‘வாலு’ திரைப்படம் நடிகர் சிம்புவின் திரைப்பட வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத
அளவிற்கு முதல் சில நாட்கள் வசூலைக் குவித்திருப்பதால் நிஜமாகவே வெற்றி விழா
கொண்டாட வேண்டிய படமாகிவிட்டது.
நேற்று மாலை தி.நகர் ஆந்திரா கிளப்பில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.
சிம்புவுடன் அவரது அப்பாவான டி.ராஜேந்தர், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்,
இயக்குநர் விஜய்சந்தர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிம்பு பேசும்போது தயக்கமே இல்லாமல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து
வெளிப்படையாகவே பேசினார்.
“என்னதான் நல்ல நடிகராக இருந்தாலும், ஒரு படம் வெளிவருவதும், அது வெற்றி
பெறுவதும் கடவுள் கையில்தான் இருக்கிறது. இதனை இப்படம் எனக்கு
உணர்த்தியிருக்கிறது.
இந்தப் படம் வெளிவருவதற்கு காரணமாக இருந்த என் அப்பா, விஜய் ஸார், தாணு ஸார்,
மற்றும் 3 வருடங்களாக எனக்காகக் காத்திருந்த எனது ரசிகர்கள் எல்லோருக்கும் என்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியாகி இப்போது ரசிகர்களிடம்
பேராதரவை பெற்று நல்ல முறையில் ஓடி வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழ்
சினிமாவில் இப்போது நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று புரிந்து
கொண்டேன்.
‘வாலு’ படத்திற்கான தாமதத்திற்கு நானேதான் காரணம். வேறு யாருமில்லை. படத்தைத்
யார் தடுத்தார்கள் என்றெல்லாம் கேட்காதீங்க. இதில் யார் மீதும் பழி போட நான்
விரும்பவில்லை, அதற்கான பழியை நானே ஏற்றுக் கொள்கிறேன்.
‘வேட்டை மன்னன்’ படத்திற்காக ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து படத்தின்
தயாரிப்பாளரைக் காப்பாற்றத்தான், இந்த ‘வாலு’ படத்தில் நடித்தேன். ‘என்னுடைய
அடுத்தப் படத்தையும் நானே தயாரித்தால் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்திரும்’ன்னு
தயாரிப்பாளர் சொன்னதால் அவருக்காகத்தான் இந்த படத்தில் நடித்தேன்.
படம் வெளியான அன்று ரஜினி ஸார் என்னை அழைத்து, ‘படம் நல்லா இருக்குன்னு
நியூஸ் வந்திருக்கு. மூணு வருஷம் கழித்து படம் வந்தாலும் உன் ரசிகர்கள் நல்ல
வரவேற்பு கொடுத்திருக்காங்க. இதை நீ தக்க வைச்சுக்கணும். இனிமேல் வரவிருக்கும்
படங்களில் எந்த பிரச்சினையும் வராமலும் பார்த்துக் கொள்..’ என்று அட்வைஸ் செய்தார்.
ரஜினி ஸார் இப்படி சொன்னதே எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது..
இதுல சில பேர் நீங்க அஜீத் ரசிகராக இருந்தாலும் விஜய் ஸார்தான் உங்களுக்கு பெல்ப்
பண்ணியிருக்காருன்னு பேசுறாங்க.. சினிமா என்பது ஒரு குடும்பம். நான் அஜித் ஸார்,
விஜய் ஸாருக்கெல்லாம் ரசிகன். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் செயல்பட்டு
வருகிறோம். எல்லோரும் அவங்கவங்க லெவல்ல முடிஞ்ச அளவுக்கு இந்தப் படம்
வெளியாக ஹெல்ப் பண்ணினாங்க. ஸோ.. இதுல யாருக்கும், யார் மேலேயும்
பிரச்சினையெல்லாம் வர்றதுக்கு வாய்ப்பேயில்லை.
நான் விஜய்காந்த் தலைவராக இருந்தபோதே நடிகர் சங்கத்தில் உறுப்பினராக
சேர்ந்துவிட்டேன். தற்போது சரத்குமார் தலைவராக இருக்கிறார். விஷால் அணி அவரை
எதிர்த்து போட்டியிடுகிறார்கள். நான் இப்போதும் சரத்குமார் அணியில்தான்
இருக்கிறேன். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். இருந்தாலும் எதிரணியில்
போட்டியிடுபவர்களும் எனது நண்பர்கள்தான். அவர்களுடனும் நான் தினமும் பேசி
வருகிறேன். என்னை பொருத்தவரை நடிகர் சங்கத்தில் அணிகள் இல்லாமல் அனைவரும்
ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
என்னுடைய திருமணத்தை நான் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். இப்போதைக்கு
படங்களில் நடிப்பது மட்டுமே எனது வேலை. மிச்சத்தை கடவுள் தீர்மானிப்பார். நான்
வணங்கும் சிவன், சாய்பாபா என்னை வழி நடத்துவார்கள். இவர்களைத்தான் நான்
தினமும் வணங்கி வருகிறேன். எனக்குக் கல்யாணத்தை எப்போ நடத்தணும்னு கடவுள்
நினைக்கிறாரோ அன்றைக்கு அது நிச்சயமா நடக்கும். நான் அதைப் பத்தியெல்லாம்
இப்போ யோசிச்சுக்கலை. இப்போ என்னுடைய முழு கவனமும் என்னுடைய அடுத்தடுத்த
படங்கள் மீதுதான் உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் நான் நடிக்கும் ‘கான்’ திரைப்படம் 50 சதவிகிதம்
முடிந்துவிட்டது. ‘இது நம்ம ஆளு’ படமும் கிட்டத்தட்ட ரெடிதான். சில காட்சிகளை
மட்டும் ஷூட் செய்யணும். இந்தப் படத்தோட இசை வெளியீடு வர்ற அக்டோபரில்
இருக்கலாம். ‘அச்சம் என்பது மடமையடா’ படம் 65 சதவிகிதம் முடிஞ்சிருச்சு.
அதுக்கப்புறம் ‘வேட்டை மன்னன்’ படமும் காத்திருக்கு.. இனி என்னுடைய படங்கள்
வரிசையாக வரும்..” என்று முடித்தார் சிம்பு.