‘நெஞ்சில் ஒரு ராகம் ‘படத்தின் பிரிவியூ மேனா தியேட்டரில் நடந்தது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஹோட்டல் உட்லண்ட்ஸ்க்கு எதிரில்இந்த தியேட்டர் இருந்தது.
அப்போதெல்லாம் பிரிவியூ காட்சிகள் பெரும்பாலும் மேனா, மினி ஆனந்த் ஆகிய தியேட்டர்களில்தான் நடக்கும். மொத்தமே 5 0 பத்திரிகையாளர்கள்தான் இருப்பார்கள் .
பிலிம்நியூஸ் ஆனந்தன்,மதி ஒளி சண்முகம்,தந்தி அதிவீரபாண்டியன், அலைஓசை எம்.பி.மணி ,தினமணி ஜாம்பவான், சுதேசமித்திரன் ராமமூர்த்தி, நவமணி ஜோசப்,அறந்தை நாராயணன்,நாகை.தருமன் மாலைமுரசு ஜெயபாண்டியன், பொம்மை வீரபத்திரன்,பராசக்தி மாலி,கலைப்பூங்கா ராவணன், எம்.என்.ராகவன் ,தேவிமணியாகிய அடியேன், மற்றும் எக்ஸ்பிரஸ்,ஹிந்து,ஸ்கிரீன் அய்யப்ப பிரசாத்.உள்ளிட்ட ஐம்பது பேர் தேறுவார்கள்.
பின்னாளில் தினமலர் மாரிமுத்து,தினகரன் கண்ணதாசன் , தேவராஜ், ஜெய சந்திரன்,மக்கள் குரல் ராம்ஜி, பேசும்படம் ஜேவி,துரை.ராமச்சந்திரன் ஆகிய பிரபலங்கள் வந்தனர் .
மினி ஆனந்தில் படம் என்றால் சற்று லேட்டாக ஆனந்த தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி அங்கு வந்துவிடுவார். அதற்கு முன்னாலேயே மானேஜர் கல்யாணத்தின் கவனிப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிடும்.
அவர் தற்போது ‘நாக் ஸ்டுடியோவின் ‘மானேஜரராக இருக்கிறார்.
டிபன் வகையறாக்களில் கல்யாணத்தின் நேரடி கவனிப்பு மிரட்டலாக இருக்கும்.
“என்ன கண்ணுகளா!”என்றபடியே உமாபதியும் வருவார்.
மிகப்பெரிய மனிதர்,அன்றைய சென்னையின் பிரபலமான தொழிலதிபர், அரசியல்வாதி என்றெல்லாம் அடையாளம் கொண்ட உமாபதியின் அணுகுமுறை இன்றைய பிரபலங்களிடம் காண்பது அரிது. அவர் பெறாத பிள்ளைதான் கல்யாணமும்!’ நைனா நைனா’ என்றுதான் கல்யாணமும் அழைப்பார்.
இவருடன் அன்றும் இன்றும் நெருக்கமாக நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அணுகுமுறைதான் காரணம்.
உமாபதி, அமரர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.உமா என்கிற வாரப்பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. கவி.கா.மு.ஷெரிப், சின்ன அண்ணாமலை,கு.மா,பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி,ஏபி.நாகராஜன், டி.கே.சண்முகம்,பகவதி ஆகிய சினிமா பிரபலங்கள் தமிழரசுக் கழகத்தின் முக்கிய பேச்சாளர்களாக இருந்தார்கள்.
இதில் எம்.ஜி.ஆரை கடுமையாக எதிர்த்தது சின்ன அண்ணாமலை.
தனது சங்கப்பலகை வார இதழில் குலேபகாவலி படத்தை பலே பாடாவதி என விமர்சனம் செய்தவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இவரைப்போலவே தி.மு.க.வினரை கடுமையாக விமர்சனம் செய்து தனது வார இதழான சாட்டையில் ஏபிஎன் கட்டுரைகள் எழுதி வந்தார்.
அப்போது திமுகவுக்கு கடுமையான எதிரியாக அமைந்திருந்தது தமிழரசுக் கழகம்தான்.!
பராசக்தி படத்துக்குப் பிறகு ஏபிஎன் பெண்ணரசி என்கிற படம் எடுத்ததற்கு காரணமே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு போட்டியாகத்தான். பராசக்தியைப் போல பெண்ணரசி படத்திலும் சங்கிலியால் ஏபிஎன் கட்டப்பட்டு வசனம் பேசி இருப்பார்.ஆனால் எடுபடவில்லை. மகா சோகமாகிவிட்டது.
கவிஞர் கண்ணதாசன்,ஏபிஎன் ஆகியோர் பரஸ்பரம் தங்கள் பத்திரிகைகளில் அரசியல் ரீதியாக தாக்கி எழுதிக் கொள்வார்கள்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சியை ‘தொங்கு மீசை,எலும்புக்கூடு” என்றெல்லாம் கண்ணதாசன் அடை மொழியிட்டு எழுதுவார்.
தமிழர் திருமணங்களில் தாலி உண்டா என்கிற ஆரோக்கியமான விவாதத்தில் ம.பொ.சி.யும் கண்ணதாசனும் கடுமையுடன் மோதிக் கொண்டனர்.
‘தாலி இல்லை”என வாதிட்டவர் கண்ணதாசன்.
