வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது ,
,அதன் ஸ்பரிசம், இன்பம்,துன்பம்,இப்படி எல்லாமே துயரங்களை கடக்காமல் கிடைத்து விடுகிறதா?
மூளை முடக்குவாத நோய். உடலை முறுக்கி முகத்தை கோணலாக்கி பேச்சை இழந்து விட்ட மகள். அம்மா ஓடி விட்டாள்.அறியா பருவத்து மகளுக்கு அப்பனே தாயுமானவனாகி எல்லாமே செய்கிறான். ச்சே என்னடா வாழ்க்கை என நமக்கு சலிப்புத்தட்டினாலும் மம்மூட்டிக்கு ஏன் அலுக்கவில்லை! மகளின் 3 நாள் மாதவிலக்குக்கு கூட அவர்தானே பேட் அணிவிக்க வேண்டியதாக இருக்கிறது. அவள் அதன் நிலை புரிகிற வரை! அன்பின் ஆழத்தில் அவர் ! மகளின் மீது அப்படி ஒரு பக்தி என்றே இந்த விமர்சகனால் சொல்ல முடிகிறது.
அக்கம் பக்கத்து குடித்தனக்காரர்களுக்கு அவரவர் நலனே பெரிது,
“நாங்க சொந்த வீட்டுக்காரங்க ..நீ வாடகை வீட்டுக்காரன்.நாங்க சொல்றதைத்தான் நீ கேட்கணும்.காலி பண்ணிட்டுப் போ”
இந்த ஆணவக்குரல் மம்மூட்டியை விரட்டுகிறது மகளுடன் சேர்த்து!
இந்த மனிதர்களே இல்லாத மூடுபனி காட்டுக்குள் அடைக்கலமாகிறது அந்த இருவர் அடங்கிய குடும்பம்!
அங்கும் நிம்மதியாக வாழ முடிந்ததா? இப்படியே போகிற அந்த குடும்பத்துக்கு பேரன்பு எப்படி சாத்தியமாகிறது? நமது உடலின் குருதியோட்டத்தில் அந்த குடும்பத்தின் வலிகளும் சின்ன சின்ன ஆறுதல்களும் எப்படி கலக்கிறது? இயக்குநர் ராம் நம்மை நெடிய பயணத்துக்கு அழைத்துச்சென்றிருந்தாலும் பேரன்பு என்பது இதுதான் என்பதை கிளைமாக்சில் புரிந்துகொள்கிறோம்.
“அன்னையின் கையில் ஆடுவதின்பம்,கன்னியின் கையில் சாய்வதுமின்பம்,தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்,தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்” என்று பேரின்பத்துக்கு இலக்கணம் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்.
இங்கே எவைகளை இழந்து பேரன்பு பெற முடிகிறது?
இயக்குநர் ராமின் கற்பனை நம்மைப் புரட்டிப்போட்ட வணக்கத்திற்குரியது. சிற்றின்பம் அல்ல வாழ்க்கை என்பதற்கு அஞ்சலியின் காட்சி போதும். அதையும் கடந்ததுதானே பேரன்பு!?
செத்த பின்னர் கிடைப்பதல்ல.வாழ்ந்து காட்டு என்பதைத்தானே அந்த கிளைமாக்ஸ் காட்சியில் திருநங்கை உணர்த்துகிறாள்?
அதுவும் ஒரு வாழ்க்கைதான் என்பதை என்பதை அடித்து சொல்லி இருக்கிறார்கள். அதுவும் குடும்பம்தான் என்பதை “என் மனைவி “என மம்மூட்டியின் அழுத்தமான சொல் உணர்த்துகிறது.
கனத்த நெஞ்சுடன் கதையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்கிறோம். முடக்குவாதமூளை நோயின் வலியை வாழ்ந்து காட்டியிருக்கிறாள் தங்க மீன்கள் சாதனா.
அந்த பெண்ணைப்போல விரல்களை மடக்க முயன்றேன்.நரம்புகள் அழுதன.!
அந்த வேதனையுடன் சாதனா உணர்த்தும்அவளது சின்ன சின்ன சந்தோஷங்கள், பார்பி பொம்மையின் மார்பகங்களுக்கு நெயில் பாலிசை தடவி அதன் நிர்வாணத்தை மறைக்க நினைப்பது,அஞ்சலியின் அரவணைப்பில் சில நாள் அனுபவம்.! ஹாட்ஸ் ஆப் சாதனா.
மம்மூட்டிக்கு இந்தப்படம் தேசிய விருதுகளை விஞ்சிய பெருமையைத் தரக்கூடியது.
மகளுக்கு மணமகன் கிடைக்க மாட்டான்.ஆனால் அவளது உணர்வுகள் அவளுடனேயே ஊமையாகவே அழிந்து விடக்கூடியதா? அதற்காக அவர் தேடிச்சென்ற இடமும் வாங்கிய அறையும் ஒரு தந்தை வாங்கிய தங்கப்பதக்கம் என்று சொல்வேன்.
இதற்கெல்லாம் மரணம் தான் வழியா?
படத்தைப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்!
படமாக்கப்பட்டுள்ள கொடைக்கானல் லொக்கேஷன் இன்னும் கற்பழிக்கப்படாமல் காக்கபட்டுள்ள கன்னி நிலம்.
“இன்டீரியர் பாரஸ்டுக்குள் கூட்டிட்டு வந்து கொல்லப்பார்த்தியா?” என தயாரிப்பாளர் தேனப்பனை மம்மூட்டி செல்லமாக கடிந்து கொண்டாராம்.
படத்திற்கு மூலவர்களாக மம்மூட்டி,சாதனா என்றால் உற்சவர்களாக ஒளிப்பதிவாளர் ,இசை அமைப்பாளர் இருவரும்!
“நிலவின் மொழியா நீ,நிலத்தின் மொழியா நீ ,பேசப்பேச பூக்கள் பேசுதே”பாடல் வரிகள் யுவனின் மெட்டின் வழியாக மேனியில் பூச்சொரிகின்றன.
அற்புதமான படம். வாராது போல வந்த மாமணி!