பிரசாத் படப்பிடிப்பு நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது.
திரை உலகில் சிக்கல். வேலை நிறுத்தம்.அதனால் பரபரப்பின்றி கிடந்தது.
இசைஞானி வழக்கம்போல வந்து விட்டார்.
கங்கை அமரன் எனக்காக காத்திருந்தார்.
உலகமே பூட்டுப் போட்டு கதவுகளை அடைத்துக் கொண்டு இருந்தாலும் தனது அறைக்கு வராமல் இருப்பதில்லை. இசைக்கு ஏது கதவடைப்பு.?
சேட்டுகள் திண்டு மெத்தை போட்டு உட்கார்ந்திருப்பார்களே ,அதைப்போல தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தை
அதில் ஆர்மோனிய பெட்டிக்கு முன்னதாக இளையராஜா உட்கார்ந்திருந்தார்.
பத்தி மணம் சந்தனமாக பரவியது.
“அண்ணே ,இவரு தேவிமணி. தேவி பத்திரிக்கை.மதுரைக்காரர்”
எனக்கு சொல்றியா? முந்தியே பார்த்திருக்கேன். எடக்கு மடக்காக கேட்பார்.அது தெரியுமா உனக்கு?”
குறுக்கிட்டேன்.
“அண்ணே.! மதுரை மேங்காட்டு பொட்டல், முனிச்சாலை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் இங்கிட்டேல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங் நடந்த காலத்தில பாவலர் பாட்டுக்காகவே வந்திருவேன்ணே! ‘ஒத்த ரூவா தாரேன் உப்புமா காப்பியும் தாரேன்.ரெட்ட காளை மாட்ட பாத்து ஓட்டை குத்து’ன்னு பாடுவார். மொத்தக்கூட்டமும் அந்த பாட்டுக்காகவே காத்திருக்கும்?”
அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரெட்டைக்காளை சின்னம்.
“நீங்க கம்யூனிஸ்ட்டா?”
“கட்சியெல்லாம் இல்ல. இந்த மாதிரி கட்சிக் கூட்டம் ,கலா நிகழ்ச்சின்னா கெளம்பிருவேன்.அப்ப காங்கிரஸ்ல அய்யம்பேட்டை டி.எம்.மாரிமுத்துன்னு ஒருத்தர் கலாநிகழ்ச்சி நடத்திட்டிருந்தார், ‘தி.க.தி.மு.க.தெருவெல்லாம் சிரிக்கிதக்கா’ன்னு பாடுவார்.அதுக்கும் கூட்டம் சேரும்.”
“சரி நமக்கு பழசெல்லாம் எதுக்கு? இப்ப என்ன பேட்டி வேணும்.அதானே..கேளுங்க?” என்று நேரடியாகவே வந்து விட்டார்.
அமர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
“அதர்மங்கள் எப்போதெல்லாம் தலை தூக்குதோ அப்பல்லாம் ஆண்டவன் அவதரிப்பான்னு சொல்வாங்க.இப்ப உலகத்தில அதர்மங்கள் தலை தூக்கவில்லையா? அதர்மங்கள்தானே ராஜ பரிபாலனம் செய்கின்றன.அதர்மங்களை அளவுகோல் வைத்து அளந்து பார்த்திட்டுதான் ஆண்டவன் அவதரிப்பானா?”
திராவிட கழகத்துக்காரன் கேட்பது மாதிரியான கேள்வி.
ராஜாவுக்கு கோபம் வரவில்லை. சிரித்துக்கொண்டே பதில் வந்தது.
“என் அனுபவத்த வெச்சு சொல்றேன்.எது நடந்து கொண்டு இருக்கிறதோ அது தர்மம்.கிருஷ்ணன் பிறந்த காலத்தில்தானே கம்சனும் இருந்தான்.ராமன் இருந்த காலத்தில தானே ராவணனும் இருந்தான்.
போர் குற்றம்னா அதாவது அதர்மம் என்றால் பாண்டவர்களும் துரியோதனாதிகளும் சண்டை போட்டுக்கொண்டதை விட கிருஷ்ணணனும் அதில் கலந்து கொண்டது அதிலும் ஒரு பக்கமாக நின்றது துரியோதனனுக்கு அதர்மம்.பாண்டவர்களுக்கு தர்மம்.ஆனால் மடிந்தவர்கள் மடிந்தவர்களே!
தர்மமும் அதர்மமும் அவரவர்களுக்கு ஏற்ற மாற்றம் அடைகிறது.ஒளியும் இருளும் எப்படி உலகத்தில இருக்கோ அதுவரை நல்லவை அல்லவை இருக்கும்.இன்பமும் துன்பமும் இருக்கும்.அதர்மம் இல்லாத காலமும் இல்லை.இயற்கையின் நிகழ்வுகளே தர்மம்”என்றார்.
“அதாவது இயற்கையின் தர்மங்கள்?”
தத்துவங்கள் சரளமாக வருகிறது ராஜாவிடம்!
“இயற்கையில் எது விதிக்கப்பட்டதோ அது நடக்கும் .அர்மேனியாவில் பூகம்பம். ஆயிரக்கணக்கில் மரணம்.சாதி கலவரம் நடக்கிறது எவ்வளவோ பேர் சாகிறார்கள்.இந்த துன்பமும் இகழ்வுகளும் இயற்கையின் விதிப்பு.எப்படியும் நடந்தே தீரும் அது இயற்கையின் தர்மம்.
அதர்மம் தலை தூக்கும்போது தான் ஆண்டவன் வருகிறான்,என்றால் இப்போது ‘அவன்’ இல்லை என்றாகிறது.
பிறப்பு உண்டு என்றால் இறப்பும் இருக்கிறது.
ஆக இறைவன் புதிதாக பிறந்தால் மறுபடியும் என்றோ இறக்க வேண்டியதாகிறது. ஆக எப்போதும் இருக்கிற ஒன்றை பிறப்பு இறப்பு இல்லாத பொருளை நம் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தபடி தர்மம் அதர்மம் கற்பித்து இறைவன் இல்லை என்பது அறிவீனமாகும்”என்றார் இசைஞானி.
இந்த பேட்டி 1989-ல் எடுத்தது.
தற்புகழ்ச்சி,கர்வம்,துறவி என்பதெல்லாம் என்ன? நாளை மறுநாள் பார்க்கலாம்.
-தேவிமணி