
“எதுக்கு எங்களை அடிக்கிறே,கழுத்தைப் பிடிச்சு நெரிக்கிறே, செத்துப் போன ஆளுக்கெல்லாம் சிலையை எதுக்கு திறக்கிற,இத்துப்போன ஜனங்களை ஏன்டா திரும்பத் திரும்ப உதைக்கிறே”என்ற யுகபாரதியின் வரிகளை கேட்டதும் “இம்மென்றால் சிறைவாசம்,ஏனென்றால் வனவாசம்,இவ்வாறங்கே செம்மைஎல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகி”என்கிற பாரதியின் வரிகளே நினைவுக்கு வந்தது.
ஜார் மன்னனின் கொடுமையைச் சாடி இருந்தான் அந்த புரட்சிக்கவி
.ஜிப்ஸி படத்துக்காக காட்சிப் படுத்தப்பட்ட பாடலை செய்தியாளர்கள்கேட்டார்கள் .முன்னோட்டமும் பார்த்தார்கள் வித்தியாசமாக இருந்தது.
சிறைச்சாலை. அறைகளுக்குள் ஆட்களைத்தான் அடைத்து வைப்பார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார்,தமிழினத் தலைவர் பிரபாகரன்,சேகுவேரா ஆகிய புரட்சியாளர்களின் படங்களும் சிறைப்பட்டிருந்தன.
வித்தியாசமான சிந்தனை!
இதே சிந்தனை கதையிலும் இருக்கவேண்டும்.படைப்பாளி ராஜூ முருகன்,எனவே எதிர்பார்க்கலாம்,??
நாடோடியாக நடித்திருப்பவர் ஜீவா.
பெயரிலேயே ஒரு போராளி இருக்கிறார்.
இதற்கு முன்னர் புதிய சிந்தனையாளர்களின் இயக்கத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
மெலிய கதையாக இல்லாமல் வலிய தீயாக இருக்குமேயானால்அவரது நடிப்பும் சுடர் விடும்.
தோழர்கள் நல்லகண்ணு,பாலபாரதி, திருமுருகன் காந்தி,வளர்மதி,உள்ளிட்ட இன்றைய போராளிகளை முன்னோட்டக் காட்சியில் நடிக்க வைத்திருந்தனர்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா?என்று தெரியவில்லை.
இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும்.
இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை.
அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும், இந்த படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.”என்பதையும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.
இயக்குநர் ராசு முருகன் பேசுகையில் “இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறு வேறு அல்ல.
இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை.
தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள். யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம்.அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.”என்று பேசியவர் தன்னுடைய உதவி இயக்குநர்களை அறிமுகப் படுத்தியபோது “டேய் ..எல்லாரும் எந்திரிச்சி நில்லுங்கடா” என கட்டளையிட்டது அந்த தோழர் என்கிற உணர்வை கொச்சைப்படுத்தி விட்டது.
ஆதிக்க உணர்வு!