“நாடு காப்பதற்கே-உனக்கு ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா-அடிமை வேலை செய்யப்போடா!”
ஞானக்கிறுக்கன் பாரதி பாடி வைத்தது!
வழக்கம்போல குடியரசு நாள் அரசினரால் ,அமைச்சர்களால் கொடியேற்றி வைக்கப்பட்டு கொண்டாடி முடிக்கப் பட்டுவிட்டது.மக்கள் மத்தியில் அதைப்பற்றிய மகிழ்ச்சி எதுவுமில்லாமல்!
விலைவாசி ஏற்றம்,லஞ்சத்தாலும் ஊழலாலும் தாக்குண்டு நலிந்து கிடக்கும் அவனால் ‘வந்தேமாதரம்’ சொல்லக்கூட வாய் வரவில்லை!
உடைந்து போய்க்கிடக்கும் அவனுக்கு ஆறுதலாக “அரசியலுக்கு வருவதாகச்” சொன்னவர்களில் உலகநாயகன் களமிறங்கி கதாயுதம் ஏந்தி விட்டார்.
சூப்பர் ஸ்டாரோ கல்லாப்பெட்டி வரவு கனவு கணக்கில் வரவுக்கு வழி வகுக்கும் கதையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
கட்சிக்கு என்ன பெயராக இருக்கும் என்பதை யூகிக்கும் நிலையில் அரசியல் ஆர்வலர்களும் இல்லை.
ரஜினிக்கென இருக்கும் ஆளுமை,விழலுக்கு இறைக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழாமல் இல்லை.
“இதுவே தனது கடைசிப்படம் “என அறிவித்து நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கிடைக்கும் ‘கேப்’பில் ஆதரவு தேடி வருகிறார் கமல்ஹாசன்.
திமுகழகம் தனது வலிமையை அதிகரிப்பதற்கு அந்த காலத்தில் பேருதவியாக இருந்தவர்கள் கல்லூரி மாணவர்களும் கல்லூரிகளும்தான்! அற்புதமான பேச்சாளர்கள் இருந்தார்கள். அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்கு வண்டி கட்டி வந்த காலமும் இருந்தது.
இன்று அதே வழியை பின்பற்றுகிறார் கமல்.
ஒவ்வொரு கல்லூரியாக சென்று பேசுகிறார்.
அண்மையில் வாக்காளர் நாள் கொண்டாடப்பட்டபோது ஒரு கல்லூரியில் பேசுகையில் “ஓட்டுகள்தான் உங்கள் முதலீடு ,சின்னத்தைப் பார்த்து வாக்குப் போடாதீர்கள்!எந்த கட்சி மக்களுக்காக உழைக்குமோ அந்த கட்சியை தெரிந்து கொண்டு ஓட்டுப்போடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது ஒரு மாணவி “உங்களை முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறோம்” என்றார்.
அதற்கு பதில் அளித்த கமல் “நான் என்னவாக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ ,அதற்கு நான் தயார்! உங்கள் முதல்வரை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்!” என்றார்.
அது நடக்குமோ நடக்காதோ, சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டுமே!