1974 -ம் ஆண்டு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனியாக இயக்கம் அமைத்துக்கொண்ட நேரம்.
நான் மதுரை ‘மாலை முரசி’ல் செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
அந்த கால கட்டத்தில் ‘தினத்தந்தி,மாலைமுரசு’ நாளேடுகள் திமுக அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்தன என சொல்லலாம்.
அதற்கான காரணத்தை ஆராய்வதோ,அதற்குள் நுழைவதோ ஆரோக்கியமானது இல்லை. வெளியில் நிற்பதே நாகரீகம்.
ஆனால் எம்.ஜி.ஆரின் செய்திகளை புறக்கணிப்பதும் இல்லை. செய்திகள் வெளியாகவே செய்தன.
எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தார், பாண்டியன் ஹோட்டலில் தங்கினார் வழக்கம் போல.
அவர் வந்தால் பத்திரிகையாளர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி. செய்திகள் சூடாக கிடைக்கும்!
தி.மு.க.-அ.தி.மு.க. மோதல் செய்தியை மக்கள் விரும்பிப் படித்தார்கள். இதனால் எம்.ஜி.ஆரின் சுற்றுப்பயணத்தில் அவருடன் செய்தியாளர்களும் இணைந்து கொள்வார்கள்.
நள்ளிரவுக்குப் பின் அவருடன் மதுரை திரும்புவது வழக்கம்.
மறுநாள் பிற்பகல் 3 மணி அளவில் மறுபடியும் சுற்றுப்பயணம் .இதுதான் அவரது அக்காலத்து அரசியல் மதுரை நிகழ்ச்சி !
பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றேன் அழைக்கப்படாமலேயே!
எம்.ஜி.ஆர் .அவரது அறையில் தயாராகிக்கொண்டிருந்தார் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக!
கா.காளிமுத்து,அன்றைய முகவை மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன்.பாலகுருவா ரெட்டியார் ,திண்டுக்கல் மாயத் தேவர் இன்னும் பலர் அங்கிருந்தார்கள்.
பத்திரிகையாளர்கள் தனியாக ஒரு அறையில்!
“மணி ,உன்னை சந்திக்க எம்.ஜி.ஆர்.விரும்புவாரா?”
“உங்களுக்கும் அவருக்கும்தான் ஆகாதேப்பா,!ஆபிசில் கட்டம் கட்டி விட மாட்டார்களா? “
இப்படி எதிர்மறையான கேள்விகளை கேட்டது எனது சக பத்திரிக்கை நண்பர்கள்தான்.
அதிமுகவை சேர்ந்த யாரும் என்னை மாற்றாளாக ,வேற்றாளாக பார்க்கவில்லை,குறிப்பாக மதுரை முத்தண்ணன்,காளிமுத்து இருவரும்.!
எம்.ஜி.ஆர் .அறையை விட்டு வந்தார்.
பத்திரிகையாளர்கள் தங்களையும் ,அவர்கள் சார்ந்த பத்திரிகைகளின் பெயரையும் சொல்லி அறிமுகமானார்கள்.
“மணி. மாலைமுரசு!”
“அருகில் நின்ற முத்தண்ணனை பார்த்து விட்டு என்னிடம் “உங்களை கூப்பிட்டாங்களா, என்னோட சுற்றுப்பயணத்துக்கு வர்றதுக்கு உங்க ஆபீஸ்ல அனுமதிப்பாங்களா,உங்களுக்கு பிரச்னை வராதா?” என்றார்.
“எனக்கு வேண்டியது நியூஸ்.அனுமதிச்சா இங்கேர்ந்து கேட்டத எழுதுவேன். வெளியே போனா எனக்கு கிடைக்கிற சேதிய சொல்லிடுவேன். டூருக்கு வர ஆபீஸ் அனுமதிச்சா வருவேன்”
என் பதிலைக் கேட்டதும் பக்கத்தில் நின்ற முத்தண்ணனைமறுபடியும் பார்க்கிறார். எம்.ஜி.ஆர்.
“நம்ம பையன்தான்.தப்பான நியூஸ் கொடுக்க மாட்டார்!”என்றார் அவர்.
கான்பரன்ஸ் ஹாலில் முதல் ஆளாக உட்கார வைக்கப்பட்டேன். கட்டம் போட்ட சட்டை ஆளு நான்தான்! நான் எழுதுவதை எம்.ஜி.ஆர்.கூர்மையாக கவனித்ததை படம் எடுத்தவர் தினமலருக்காக படம் எடுத்த நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் .இன்றும் இருக்கிறார்.
படத்தில் இருக்கிற மற்ற நண்பர்களில் மக்கள் குரல் சண்முகம் மட்டும் இன்று உயிருடன் இல்லை.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மதுரை மாலை முரசில் அதிமுக செய்திகள் பிரமாதமாக வெளிவந்தன. குறிப்பாக எம்.ஜி.ஆரின் சுற்றுப்பயணத்தை அப்படியே நேரடி வர்ணனை செய்வது மாதிரி கொடுப்பேன்.
செய்தி ஆசிரியர் ஜோசப்பும் சிறப்புடன் செய்தியை எடிட் பண்ணி அச்சுக்கு அனுப்புவார்.
