பெண்ணாகப் பிறந்து விட்டாலே பெருந் துன்பமும் கூடவே வரும் என்பார்கள்.
அது எந்த நேரத்தில் வரும் ,வந்த பின்னர் எப்போது விலகிச்செல்லும் என்பது யாருக்கும் தெரியாது.
விதியின் பெயரை சொல்லி அதன் மீது போட்டு விடுவார்கள்.
சரிகாவுக்கு நடந்ததும் விதிதானா?
விதியின் பெயரால் சிலர் செய்த சதி.!
சரிகாவே சொன்னார்.
“எனக்கு ஆறாவது மாதம். வாணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னை தீர்த்துக்கட்ட முடிவு செய்து விட்டார்கள்.
அதன் தழும்புகள் என் கை, கண்,தொடையில்இன்னும் ஞாபக சின்னமாக இருக்கு.
நான் மும்பையில் ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தபோது லிடோ தியேட்டர் பக்கமாக நடந்தது. ஒரு வளைவில் ஆட்டோ திரும்பும் போது வேகமாக ஒரு ஜீப்,ஆட்டோவை எய்ம் பண்ணி வந்தது.
யோசிக்கக்கூட நேரமில்லை. ஆட்டோ மீது மோதி தூக்கி வீசியது.
எனக்கு சரியான அடி.!ரத்த வெள்ளத்தில் கிடக்கிறேன்.டிரைவருக்கு கால் நசுங்கியது.
கடவுள் அருளால் என்னுடைய கருக்கலையவில்லை.வாயும்வயிறுமாக இருக்கிற ஒரு பெண்ணை இப்படி பலி வாங்க யாராவது நினைப்பாங்களா?
என்னையே இந்த அளவுக்கு பாடு படுத்துகிறவர்கள் கமல்ஜியை என்ன பாடு படுத்தி இருப்பாங்க.
கமல்ஜி வேறு நிழல் தேடி வந்ததுக்கு நிறைய காரணங்கள் இருக்கு.
அவரை நான் விரும்பியதுக்கும் நிறைய காரணங்கள் இருக்கு.
என்னுடைய மூணு வயதிலேயே எங்கம்மாவை எங்கப்பா டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டார்.தினமும் அம்மாவுடன் சண்டை போடுவார் அடிப்பார்.
இந்த மாதிரி சூழ்நிலையில்தான் நான் குழந்தை நட்சத்திரம் ஆனேன். என் குடும்பத்துக்கு சம்பாதித்துப்போடும் பொறுப்பு எனக்கு..படிக்க வேண்டிய வயது.விளையாடக்கூடிய பருவம்.எதுவும் எனக்கு இல்லாமல் போச்சு கிடைக்கல..
என் அம்மாவுக்கு நான் பணம் காய்ச்சி மரம்.அவளிடமும் அன்பு கிடைக்கல.என்ன பண்ணுவேன்? எத்தனை நாளைக்குத்தான் அவளுடைய கொடுமையைத் தாங்க முடியும்?
அவளை விட்டு விலகி வாழ ஆரம்பித்தேன்.திரை வாழ்க்கையிலும் நல்ல நிலைக்கு வந்தேன்.
இப்படி வாழ்க்கையில் அன்பு,பாசம்,ஆதரவு இல்லாமல் வளர்ந்த எனக்கு கமல் ஜி அற்புத மனிதராக இருந்தார்.1976- ல் அவரைப் பார்த்திருந்தாலும் நேரடியான சந்திப்பு 1981-ல் தான் அவரை பார்த்து பேச முடிஞ்சது .1983-ல் எங்களிடையில் காதல் மலர்ந்தது.
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை தட்டி பறிக்கும் என்னமோ,குடும்பத்தை பிரிக்கும் நோக்கமோ எனக்கு இல்லை.
அப்படி அவருடன் பழகவும் இல்லை.நான் அவருடன் பழக ஆரம்பித்தபோதே கமல்ஜி வாணி திருமண வாழ்க்கை நொறுங்கிப்போய்த்தான் இருந்தது.
வாணி அமெரிக்காவில் பல மாதம் இருந்து விட்டு திரும்பியதும் நாங்கள் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம்.
ஆனா வாணி நேராக என்னிடம் வந்தார்.அன்றைய செய்தி பேப்பர்களில் வந்த மாதிரி அவர் என்னை அறைய வில்லை .ஆனா மரியாதை இல்லாமல்தான் நடந்தார்.
கமல்ஜியுடன் பழகிய பிறகு அபார்ஷன் செய்துக்கிட்டியா, நீ இன்னொரு ரேகாவாக மாறப்போறியா என்றெல்லாம் விசாரணை,அட்வைஸ் நடந்தது.
ச்சே… இப்படியெல்லாமா அவரை காதலித்தே என்கிற உருக்கம் வேற, என்ன பண்றது என் வாழ்க்கையில் இதெல்லாம் அனுபவிக்கனும்கிறது விதி!” என்றார் சரிகா.
சென்னைக்கு வந்த பிறகும் பல சோதனைகள்.
தலைப்பிள்ளை ஸ்ருதியை அவர் சுமந்திருந்த போது கமலும் அவரும் ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார்கள்.
நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான வீடு அன்றைய சோழா ஹோட்டலுக்கு அருகில் அதாவது ரஷ்யன் கல்ச்சுரல் நிலையம் அருகில் இருந்தது.வாடகைக்கு குடி இருந்தார்கள்.
கமல்ஹாசனுக்கு சற்று பொருளாதார நெருக்கடி .
திடீரென ஒரு நாள் எனக்கு அழைப்பு.! நாளை மறுநாள் பார்க்கலாம்.
-தேவிமணி.