பிரபல இயக்குனர் வீ சேகர், சிலை திருட்டு வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்திரையுலகை பேரதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், அவர் மீதுள்ள கிளீன் இமேஜ்தான். இதையடுத்து இன்று இரவு ஓன்று கூடிய திரையுலக அமைப்புகள் காவல் துறைக்கு ஒரு கோரிக்கையை வைத்துஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
மதிப்புமிகு தமிழக காவல் துறைக்கு அன்பான வேண்டுகோள்.
தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர், திரு.ஏ.சேகர் ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு சொன்னவர். அதன் மூலம் மக்களின் நன் மதிப்பை பெற்றவர். இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீர் என்று சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது. இதை கேட்டவர்களும் படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளது. மேலும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன் அவர்களும், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி அவர்களும் புழல் சிறைக்கு சென்று திரு.வீ.சேகர் அவர்களை சந்தித்தபோது இந்த குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.
மேலும், தான் எந்த ஒப்புதலும், எழுத்து மூலமாகவும் வாக்குமூலமாகவும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தயவு செய்து உண்மையை கண்டுபிடித்திட தமிழ் திரைப்படத்துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லாண்டு காவல் துறைக்கு இணையான நமது மதிப்புமிகு தமிழக காவல் துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்த்திரையுலகம்