சந்தானம் காலி என்று கணித்த சாலையோரத்து ஜோதிடர்களுக்கு சரியான சவுக்கடி.
மூத்திரச்சந்தில் விட்டு முட்டியை பெயர்த்திருக்கிறார் கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிற ராம் பாலா.
ஒரு காலத்தில் இந்த லொள்ளுக் கூட்டணி ஓகோவென்று ராஜாங்கம் நடத்தியது.காலம் செய்த கோலமடா கர்ப்பம் கலைஞ்சு போனதடா என்று டைவர்ஸ் வாங்கிய தம்பதி போல பிரிந்தனர்.
பிரிந்தவர்களை தில்லுக்குத் துட்டு சேர்த்து வைத்திருக்கிறது.
ஆட்டோ டிரைவராக சந்தானம். அவருக்கு அல்லக்கையாக மொட்ட ராஜேந்திரன்.
அப்பப்ப சிம்பு வாய்ஸ் மாதிரி அலம்பல் பண்ற சந்தானத்துக்கு ஸ்ரிதா மீது லவ்.யாராவது ஸ்ரிதாவை பார்த்து ‘ஐ லவ் யூ ‘சொன்னால் அவனுக்கு ஆயுள் அதோ கதி.
சிலர் சிவபதவி அடைந்தது போல சந்தானத்துக்கும் சிவபதவி கிடைத்ததா, அதிலிருந்து எப்படி தப்புகிறார் ,என்பதை சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார்கள்.
பல சிலாப்ஸ்டிக் .சில அகஸ்மாத்தாக அமைந்த ரகம்.
ஆபாசம் இருக்கும் ஆனா இருக்காது என்கிற ரகம்.
உ.ம்; ஆஸ்பத்திரியில் நர்ஸ் “இங்க யாராவது அவுட் பேஷன்ட் இருக்கிங்களா” என்று கேட்ட படியே வருகிறவர் மொட்ட ராஜேந்திரனைப் பார்த்து “நீ O.P.யா?” என்றுசட்டென கேட்க,மொட்ட யோசித்தபடியே மெதுவாக தலையாட்டினால்….ஐயா ஆண் பெண் அத்தனையும் கலகலத்துப் போகிறது.
தியேட்டர் சுவரில் ஏகப்பட்ட விரிசல்கள் சுவாமி! சிரிப்பு இடிகள்.!
இப்படி சாக்லேட் விளம்பரங்கள் கூட இங்கே சிரிப்பாகின்றன. மூளைக்காரன்யா டைரடக்கரு!
பேயி.பிசாசுகள்.பில்லி சூனியங்கள், காலம் காலமாக காசு பிடுங்கும் மந்திர மாயங்கள் இப்படியாகப்பட்ட ஜனங்களின் நம்பிக்கைகளை ஈரக் கோணி போட்டு மூடி சாவடி அடித்திருக்கிறார்கள்.
கதையை விட்டு விலகாமல் அதற்குள்ளாகவே பயணித்திருக்கிற சந்தானம் தனக்கென ஒரு ராஜபாட்டையை போட்டுக் கொள்ளவில்லை. டான்ஸ்,பைட் எல்லாம் அளவுடன்,அம்சமாக இருக்கிறது.
இந்த சந்தானத்தைத் தானேய்யா தமிழ்நாடு மிஸ் பண்ணி இருந்தது?
முதல் பாதி ஜாலி ரெய்டு! இரண்டாம் பாதியில் எடிட்டர் மாதவன் தூங்கி இருக்கிறார். ஊர்வசியும் அந்த முட்டைக்கண்ணு மந்திரவாதியும் ஆறுதல்.
ஷபிர் இசை.மாவுக்கேத்த இட்டிலி.
லாஜிக் மேஜிக் பார்க்காமல் ஜாலிலோ ஜிம்கானா.!