அரசியல் என்று வந்து விட்டால் வாழ்த்துகளுக்கு தலை வணங்குவதைப் போல ,கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அது ஜனநாயகக் கடமை !.
கேட்பவர் யாரோ ஒருவராக இல்லாமல் முக்கியப் புள்ளியாக இருந்து விட்டால் அதுவும் சக போட்டியாளராக இருந்து விட்டால் .ஓடி ஒளிய முடியாது.
விளக்கம் சொல்வது தலைவராக இருப்பவரது தலையாய கடமை.
மக்கள் நீதி மையம் தொடங்கப்பட்டதிலிருந்துஇன்று வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். கிராமசபை கூட்டம், மாணவர்கள் மத்தியில் பேசுதல் என பம்பரமாக சுற்றி வருகிறார்..
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது வரை கட்சியை தொடங்கவில்லை. கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கூட சந்திக்கவில்லை.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு சென்றபோது அவர் சந்தித்த ஒரே வினா ‘ நீங்க யாரு?’
இத்தகைய நிலையில்தான் தனது நோக்கம் பாராளுமன்றத் தேர்தல் இல்லை.சட்டமன்றத் தேர்தல்தான். தண்ணீர் பிரச்னைதான் மையமாக இருக்கும் என்பதை சொல்லி இருக்கிறார் .இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது.தண்ணீர் பிரச்னையைப் பேசக்கூடிய இடம் பாராளுமன்றம்தானே!
அண்மையில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் ஒரு மாணவரின் கேள்விக்கு இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.
“நான் சரியான முடிவாகத்தான் எடுத்திருக்கிறேன்.ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டு லோக் சபா தேர்தலில் மட்டும்தான் நிற்பேன் என்றால் மக்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்.ஒரு பெரிய விருந்துக்கு செல்கிறவர்கள் அங்கு போனதும் “டாக்டர் சொல்லி இருக்கிறார்.டயட்டில் இருக்கிறேன்’என திரும்புவது சரியாக இருக்குமா? உங்களுக்கு அது முன்னதாகவே தெரியாதா?”
இந்த கேள்வி யாரை நோக்கியது என்பதை புரிந்து கொள்ள முடியாதா என்ன?