எத்தனையோ வழிகளில் மக்களிடம் இருந்து ஓட்டுகளை வாங்கி விடுகிறார்கள். மக்களும் யார் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களித்து விடுகிறார்கள். இது ஜனநாயகத்தை செல்லரித்துவரும்தொழு நோய் ஆகும்.
மதவாதம் அதிகம் செலுத்திவருவதால் அதற்கு சாதியமும் இன்ன பிற தீய சக்திகளும் மாநில வாரியாக துணை நிற்கின்றன.
கார்ப்பரேட்டுகளின் கையில் நாடு சிக்கி இருக்கிறது.இந்த நிலையில் இந்திய துணைக் கண்டம் பேரபாயத்தில் இருக்கிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு தங்களது அரசியல் செல்வாக்கையும் ஆட்சியையும் தக்க வைப்பதற்கு பல்வேறு இழி செயல்களில் கட்சிகள் இறங்கி இருக்கின்றன.
ஆளும்கட்சியான பிஜேபி,எதிர்க்கட்சியான காங்.ஆகிய இரண்டும் வாக்குகளை கைப்பற்றுவதற்காக பல்வேறு யுக்திகளை கையாள இருக்கின்றன.
அதிகார துஷ்பிரயோகம் உறுதி என்றாலும் மேலும் சில வழிகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று டிவிட்டர் வழியாக செல்வாக்குள்ள நடிக,நடிகையரை பயன்படுத்தி வோட்டு வேட்டை ஆடுவது.
ஆனால் இதை ரகசிய கேமரா வழியாக ஒரு அமைப்பு கண்காணித்து படமாக்கி இருக்கிறது.
விவேக் ஓபராய்,சக்தி கபூர்,ஜாக்கி ஷெராப்,அமிஷா படேல்,மகிமா,சோனு சூட்,பாடகர் கைலாஷ் கர், அபிஜித்,ஆகியோர் உள்பட பலர் சிக்கி இருக்கிறார்களாம் .
தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை வழங்கப்படுமாம். இப்படி பிரசாரம் பண்ணுவதால் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என அந்தந்த கட்சிகள் நம்புவதுதான் பரிதாபம்.
இந்த பிரசாரத்திற்கு வித்யாபாலன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். தனது செல்வாக்கை காசுக்கு விற்கமாட்டேன் என சொல்லி விட்டார்.