தலைவரைப் பார்ப்பதற்காக அவ்வளவு நேரமாக காத்திருந்த கிராம மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அடர்பனி. நாங்கள் தலைவருடன் வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த மக்களுக்குத் தெரியும்.
“காரை விட்டுட்டிங்களா தம்பி! இப்ப எந்தூருக்குப் போவனும்?”
சற்று வயதானவர் கேட்டது ஆறுதலாக இருந்தது.
“பழனிக்குப் போகணும்.தலைவர் அங்கதான் போயிட்டிருக்கார்!” என்று அவருக்குப் பதில் சொன்னார் தினமலர் நிருபர் ரமேஷ்.
“இந்நேரத்துக்கு இங்கிட்டு பஸ் எதுவும் வராது தம்பி.வில்லிப்புத்தூருக்குப் போனாதான் ஏதாவது பஸ்ஸ பிடிக்கலாம்.இந்த கரட்டு ரோட்டுல காரோ,லாரியோ அடிக்கடி வராது. பாவம் ராவு முச்சூடும் இங்ஙனவேயா நிக்கப்போறீங்க?”
“வேற வழி…? ஏதாவது கார் கீர் வராமயா போவும்.”என்றேன் நான்.
ஆறுதலாக பேசிய அந்த கிராமத்து ஆளும் கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் அந்த இருட்டில் ரோடு ஓரமாகவே மெதுவாக நடந்தோம்.
அந்த காலத்தில் இப்போது மாதிரி செல்போன் வசதி இல்லை. பெரிய ஊர்களில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்களில் இருந்து ட்ரங்கால் பேச முடியும்.அதற்கான கார்டுகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அந்த இருட்டில் எந்த ஊர்,எங்கே இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாதே!
கிராமத்து மக்கள் சொன்னதைப் போல ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் எங்களின் நம்பிக்கையாக இருந்தது.
இதைத்தான் கடவுளின் அருள் என்பார்களோ என்னவோ ,அந்த கரட்டுச்சாலையில் ஒரு கார் வருவது தெரிந்தது.
முகப்பு ஒளியை வைத்து அது கார்தான் என்பதை யூகம் செய்தோம்.அது சரியாகவே இருந்தது.
கையைக்காட்டி காரை நிறுத்தினோம்.!
முகவை மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகனின் உதவியாளர் காருக்குள் இருந்தார். நடந்ததை சொல்லிவிட்டு இருவரும் காருக்குள் புகுந்தோம்.
அந்த காலத்தில் அதிமுகவினர் மத்தியில் தினமலருக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது.கட்சி பத்திரிக்கை என்பதாகவே நினைத்தார்கள்.
எம்.ஜி.ஆர்.மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க இருந்ததால் இவர்கள் அன்று தங்கள் மாவட்டத்துடன் நின்று விட்டார்கள்.இருந்தாலும் காளிமுத்துவை பார்ப்பதற்காக பழநிக்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்கள்.
அதுதான் எங்களின் அதிர்ஷ்டமாக அன்றிரவு அமைந்திருக்கிறது.
காளிமுத்துவும் அன்பழகனும் நெருங்கிய நண்பர்கள். அன்பழகன் எம்.பி ஆவதற்கு காளிமுத்துதான் காரணம்.
பழநியில் எங்களைப் பார்த்ததும் பாலகுருவா ரெட்டியார் ரொம்பவே பதறிவிட்டார்.
அவருக்கு நாங்கள் மிஸ்ஸிங் என்பது முன்னதாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் காரணம் தெரியாது.
“தலைவர் உங்களைக்கேட்டார்”என்று மட்டுமே சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர்.இருந்த அறைக்கு எங்கள் இருவரையும் அழைத்து சென்றார்.
தலைவர் வழக்கம் போல இதழ் விரித்து சிரிக்காமல் புன்னகைத்தபடியே என்ன ஆச்சு என்பதை ஜாடையில் கேட்டார்.
இருவரும் நடந்ததை அப்படியே சொன்னோம்.”கார்க்கிதான் காரணம்!”என முத்தாய்ப்பாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினோம்.
“என்னங்கடா மாப்ளைகளா, கார்க்கிக்கு வேட்டு வச்சிட்டிங்களா?”என்று ஜேப்பியார் கேட்ட பிறகுதான் முன்னதாகவே மற்ற பத்திரிகையாளர்கள் தலைவரிடம் நடந்ததை சொல்லி விட்டார்கள் என்பது தெரிந்தது.அதில் மக்கள் குரலின் மதுரை நிருபர் சண்முகத்துக்கு முக்கிய பங்கு இருந்தது.
