“ராமன் காட்டில் தவம் இருந்தது 13 வருஷம் 2 மாதம், சீதையைத் தேடியது வெறும் 10 மாதம்தான் .ஆனால் பதினாலு வருஷம் வனவாசம் போனதாக சொல்கிறார்கள்”என்பது மரபின் மைந்தன் முத்தையாவின் வாதம். நம்ம இயக்குநர் ராஜீவ்மேனன் தமிழ்ச்சினிமாவை விட்டு வனவாசம் போனது பதினெட்டு ஆண்டுகள்.!
திரும்பி வந்திருக்கிறார் மிருதங்க வாத்தியத்துடன்.!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கர்நாடக இசையை மையமாக வைத்து சிந்து பைரவி என்கிற காவியத்தைக் கொடுத்தார்.கதையின் மையப்புள்ளி சிவகுமார். இசையை கட்டி ஆண்டது இளையராஜாவும் வைரமுத்துவும்!
கிட்டத்தட்ட அதே பேட்டர்னில் நெடுமுடி வேணு என்கிற நடிகர் திலகத்தையும் ஜி.வி.பிரகாஷ் என்கிற வெறி கொண்ட இளைஞனையும் வைத்து ஒரு அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார் மேனன். காதுக்கினிய கர்நாடக இசை ஏஆர்ரகுமானின் கொடை! முழுமையாக பாடலைக் கேட்கமுடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன்தான் வெளியில் வருகிறோம்.
ஜி.வி.பிரகாஷ் வெறி கொண்ட தளபதி ரசிகன். கட்வுட்,பாலாபிசேகம் என்கிற ரசிக மன்ற இலக்கணத்துடன் வாழ்கிற பீட்டர் ஜான்சன்.ரசிகர்கள் எத்தகைய இலக்கணமுடன்இருக்கிறார்கள் என்பதை வெகு இயல்பாக குடி,கூத்துடன் காட்டியிருக்கிறார்கள்.ரத்த தானம் செய்வதும் தளபதி ரசிகர் மன்றம்தான் என்பது கதையுடன் வருகிறது.
அப்பாவாக குமரவேல். மிகச்சிறந்த நடிகர். எஸ்.வி.சுப்பையா ரேஞ்சுக்கு சொல்லலாம். திறமையான இயக்குநர்கள் மட்டுமே இந்த சுரங்கத்தைப் பயன்படுத்த இயலும்.
மாட்டுத்தோலில் மிருதங்கம் செய்யக் கூடியவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகத்தான் இருப்பார்களோ! கிராமங்களில் இன்னும் டீக்கடைகளில் வாழ்கிறது என்பதை நாசூக்காக சுட்டியிருப்பார் இயக்குநர்.
பாலக்காடு வேம்பு அய்யர் என்கிற பிரபல மிருதங்க வித்வானுடன் வீட்டோடு இருக்கிற சீடன் மணிக்கும் ,தாள அறிவில்லாத பீட்டர் ஜான்சனுக்கும் இடையேயான மோதல்தான் கதையின் மையம்.
குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் மிக உயரம் சென்றிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தானும் மிருதங்க மேதையாக வேண்டும் என்கிற இலட்சிய வெறி கொண்ட தளபதி ரசிகன். ஒரு கட்டத்தில் ரசிகன் என்பது மாறி விடுகிறது. அது இயல்புதானே! ஜி.வி.பி.யின் கிராப் உயர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்!
நெடுமுடி வேணுவுக்கு கிட்டத்தட்ட சிவாஜி மாதிரியான ஒப்பனை.மிடுக்கான மீசை,வித்வ திமிர்.இந்த கேரக்டருக்கு வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சிகளில் வருகிற இசைப் போட்டிகளையும்,அதன் நோக்கங்களையும் காலணியால் அடிக்காத குறைதான்! “சர்க்கஸ் ஷோதானே! குதிரைப்பந்தயம் மாதிரி அவன் நம்பர் ஒன்,அவன் நம்பர் டூ ன்னு குதிரைப் பந்தயம்தானே “என்கிற வேம்பு அய்யர் சொல்வது சத்தியமான வார்த்தை. வேணுவுக்கு இணை அவரேதான்!
டிடி மாதிரியான டி.வி.ப்ரோக்ராம் டி.ஆர்.பி .ரேட் கில்லாடிகளையும் தோல் உரித்திருக்கிறார்கள். டிடியின் கவர்ச்சி முகத்தில் முன்னைப்போல் இல்லை.
வினீத் இன்னொரு ஆச்சரியம்.உருவத்தில் நல்ல ஊட்டம்.!
கைதட்டி ரசிக்கும் அளவுக்கு வசனங்கள் ஆங்காங்கே! காதல் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்காதே என்பதற்காக சாரா கேரக்டர்.ஜி.வி.பி.யும் அபர்ணாவும் ஆனந்தமாக இருப்பதுசிருங்கார ரசனை!
நல்ல படம்.!