“இளையராஜாவை பாராட்டுவதற்கான போர்டிலிருந்து ஒரு மாதத்துக்கு முன்னதாகவே விலகிவிட்டேன்” என்றார் பார்த்தீபன்.
“சுயமா ,சோறா என்கிற சோதனையில் சுயம் வென்று விட்டது” என்று அவர் சொன்னபோது என் முன் கண்ணதாசனின் வரிகள் வந்து நின்றன.
“தீண்டக்கூடாத ஒன்றைத் தீண்டிவிட்ட பின்,கையைக் கழுவித் துடைத்துவிடவேண்டுமே தவிர,அடிக்கடி வாசனை பார்க்கக்கூடாது”
ஓ,,! இதுதான் பார்த்தீபனின் நிலை.!
நமது கேள்வி அவரை வாசனை பார்க்க வைத்து விடக்கூடாதே!
அவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையில் ஊடலா,முறிவா?
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பார்கள்.
சந்தேகம், சீசருக்கும் அப்பாற்பட்டது,!
கேள் என்றது மனது. கேட்டேன்!
“ஒரு டாக்சி டிரைவரை டிராபிக் போலீஸ்காரர் திட்டிவிட்டார் என்பதால் அவரின் சுயம் பாதிக்கப்பட்டு தண்டவாளத்தில் தலையை வைத்திருக்கிறார்..
இளையராஜா பாராட்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்னரே விலகி விட்டேன்..
எனது நோக்கம் இளையராஜாவை பாராட்டி நடக்கும் விழாவில் ரகுமானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே..
அதற்கான முனைப்பில் ஈடுபட்டேன். முகம் சுழிக்கும்படியான சில நிகழ்வுகள்.. அன்றே சுயம் பாதிக்கப்பட்டது.
தாங்கிக் கொண்டாலும் ரகுமான் ஸ்டேஜ் ஏறும் நிகழ்வு நடக்கபோகிறது.
யாரையும் மிரட்டி சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கில்லை!”
“தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும் விலகுவீர்களா பார்த்தீபன்?”
“பதவி விலகுவதற்கான சூழ்நிலை இருக்கிறது. இல்லையென சொல்லமாட்டேன்! உண்மையில் நான் அடிப்படையில் தயாரிப்பாளனே இல்லை. வெளியில் இருந்து கொண்டே சில நல்ல காரியங்களை செய்து கொண்டுதானிருக்கிறேன்.
15 படங்கள் எடுத்தேன்.யாருக்கும் பைசா காசு பாக்கி வைத்தது கிடையாது. வீட்டை விற்று கடன்களை அடைத்திருக்கிறேன்.இதனால் என்னை தயாரிப்பாளன் என்பதாக சொல்வதில்லை “என்றார் வேடிக்கையுடன்!
-தேவிமணி