வலைதள வாசக நெஞ்சங்களே!
மன்னிக்க வேண்டுகிறேன்.
இந்த தொடர் சற்று தாமதமாக வருகிறது,காரணம் அடியேன் அல்ல.எனது கணினி.
கருவியில் மாற்றம் செய்யப்பட்டதால் 3 நாள் முடங்கி விட்டது.இனி தாமதம் இன்றி தொடரலாம் என நம்புகிறேன்.
கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனின் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள்.ஏமாற்றங்கள்.
உடனிருந்தே கொல்லும் வியாதிகள்.ஒட்டுண்ணியாக இருந்து ரத்தம் உறுஞ்சியவர்கள் ,
இப்படி எவ்வளவோ அடிகள். அத்தனையிலும் இருந்து மீண்டவர்தான் நம்மவர் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன்.சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழவேண்டிய கட்டாயம் அந்த மகா கலைஞனுக்கு!
அவர் காதலித்த சரிகா சந்தித்த பயங்கரங்களை கடந்த பகுதியில் படித்திருப்பீர்கள்.
அதன் தொடர் இங்கே!
இளைத்தவர்கள் என்றால் வலுத்தவர்கள் கரம் கம்பும் எடுக்கும்.கொடு வாளும் தொடும் என்பார்கள்.
அன்று இளைத்திருந்தவர்கள் கமலும் சரிகாவும்.
ஹோட்டல் அறையில் விசாரணை நடக்கிறது.
விசாரிக்கப்படுபவர்கள் கமல்,சரிகா,
விசாரணை நடத்துகிறவர் வாணி.கமலின் அன்றைய அதிகார பூர்வ திருமதி.
நான்கு மணி நேரம்.திட்டி தீர்த்தாராம் வாணி.
“என்னையும் கமல்ஜியையும் அர்சசனை செய்தார். வயதான செக்ரடரியையும் வைத்துக் கொண்டே “என்கிறார் சரிகா.
இனி அவர் சொன்னது இங்கே பதிவாகிறது.
“தன் முன்பாகவே கமல்ஜி அவமானப்படுவதைக் காண பொறுக்காத அவரது வயதான செக்ரட்டரி வெளியே செல்ல முயன்றார்.
“நீங்கள் போகக்கூடாது.இதற்கெல்லாம் நீங்கள்தான் விட்னஸ்.,பார்த்துக் கொண்டிருங்கள்”என அவரை உட்கார வைத்து விட்டார்.
என்ன இருந்தாலும் நான் வேற்று மனுஷி.கணவன் மனைவியான அவர்களுக்கு மத்தியில் ஆயிரம் இருக்கும்..அவைகளை எல்லாம் எங்கள் முன்பாக அலச வேண்டுமா என்ன? கமல்ஜியின் டீன் ஏஜ் வாழ்க்கையில் வந்து போனவர்களை எல்லாம் இழுக்க வேண்டுமா? எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
கமல்ஜியையும் பேச விடவில்லை. அவர் வாயைத் திறந்தாலே வாணி வசை பாடி விடுவார்.
என்னால்தானே கமல்ஜிக்கு இத்தனை அவமானமும்!
வாணியிடம் சத்தம் போட்டுச்சொன்னேன்.
“நான் இனிமேல் கமல்ஜியை சந்திப்பதில்லை!”
கமல்ஜியைப் பார்த்தார் வாணி “நீங்க என்ன சொல்றிங்க?”
“அவளை நானும் சந்திக்க மாட்டேன்!”என்கிறார்.
அத்துடன் நின்றால் பரவாயில்லையே! தொடர்ந்தார் வாணி.!
“இவளுடன் உங்க ஆசை வெறும் செக்ஸ்தானா,இல்ல லவ் தானா?”
மனிதனுக்கு கோபம் வருமா வராதா?
சந்திக்க மாடடேன் என்று சொன்ன பின்னரும் இந்த மாதிரியாக இழிவாக கேட்டால் எந்த அகிம்சைவாதிக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
“ஆமா, இவள நான் காதலிக்கிறேன்.லவ் பண்றேன் .என்ன பண்ணப்போற?”என்கிறார் கமல்ஜி.!
அப்போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லிங்க.என் வாழ்க்கைக்காக நான் ஏங்கிக் கிடந்த முழு பலமும் கிடைத்து விட்டதைப்போல !
அவ்வளவுதான்! ஆவேசம் வந்து விட்டது வாணிக்கு!
வளையல்களை கழற்றி வீசினார்.
“நான் உங்களை விட்டு பிரிஞ்சி போறேன்.எனக்கு என் டான்ஸ் இருக்கு.அது போதும்.உங்களுக்கு அவ இருக்கா இவ இருக்கா” என்று பலரின் பெயர்களை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சொன்னார்.
என்னால் அங்கு இருக்க முடியவில்லை .எழுந்து புறப்பட்டேன் .கமல்ஜியும் என்னை வழி அனுப்புவதற்காக எழுந்தார்.
அவரை வாணி மறித்தார் .
“போனிங்கன்னா இந்த ஹோட்டல் மாடியில் இருந்து குதிச்சிடுவேன் !” என்று இரைந்தார் .
வேறு வழி இல்லாமல் கமல்ஜி அங்கேயே உட்கார்ந்து விட்டார்.அவரது செக்ரட்டரிதான் என்னை வழி அனுப்பி வைத்தார்.
இது மட்டுமல்ல ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜன்சியையும் பிடித்தார்.
அது எதற்காக நாளை மறுநாள் பார்க்கலாம்.
–தேவிமணி .