ஆற்றல் அரசே! அறிஞர் பெருமகனே!
இன்று உங்களை நினைத்துப் பார்க்க மலர் வளையங்கள் ஏந்தி பலர் வருவார்கள்.
கள்ளமனம்.கள்ளப்பணம்.கொள்ளை அடித்த மக்களின் பணத்தில் குபேரனுக்கு வட்டிக்கு கொடுப்பவர்கள்.
சிலர்” இந்த அரசு அண்ணாவின் வழி நடந்த எம்.ஜி.ஆரின் தடம் பற்றி நடந்த தானைத் தலைவி,தங்கத் தலைவி .புரட்சித்தலைவி ,பொன்மனச்செல்வி அம்மாவின் அரசு”என சொல்லி மலர் வளையம் வைப்பார்கள்.
கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த அமரர் எம்.ஜி.ஆருக்கு இல்லாத மரியாதை எல்லாம் ஊழல் குற்றவாளி என உச்ச நீதிமன்றமே அடித்துச்சொன்ன பிறகும் அம்மாவுக்கு புகழ் பாடுகிறவர்கள்.நீங்கள் கூட அம்மாவின் மாணவர்தான் என சொல்லக்கூடியவர்கள் அந்த மாமேதைகள்.
அவர்கள் வைத்த மலர் வளையங்கள் மணமற்ற மலர்களால் தொடுக்கப்பட்டது.
இன்னும் சிலர் நாளைய ஆட்சி நமதே என நம்பிக்கையுடன் இருப்பவர்கள். இவர்களும் அரசியல் வணிகர்களே!
வாய்மை தவறியவர்களே.!
அவர்களும் அஞ்சலி செலுத்த வருகிறவர்கள்தான்!
கொலைகளையும் பாசமுடன் செய்யும் புதிய அரசியல் வாதிகளும் புன்னகை மாறாமல் வருவார்கள்,
இவர்கள் எல்லோருமே அரசியல் வணிகர்கள்தான்.
அண்ணா!
கடைசியாக சில வரிகள் .பாடப் பெற்றவரிகள். உங்கள் தம்பியே எழுதியது.
“காகித ஓடம்.கடலலை மீது போவது போல மூவரும் போவோம்!”
தீர்க்கதரிசனம் !
—தேவிமணி.