அடுத்த முறை மதுரை ராமநாதபுர மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு தலைவருடன் கார்க்கி வரவில்லை.பத்திரிக்கை பணியிலேயேஅவர் இல்லை என்பதாக சொன்னார்கள்.
தலைவர் எம்.ஜி.ஆருடன் பழகுவதற்கு முன்னரே எனக்கு அண்ணன் சிவாஜி கணேசனுடன் பழக்கம் இருந்தது.
தமிழ்நாடு நாளிதழில் செய்தியாளனாக பேட்டி எடுத்தபோது தொடர்ந்த பழக்கம் பின்னாட்களில் மாலைமுரசில் நான் சேர்ந்ததும் நெருக்கமாகிவிட்டது.
அப்போது தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக இருந்த சின்னசாமிஅண்ணனுக்கு நடிகர் திலகம் குடும்பத்துடன் மிக,மிக நெருக்கம்.
சிவாஜி வருகிற செய்தி முதலில் இவருக்குத்தான் தெரிவிக்கப்படும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜேப்பியாரோ அதைப் போல நடிகர் திலகம் எங்கு சென்றாலும் அவருடன் குருமூர்த்தி என்பவரும் சேர்ந்தே வருவார்.
இவரது அனுமதி இல்லாமல் மன்றத்தினர் சிவாஜியை பார்க்க முடியாது.
ரசிகர்களைப் பொருத்தவரை அவர் நந்தியாகவே இருந்தார்.முறுக்கு மீசையுடன் ஆள் ஓங்கு தாங்காக இருப்பார். மிரட்டலான தோற்றம்.சிவாஜியை பாதுகாப்பாக மேடைகளுக்கு அழைத்துச்செல்வது அவரது வேலை.
பின்னாட்களில் ரசிகர்களுக்கு அவர் வேண்டப்படாத ஆளாக மாறிவிட்டார்.
சிவாஜியிடம் அவரைப்பற்றி புகார்கள் சொல்லத் தொடங்கி விட்டனர். குருமூர்த்தியுடன் வாக்குவாதம் ,சண்டை என மன்றத்தினர் இறங்கவே வேறு வழியின்றி அவர் பின்னாட்களில் சிவாஜியுடன் வருவதில்லை.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு கட்சியின் வளர்ச்சியில் சிவாஜி கணேசன் முக்கிய கவனம் செலுத்த தொடங்கினார்.குறிப்பாக அவரது கவனம் இராமநாதபுரம் மாவட்டத்தின் மீது சென்றது.
கடும் வரட்சியில் அந்த மாவட்டம் பாதிக்கப்பட்டபோது நிவாரணப் பணிகளில் மன்றத்தினரை ஈடுபடுத்தினார். கிணறுகளை ஆழப்படுத்துதல் ,கண்மாய்களில் கரைகளை உயர்த்தல் ,இப்படி பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டன. அவரே பல ஊர்களுக்கு சென்று கட்சிக்கொடிகளை ஏற்றி வைத்தார்.
சில ஊர்களில் கட்சிக் கொடிகளை ஏற்றக்கூடாது என சிலர் பிரச்னை பண்ணினார்கள். குறிப்பாக முதுகுளத்தூர்,கடலாடியில் சில கிராமங்கள் ….
“ஏப்பு…கொடிய ஏத்தக்கூடாதுன்னு பிரச்னை பண்றாய்ங்கன்னு சொல்றாய்ங்களே…நீங்க இருந்துமா இப்படி ?நானே வர்றனப்பு..என்ன நடக்குதுன்னு பாத்துருவோம்!”
காங்கிரசில் சிவாஜிக்கு எதிராக ஒரு கோஷ்டி இருந்தது.
அவர்கள்தான் சிவாஜி கொடி ஏற்றக்கூடாது என்று பிரச்னை செய்கிறார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்று இந்த நிலை இருந்தது.
அன்றைய ஆர்.எஸ்.மங்கலத்தின் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர் எஸ்.ராமகிருஷ்ணத் தேவர். அவரிடம்தான் சிவாஜி இப்படி பேசிக்கொண்டிருந்தார்.
“நம்ம பயலுகதானப்பு மொரண்டு பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.கொணம் கெட்ட பயலுக. நேர்ல போனம்னா எல்லாம் சரியாயிரும்.நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கிறேன்!”என்றார் ராமகிருஷ்ணத் தேவர்.
என்ன நடந்தது?
நாளை மறுநாள் பார்க்கலாம்.