தாலி அணியும் பழக்கம் இருந்தது”என்பது ம.பொ.சி.யின் வாதம்.
தமிழ் இலக்கியங்களில் இருந்து உதாரணங்களை எடுத்தாண்டது அருமையாக இருந்தது.
அன்று கண்ணதாசனுக்கு பக்க பலமாக இருந்தவர் பேராசிரியர் ராசமாணிக்கனார். மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர். அந்த காலக்கட்டத்தில் தி.மு.க.வுக்கு பெரும்பான்மையான ஆதரவு கல்லூரிகளில்தான்!
அன்றைய சினிமாவில் இவர்களுக்கு அரசியலும் பிரதானமாக இருந்தது என்பதை பதிவு செய்வதற்காகவே எழுதி இருக்கிறேன்.
பேக் டு மேனா தியேட்டர்.
மேனா என்கிற பெயரை வைத்தே இது ஏவி.எம்.நிறுவனம் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.தற்போது இந்த தியேட்டர் உணவகமாக மாறிவிட்டது.
நெஞ்சில் ஒரு ராகம் படம் முடிந்தது. வழக்கம் போல ராஜேந்தர், என்.கே.விசுவநாதன் ஆகியோர் படம் முடிந்ததும் நெருக்கமான பத்திரிக்கை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள் .
“என்னண்ணே, படம் திருப்திதானே ..நல்லா வந்திருக்கில்ல ”
மொத்த படத்தின் ரிசல்ட் பற்றி கேட்டாரே தவிர நான் இடம் பெற்றிருந்த சீனை பற்றி வாயைத் திறக்கவில்லை டி.ராஜேந்தர்.
நானும் அவர்கள் யாராவது சொல்ல மாட்டார்களா என எதிர்பார்த்தும் ஏமாற்றம்தான்!
சக பத்திரிகையாளர்கள் திரையில் நான் தோன்றியதும் பெயரைச்சொல்லி ஆரவரித்ததுடன் சரி.!நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வழக்கம் போல நான், எம்.பி.மணி ,மு.க.வசந்தன் ஆகியோர் கடற்கரையோரமுள்ள குப்பத்துக்குள் நுழைந்து பின்னர் மைலாப்பூர் பக்கமாக ஒதுங்கி விட்டோம்.எப்படியும் இரவு பனிரெண்டு மணியாகும் அறைக்கு திரும்ப.!
மறுநாள் தி.நகரில் உள்ள நடிக நடிகையரை சந்தித்துப் பேசுவது என திட்டமிட்டுக் கொண்டு முதலில் ஆச்சி மனோரமா வீட்டுக்குச் சென்றேன்.அப்படியே தீபா,பிரவீணா ஆகியோரை போட்டோகிராபர் மாலைமுரசு காதருடன் சென்று பேட்டி எடுக்கலாம் என்பது அன்றைய நிகழ்ச்சி நிரல்!.
பிரவீணாவை அன்றைய உதவி டைரக்டராக இருந்த பாக்யராஜ் காதலிப்பது எனக்குத் தெரியும்.
அதையே பேட்டியின் மையமாக வைத்து விடுவது என்கிற முடிவுடன்தான் சென்றேன்.
“இதெல்லாம் உங்களுக்குத் தேவைதானா, என்னங்க கேரக்டர் அது! உங்களை கிண்டல் பண்ணனும்னே ராஜேந்தர் சீன் பிடிச்சிருக்கார்” என்று பிரவீணா என்னைப் பார்த்து சிரித்தபடியே கேட்டதும் மையக்கருத்தே மறந்து போனது.
“என்ன பிரவீணா சொல்றீங்க?”
“பின்ன என்ன …தியாகராஜனின் சின்ன வீட்டுக்கு நீங்க போய் திரும்பற மாதிரிதானே சீன்? அவர் வந்ததும் சட்டையைக்கூட போட முடியாம வாட்சையும் மறந்து வச்சிட்டுபோய் திரும்பி வந்து “எக்ஸ்கியூஸ் மீ”ன்னு சொல்லிட்டு டயலாக் பேசுறீங்க.இத பார்த்த தியாகராஜன் சின்ன முள்ளும் சரியில்ல பெரிய முள்ளும் சரியில்லன்னு சொல்றார். ஒரு நிருபர் நடிக்கிற சீனா அது?நாலு பேரை சந்திக்கிறபோது உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்று படபடன்னு பேசிவிட்டார் சிரிப்பு மாறாமல்.!
எனக்கு முகம் ஒரு மாதிரியாகி விட்டது. மறந்தும் போனது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நான் அறிமுகமாகியது ஒரு மோதலுடன்தான்!
1 9 7 4–ல். மதுரை பாண்டியன் ஹோட்டல் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த மோதல் நிகழ்ந்தது.
இருவருக்கு இடையில் நடந்த வாதப் பிரதிவாதத்தைப் பற்றி நினைத்தால் நானா அப்படி என வியப்பு வரும்.
ஆனால் அந்த நிகழ்வுதான் அவருடன் நெருக்கத்தை தந்தது. .மதுரைக்கு வந்தால் “எங்கே மணி வரலியா”என அவர் கேட்கும் அளவுக்கு பதிவாகிப் போனேன் .
அது எப்படி என்பதை நாளை மறுநாள் பார்க்கலாம்.
–தேவிமணி