ரீமேக் ‘கிங்’கரர்கள் எல்லாம் சொந்த கற்பனைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற காலம் இது.!
இந்தியாவின் மொத்த பட்ஜெட்டையும் முழுங்கிவிடும் அளவுக்கு சொத்துக்காரர் நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் போயும் போயும் லாயர் பிரபுவை காதல் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா?
சென்னைக்கு சென்று செட்டில் ஆகிவிட்ட மகளை பார்க்கமாட்டேன் என வைராக்கியமாக இருந்தாலும் பாசம் என்பது வெட்டிக்கொண்டு விழ மறுக்கிறது.
அத்தையை மீட்டெடுத்து அழைத்து வருவேன் என தாத்தாவுக்கு வாக்கு கொடுத்து விட்டு ரத,கஜ,துத,பதாதிகளுடன் சென்னைக்குப் பந்தாவாக பறக்கிற எஸ்.டி.ஆர். என்னவாகிறார் என்பதுதான் கதை.
இந்த கதைக்கு அக்கட சீமைக்கு சுந்தர்.சி. பறந்திருக்க வேண்டுமா? லாஜிக் மீறல் என்பது அவரது பிறவிச் சொத்து என்றாலும் எத்தனை படங்கள் பாக்ஸ் ஆபீசில் பொட்டியை ரொப்பியிருக்கிறது!
இந்த படத்தில் மட்டும் சோதனை ஏன் தலைவா?
கதாநாயகனுக்கு கைத்தடிகள் அளவோடு இருந்த காலத்தில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர் சுந்தர்.சி.
யோகிபாபு,வி.டி.வி.கணேஷ்,மொட்ட ராஜேந்திரன், ரோபோ ஷங்கர்,விச்சு,என கலாட்டா கும்பல் இருந்தும் டெல்டா மாவட்டத்து விவசாயம் மாதிரி ஆகிப் போச்சே! யோகிபாபு மட்டும் விதிவிலக்கு!
எஸ்.டி.ஆர். நல்ல வெயிட் போட்டிருக்கிறார். “என்னை நம்பிக்கெட்டவன் யாருமில்ல .நம்பாமக் கெட்டவன் நிறைய இருக்கான்!” “சிங்கம் சிங்கிளா இருக்கேன்னு செல்பி எடுத்தா செல்பி இருக்கும்,நீ இருக்க மாட்டே” செல்வபாரதி வசனம்.
தன்னையே குத்திக்காட்டிக்கொள்ளும் வசனங்களை சிம்பு சொல்கிறபோது தியேட்டர் திணறுகிறது சிரிப்பு அலைகளினால்.!
ஆவடி ரெயில் நிலையத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் கொட்டும் ஏக்கம் ஏமாற்றம்,எதிர்பார்ப்பு,பாசம்,பந்தம் எல்லாம் கலந்த கலவையில் சிம்பு ராக்ஸ்!
விம்முவது ஆண்களின் நெஞ்சமே என்கிறபோது பெண்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? முந்தானையில் ஈரம்.!
கேத்தரின் தெரசா,மேகா ஆகாஷ். ஜஸ்ட் செட் பிராப்பர்ட்டி.
நட்புக்காக திணிக்கப்பட்ட மகத் கேரக்டரில் ஒன்றுமே இல்லை. லைகா நிறுவனம் செலவைப் பற்றிக் கவலைப்படவில்லை.
கோபி அமர்நாத்தின் கேமராவுக்குள் லொக்கேசன்கள் ஆயிரம் ஆச்சரியக்குறிகள். அற்புதம்யா! ஒளிப்பதிவை சொன்னோம்!