக்கு விஷமங்களை மறைக்க முடியாது .சிரிப்பு காட்டி விடும்.
எனக்கு எதுவும் புரியல. மம்பட்டியான் தியாகராஜனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மேக்கப்மேன் வந்து “லைட்டா டச்சப் பண்ணிக்கலாம் சார்” என்றபடியே பேன்கேக்கை லேசாக தடவினார்.
என்னால் மறுக்க முடியவில்லை. எதோ ஒரு கேரக்டர் நமக்கு இருக்கு என்று பலி ஆடாக முகத்தைக் காட்டினேன்.நடிக்கும் ஆசை யாரை விட்டது?
பக்கமாக வந்த என்.கே.வி. கிண்டலாக சிரித்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
டி.ஆரும் “மணி அண்ணே சூப்பர்” என்றார்.
ஆனால் என்ன நடந்தது?
நாளை மறுநாள் சொல்கிறேன்.
நாக்கை பிடுங்கிக்கொள்கிற மாதிரி கேட்டார் பிரவீணா!
–தேவிமணி