“தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு”!
ஒரு காலத்தில் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களுக்கு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அளிக்கப்பட்டிருந்த சலுகை. இதனால் தமிழை வளர்த்து விடமுடியுமா என சிலர் கேட்டார்கள்.
முடியாதுதான்!
ஆனால் கெடுத்துவிடாமல் தவிர்ப்பதற்கு அதுவும் ஒரு வழி!
வளர்வதற்கு வழி இல்லை என்கிறபோது அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதனால்தான் அந்த சலுகை வழங்கப்பட்டிருந்தது என்பதை கெட்டுப்போகும் போதுதானே உணர முடிகிறது.
இன்று தலைப்புகள் வைப்பதற்கு எத்தகைய கட்டுப்பாடும் இல்லையோ என்னவோ?
“ஒரு மயிரும் இல்லை” “அப்பா காண்டம்” என்பதெல்லாம் படத்தின் தலைப்புகள்.
படங்களில் வசனமாக வந்தவைகளைத்தான் தற்போது தலைப்புகளாக வைக்கிறார்கள் இதில் தவறேதும் இல்லை என சிலர் வாதிடலாம்.
வசனம் காட்சிகளில் கடந்து விடக்கூடியவைகள்.
மக்கள் கவனித்திருக்கலாம்,அல்லது திட்டிவிட்டு மறந்திருக்கலாம்.
ஆனால் தலைப்பாக வருகிறபோது?
அன்றாடம் விளம்பரங்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறுகிறபோது அந்த தலைப்பின் முக்கியத்துவம் குழந்தைகளின் மனது வரை போகிறதல்லவா?
ஐந்து வயது குழந்தை ஒரு மயிரும் வேணாம் என்று உங்களிடம் சொல்கிறபோது “அடடா குழந்தை என்னமா பேசறான்,அல்லது பேசுகிறாள் என்று பெருமை பட்டுக் கொள்வீர்களா?
“,அப்பா காண்டம் வெச்சுருக்கார்மா “என்று சொல்கிறபோது அம்மா புளகாங்கிதம் கொள்வாளா?
ஒன்று மில்லை இன்னிக்கி வாட்ஸ் அப்பில் ஒரு படம். துணை முதல்வரின் பெயரை தப்பாக எழுதி இருந்ததை வாட்ஸ் அப்பில் பார்த்தோம் .
அது எந்த அளவுக்கு பாதிக்கும் ?எதிர்க்கட்சிகளின் வாய்க்கு தீனி? ஆனால் மொழிக்கு இழிவு!
அதைப் போலத்தான் திரைப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதும். இப்படிப்பட்ட ஆபாச தலைப்புகளை அனுமதிக்கிற சங்கங்கள் இருந்தால் என்ன ,இல்லாமல் ஒழிந்தால் என்ன?