“இந்த ஆறு இப்படித்தான் ஓட வேண்டும் என்பது எப்படி விதியோ, சூரியனின் ஒளிக்கிரணங்கள் இத்தனை நாழிகையில் பூமியில் விழ வேண்டும் என்பது எப்படி விதிக்கப்பட்ட விதியோ ,அதுபோலத்தான் நேற்றைய இளையராஜா இருந்தான்,இன்றைய இளையராஜா இருக்கின்றான்.நாளைய இளையராஜா மாறுவான்” என்றார்.
எனது கேள்விக்கு அவர் சொன்னபதில்தான் இது.
நான் கேட்டது “வாரி விடப்பட்ட தலையுடன் , எடுப்பான பெல்பாட்டம் போட்டிருந்த இளையராஜா இன்று மாறுபட்ட நிலையில் மழித்த தலை,பருத்தி ஜிப்பா, வேட்டியுமாக இருக்க என்ன காரணம்?”என்பதுதான்!
அடுத்த கேள்வி: “உங்களை துறவி என்கிறார்களே?
“உலகில் பிறந்தவர்கள் எதைத் துறக்க முடியும்? பார்வையில் பொருட்கள் படுவதை,அதை அவர்களின் அறிவு கூறுவதை துறக்க முடியுமா?
காதில் ஒலிகள் விழுவதை அறியாமல் இருந்து கொள்ள முடியுமா ?
காட்டில் இருந்து கொண்டு வீட்டை நினைப்பது துறவல்ல.
உலகில் பிறந்தவர்கள் யாரும் எதையும் துறக்க முடியாது.எதெது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவித்தேயாக வேண்டும்.”என்றார்.
அவருடனான அன்றைய சந்திப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆன்மீகத்தில் அவர் பழுத்த ஞானியாகவே இருந்தார். அதனால்தானோ என்னவோ காரைக்குடியில் வைத்து கலைஞர் கருணாநிதி அவருக்கு “இசைஞானி”என்கிற சிறப்பு பட்டத்தை வழங்கி இருக்கிறார்.
இனி நீங்கள் படிக்கப்போவது முற்றிலும் மாறுபட்டது.
ஒரு பெண்ணின் வலி.!
காந்தர்வ மணம் செய்து கொண்டதற்காக அந்த பெண் அனுபவித்த தண்டனை.
பெரியவர்கள் கூடி நடத்திய கல்யாணத்தில் குரு எந்த பக்கம் பார்த்தானோ,ராகு எங்கே இருந்தானோ தெரியவில்லை.அந்த தம்பதிகள் வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
எத்தனை நாட்கள் முதுகை காட்டிக்கொண்டு படுக்கையில் கிடக்க முடியும்?
அப்படித்தான் ஆகி விட்டதோ என்னவோ…!
திருமதி சரிகாவின் அந்தக்கால நினைவுகளை படிக்கப்போகிறீர்கள்.!
“எங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு ஹைதராபாத்துக்கு இருக்கிறது.
கமல்ஜியை சந்தித்தேன்.
“இப்போது உண்டாகி இருக்கிறேன்” என்றேன்.
என்னை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டார் .”இந்த முறை எந்தவிதமான முட்டாள்த் தனத்தையும் செய்து விடாதே”
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
“இந்த குழந்தையை நானே வளர்க்கப்போகிறேன்.இந்த குழந்தையின் அப்பா யார் என்பதையும் சொல்ல மாட்டேன்.கற்பனை செய்து கொள்பவர்கள் செய்து கொள்ளட்டும்” என்று அவரைப் பார்த்தேன்.
“நீ ஒரு முட்டாள்!” என்ற கமல்ஜி “ஏன் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கிறாய். எனக்கே சொந்தமானதை ஏன் மறைக்க வேண்டும்?”
கமல்ஜியின் ஆசையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.
ஒரு பிள்ளை வேண்டும் என்ற அந்த மனிதரை ஏமாற்ற நான் விரும்பவில்லை.
அன்று இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தோம்.
வாணியிடம் இந்த பிள்ளை விவரத்தை சொல்லிவிடவேண்டும் என்று நான் விரும்பினேன்.
முதலில் வாணி இதை சீரியசாக நினைக்கவில்லை. பிறகு என்ன நினைத்தாரோ எனக்குத் தெரிந்த ஒருவரிடம் சென்று ‘சரிகா வயிற்றில் வளருவது உங்களுக்கு பிறக்கப்போகிற குழந்தை என்பதாக சொல்லுங்கள்’ என்று வற்புறுத்தி இருக்கிறார்.
பம்பாயில் செக் அப் செய்து கொள்வதற்காக டாக்டர் சோனாவாலாவிடம் சென்றேன்.அது மூன்றாவது மாதம்.ஏற்கனவே இரண்டு தடவை செக் அப் செய்து உண்டாகி இருக்கிறேன் என்பதை கன்பர்ம் செய்து கொண்ட பிறகு நடக்க இருந்த செக் அப்.
“இந்த குழந்தை உனக்கு தேவைதானா?”
டாக்டர் திடீரென இப்படி கேட்டதும் எனக்கு கடுமையான அதிர்ச்சி. இப்போது ஏன் இப்படி கேட்கிறார் என்கிற ஆச்சரியம்.ஏன் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை.
வாணியும் அவருடைய பெற்றோரும் அவரை பார்த்து பேசிய விவரத்தை பிறகு தான் சொன்னார் .
“இந்த பிள்ளையை அவர்கள் விரும்பவில்லை!ஆகவே கலைத்து விடு” என்று டாக்டர் கூறியதும் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“ஒரு டாக்டர் நீங்க எப்படி இதை சொல்லலாம்?மூன்று மாதம் ஆகி விட்ட நிலையில் இப்படி சொல்ல உங்கள் எதிக்ஸ் எப்படி இடம் கொடுத்தது?”என்று கத்தினேன்.
அவரோ “கவலைப்படாதே!சுலபமாக கலைத்து விடுகிறேன்.இந்த குழந்தை வேண்டாம். கமலிடமும் சொல்கிறேன் “என்று என்னை அமைதிப்படுத்தப்பார்த்தார்.
நான் அந்த டாக்டர் என்ன சொன்னாரோ ,அதை அப்படியே கமல்ஜியிடம் சொல்லி விட்டேன்..அவருக்கு கடுங்கோபம்.சத்தம் போட்டார்.
“அந்த டாக்டர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிடாதே !தூக்கி எறிந்து விடு.”
வாணி குடும்பத்தாரிடம் கேட்டபோது அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று ஒரேயடியாக சாதித்து விட்டார்கள்.
பிறகென்ன நடந்தது?
சரிகாவை தீர்த்துக் கட்ட நடந்த முயற்சி!
நாளை மறுநாள்!
–தேவிமணி.