‘கலைஞன்’ படம் .சிவாஜி பிலிம்ஸ் பேனர். ராம்குமார் கணேசன் தயாரிப்பு. உலகநாயகன் கமல்ஹாசன்,பிந்தியா ஆகியோர் நடித்த படம். சென்னை அண்ணாசாலையில் ஒரு பெரிய கட்டிடத்தில் படப்பிடிப்பு. முன்னெல்லாம் போன் செய்து விட்டு லொக்கேஷனுக்குப் போய் விடலாம். இடைவேளைகளில் நடிக நடிகையரை சந்தித்து பேட்டிகள் எடுக்கலாம். நெருக்கமான நட்பு நிலவிய காலம்.நடிகர்களும் நிறைய பேசுவார்கள்.
நான் படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்த போது ‘தாண்டியா ‘நடனக்காட்சியின் ஒரு பகுதியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.
மதியம் லஞ்ச் இடைவேளை.
வழக்கம் போல நடிகர் திலகத்தின் வீட்டிலிருந்து ‘விருந்து’ வந்தது. மட்டன் சிக்கன்,இறால்,மீன் ,காடை ,நண்டு,இப்படி பல வகைகள். விருப்பம் போல வெளுத்துக் கட்டலாம்.
கமல் வீட்டிலிருந்தும் நான்-வெஜ்.
“கருவாடு சாப்பிடுறிகளா?” கமல் கேட்டார்.
“ம்ம்.சாப்ட்டு ரொம்ப வருசமாச்சு.மதுரையில் வீட்டில் சாப்பிட்டது.”
“இது நம்மூரு கருவாடுதான்! ராம்நாடில் இருந்து வந்திருக்கு! சாப்பிடுங்க!”
தொக்கு மாதிரி வைத்திருந்தார்கள்.. ருசி செம!
“ஜி! நீங்க நான்-வெஜ் ல என்னென்ன சாப்பிட்டிருக்கீக?”
“நடப்பன பறப்பன ஊர்வன இப்படி எல்லாமே இந்த வயசில சாப்பிடலேனா வேற எந்த வயசில சாப்பிட முடியும்?” என்றார்.
அவரது இளமையின் ரகசியம் புரிந்தது.
காட்சியை கட் பண்ணுங்க.அப்படியே அன்னை இல்லத்துக்கு வாங்க.!
நடிகர் திலகம் வரச்சொல்லி இருந்தார். போனேன்.
வீட்டு நலன்களை வழக்கம் போல விசாரித்து விட்டு “ஒழுங்கா இருக்கியா?”
இந்த கேள்வியின் அர்த்தம் நம்மைப் பற்றி யாரோ வத்தி வைத்திருக்கிறார்கள் என்பதுதான்!
சற்று பதட்டமுடன் “இருக்கேண்ணே!”
“மதுரையில இருந்தபோது ஒழுங்காத்தானே இருந்தே மெட்ராஸ் வந்தபிறகுதான் இப்படி ஆகிட்டியா?கண்டபடி எழுதுறியாமே…அதுக்கு பேரு என்னமோ சொல்றாய்ங்களே ..அதாண்டா கிசு கிசு.”
“அண்ணே…எல்லாருமே எழுதுறாய்ங்கண்ணே.பத்திரிக்கை சேல்ஸ் இங்கிரீஸ் ஆகும்.”
“மண்ணாங்கட்டி!.அதுக்காக மத்தவன் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிவியா.?நாலு பேரு வாயில ஏண்டா விழணும்?நம்ம புள்ள குட்டி நல்லாருக்கும்னுடா! சொல்றது புரியிதா?”
தலையாட்டினேன்.
இப்படி என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து திருத்தியவர்களில் நடிகர் திலகம்,உலகநாயகன்,திரையுலக மார்க்கண்டேயன் ஆகிய மூவருக்கும் பங்கு உண்டு,
இப்படியாக அண்ணன் சிவாஜி என்னை கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே எங்களை கடந்த இளைய திலகம் பிரபு “அப்பா ,ஹார்ஸ் ரைடிங் போறேன்பா!”என்று தகவல் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் அண்ணனின் மூடு மாறி விட்டது.
“இவனும் உடம்பு இளைக்கனும்னு அடிக்கடி குதிரை சவாரி பண்றான். குதிரைதான் இளைச்சது,இவன் இளைச்சமாதிரி தெரியல “என்று சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நைசாக அப்படியே விடை பெற்று கிளம்பிவிட்டேன்.
சிவாஜி சொன்னதின் எதிரொலியோ என்னவோ பிரபுவுக்காக “கத்திரிக்கா…குண்டு கத்திரிக்கா” என்று பாடலும் எழுதி விட்டார்கள். உடல் பருமன் என்பது அவர்களது வம்சாவளி சொத்து.
நடிகர் திலகத்தைப் பற்றி பலர் கஞ்சன் என்பார்கள். ராமநாதபுரம் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது நேரிலும் அவரது மன்றங்கள் வழியாகவும் அந்த காலத்து மதிப்புப்படி பல லட்சங்கள் செலவு செய்து குடிதண்ணீர் குழாய்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.கண்மாய்களை சீரமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கமலுடன் பிரபு உடற்பயிற்சி செய்வதாக ஒரு செய்தி கிடைத்தது.
நாளை மறுநாள் சொல்கிறேன்.
-தேவிமணி