இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் சமூகக் கண்ணோட்டம் புரிகிறது.வருங்காலத்தில் பெட்டிக்கடை திறப்பதற்குக் கூட மாவட்டக் கலெக்டரின் துணை தேவைப்படும் ,அந்த அளவுக்கு எங்கும் கார்ப்பரேட்,எதிலும் கார்ப்பரேட் என்கிற நிலை நாட்டை முழுமையாக கொள்ளை கொண்டுவிடும் என்பதை சொல்ல விரும்பி இருக்கிறார்.
அதை எந்த அளவுக்கு அவரால் சொல்ல முடிந்தது?
ஒரு பெட்டிக்கடையை அந்த ஊரில் ஆர்.சுந்தரராஜன் தேடி அலைந்து மூடிக்கிடக்கும் கடைக்கு உதை விடுவதில் இருந்து கதையை தொடங்கி இருக்கிறார்கள்.அதன் பிறகு அவரை துணை நடிகர்களில் ஒருவர் என்கிற அளவுக்கு கொண்டாடி விட்டார்கள்.இதில் ஆர்.வி.உதயகுமாரும் ஒரு பார்ட்னர்.!
ஹீரோ வீராவை முன்னிறுத்துவதா,ஹீரோயின் சாந்தினியை முன்னிறுத்துவதா என்கிற குழப்பம் இருந்திருக்கும் போலும்.அதனால் இருவரையுமே முன்னிறுத்தி விட்டார் இயக்குநர்.
பிரியா வாரியரை விட சாந்தினி அழகாக கண்ணடித்திருக்கிறார். வீரா நல்லா கோழி பிடிக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு சமுத்திரக்கனி சிலம்ப ஆசிரியராக என்ட்ரி.அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வந்து விடக்கூடாது என்பதில் கார்ப்பரேட்டுகளின் கையாட்கள் புல் சூட்டில் அங்கேயே திரிகிறார்கள்.அமைச்சரை மிரட்டுகிறார்கள்.கடைசியில் சமுத்திரக்கனியையும் போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.
நாட்டை கொள்ளை அடிக்கிற ‘நல்ல’ அமைச்சரின் மகள்தான் சாந்தினி என்கிற டிவிஸ்ட் எடுபடவில்லை.
இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் நல்ல முயற்சி ,பலன் கொடுக்குமா?
சாமி சரணம் ஐயப்பா!