பாரதிராஜா கம்பீரமான மனிதர்.
இன,மான உணர்வு உள்ளவர்,அதை ஒருபோதும் தனது உயர்வுக்குப் படிக்கட்டுகளாக பயன்படுத்தியதில்லை.
தமிழன் என்கிற செருக்கு உண்டு. அது இயல்பானது.மேடைகளில் அவரையும் மீறி வெளிப்பட்டு விடும்.
பத்ம விருது வந்து விட்டதாலேயே அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்கிற மாய மானின் பின்னால் அலைகிறவர் இல்லை!
ஈழத்தமிழனுக்கு இன்னல் என்றபோது எல்லோருக்குமே ரத்த நாளங்களில் பூகம்பம் குடி கொண்டது.
“கொண்டு வா ,பத்ம ஸ்ரீ விருதினை! மேடையிலேயே தீ நாக்குகள் தின்னட்டும்”என்று குமுறிய பாரதிராஜாவை அமைதிப்படுத்தியவர் இயக்குநர் சேரன்.
அதை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பினார்கள். இவை வரலாறு.
அந்த போராளி இந்த எளிய செய்தியாளனிலும் இளையவர்.
அவரை பீட மேற்றி சாமியாட வைக்கப் பார்க்கிறார்கள் சிலர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடக்கவிருக்கிற தேர்தலில் அவரை தலைவர் பதவிக்கு நிறுத்த திருச்சி தியேட்டர் ஸ்ரீதர் போன்றவர்கள் விரும்புகிறார்கள்.
களம் நடத்திச் செல்லும் தளகர்த்தனை ஒரு கூண்டுக்குள் அடைக்கும் முயற்சியாகத் தெரியவில்லையா?
இன்று அவரை ஆதரிப்பார்கள்.
நாளை அவர்களுக்கே ஒரு சிக்கல் வருகிறபோது நேர்மையாக செயல்படவிடாமல் முரண்படுவார்கள். எனது 45 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.அதை தகர்த்தெறியும் தோள் வலிமை அவர்க்கு உண்டு.
எதற்கு அதில் ஆற்றலை செலவிட வேண்டும்.?
அதைவிட தமிழன் அவரிடம் எதிர்பார்ப்பது அதிகம்.
இனம் சார்ந்து,மொழி சார்ந்து போராட அவரது சேவை தேவை.
அருமை மருமகன் தலைபோனாலும் பரவாயில்லை.ஆதிகாலத்து உரல் உடையக்கூடாது என்கிற மனப்பான்மை கொண்டவர்கள்தான் தங்களின் சுயம் மறைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
‘மிக மிக அவசரம்’படத்தின் முன்னோட்ட விழாவில் இந்த கரிசல் நிலத்துக் காவலன் பேசியது மிகவும் என்னை இம்சித்தது.
“நான் மறு பிறவி என்பதை நம்புகிறவன் அல்லன்.அப்படி ஒன்று கிடைக்குமேயானால் அமெரிக்க ஜனாதிபதியாகவோ,இந்தியப்பிரதமராகவோ எதுவானாலும் தேவையில்லை.
திரை உலகில்தான் இயக்குநராக பிறக்க வேண்டும்!சினிமா எனது ரத்தமுடன் ஊறிப்போனது.
கட் அவுட்களுக்கு பால் ஊற்றும் அடிமுட்டாள்த்தனம் உடைபட வேண்டும்.
முதலீடு பண்ணிவிட்டதால் 30 சதவீதம் ஒதுக்கீட் வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மையை அடித்து நொறுக்க வேண்டும்.
தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதை இன்னும் ஏன் கட்டி அழ வேண்டும்? தமிழ்நடிகர் சங்கம் என மாற்ற முடியாதா?” இப்படியெல்லாம் பேசிய ஒரு மனிதரை சிறிய வட்டத்தில் அடைத்து விடலாமா? முதலில் அவரை ஒரு மனதாக தேர்வு செய்யும் மனமாவது இருக்கிறதா? .
அன்புடன், தேவிமணி.