அதன் பின்னர் மதுரைக்கு எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தால் ‘மணி வரலியா ‘என்று காளிமுத்தண்ணனிடம் கேட்பார்.இந்த அளவுக்கு அன்று நெருக்கமாக இருந்தேன்.
எனக்கும் காளிமுத்துக்கும் நெருங்கிய நட்பு முன்னரே இருந்ததுதான் உண்மை.அது நான் ‘தமிழ்நாடு’நாளிதழில் செய்தியாளனாக பணியாற்றியபோது மலர்ந்தது.அப்போது அவர் தியாகராஜர் கல்லூரியில் தி.மு.க.மாணவராக இருந்தார். நா.காமராஜும் அந்த கல்லூரி மாணவர்தான்!அது தனிக்கதை. சட்ட எரிப்புக் கதை!
மதுரை வி.டி.சி.யில் தமிழ் ஆசிரியர் பணியை முடித்ததும் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்த அம்பாசடர் லாட்ஜுக்கு காளிமுத்து வந்து விடுவார்.அப்போதுதான் அவரது இரண்டாவது காதல் அரும்பி இருந்தது. மனோகரியை காதலித்து வந்தார். மனோகரியின் மகளைத்தான் சீமான் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
அதிமுக தோழர்களின் தலைமையகம் மாதிரிமதுரை அம்பாசடர் லாட்ஜ் இருந்தது.
பக்கா சிவாஜியின் ரசிகனான நான் எம்.ஜி.ஆர். வட்டத்தில் நெருக்கமானது இப்படித்தான்!
அலுவலகத்திலும் என்னை அதிமுக செய்தியாளனாகவே பார்த்தார்கள் ! எம்.செல்வராஜ் என்பவரை திமுக செய்தியாளனாக கருதினார்கள்.!
மதுரையில் எம்.ஜி.ஆர்.சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் நானும் தினமலர் நிருபரும்தான் நள்ளிரவிலும் தூங்குவதில்லை. காரில் சேர்ந்தே செல்லுவோம்.
கொட்டும் பனியிலும் எம்.ஜி.ஆரை பார்க்க கிராம மக்கள் கூட்டமாக பெட்ரோமாக்ஸ் விளக்குகளுடன் குழந்தை குட்டிகளுடன் காத்திருப்பார்கள். காட்டுப்பகுதியிலும் அவர்கள் பாதுகாப்பின்றி நிற்பார்கள்.5 0 பேர் கொண்ட கூட்டமாக இருந்தாலும் காரை நிறுத்தி இறங்கி சென்று அவர்களிடம் பேசுவார்.
அவர் அசந்து விட்டால் தூக்கத்தை கெடுக்க விரும்பாமல் டிரைவர் காரை விரைவாக ஓட்டிச்சென்று விடுவார், ஜனங்கள் ஏமாற்றத்துடன் செல்வதை நாங்கள் இருவரும் குறித்து வைத்துக் கொள்வோம்.மறுநாள் மறக்காமல் அந்த செய்தியை எம்.ஜி.ஆரிடம் சொல்வோம். அன்றைய நிகழ்ச்சிகளில் அந்த ஊர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.
இத்தகைய பயணத்தில் இன்னொரு முக்கிய சம்பவமும் நடந்தது. எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வரும்போதெல்லாம் சென்னையில் இருந்து கார்க்கி என்கிற செய்தியாளரும் வருவார்.அவரும் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு சென்னைக்கு செய்திகள் அனுப்புவார்.
தலைவரின் தனிச்செய்தியாளர் என்பதாக சொல்வார்.
சுற்றுப்பயணம் தொடங்கியதும் சில இடங்களில் மட்டும் எங்களுடன் இறங்கி செய்திகளை கவர் செய்து விடுவார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் பேச்சில் பெரிய மாறுதல் இருக்காது.எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகவே பேச்சு இருக்கும் .
அவருக்கு அது வசதியாகி விட்டது. அவர் குடிக்க ஆரம்பித்து விடுவார்.
நாங்களோ ஏதாவது பாக்ஸ் மேட்டர்கள் சிக்காதா என்பதில் குறியாக இருப்போம். பத்திரிகைகளில் பாக்ஸ் மேட்டர்களில்தான்சுவை அதிகம்.
நானும் தினமலர் நிருபரும் அவரால் நட்ட நடுசியில் நடுக்காட்டில் முகவை மாவட்டத்தில் இறக்கி விடப்பட்ட சோகமும் ஒரு தடவை நடந்தது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கூட்டத்தை முடித்து விட்டு எம்.ஜி.ஆர் .குழுவினர் பழநிக்கு புறப்பட்டு விட்டார்கள். எங்களை ஏற்றிக் கொள்ளாமலேயே காரை கார்க்கி கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.
திக்கற்ற அநாதைகளைப் போல நிற்கிறோம்!
என்ன நடந்தது?
“ஜேப்பியாரை கூப்பிடு!” என எம்.ஜி.ஆர். கோபமுடன் சொல்வது போன்று எங்கள் காதுகளில் கேட்டது.
நாளை மறுநாள் பார்க்கலாம்.
—தேவிமணி