“இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துகள் இல்லை,
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை.”
கண்ணே கலைமானே படத்தில் கண்களும் காதலும்தான் மையப்புள்ளிகள்.
இயக்குநர் சீனு ராமசாமியின் வித்தியாசமான படைப்பு.
உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பு.
இப்படித்தான் தமன்னாவுக்கு ஆகப்போகிறது என்பதை எந்த கட்டத்திலும் யூகம் செய்ய முடியாத திரைக்கதை அமைப்பு.
காதலையும் கைவிட முடியாமல் அப்பத்தாவின் முடிவையும் புறம் தள்ள முடியாமல் உதயநிதி எடுத்த அறவழி முடிவு.
அவர் மயங்கி விழும்போதுதானே தெரிகிறது.அது காதல் போராட்டத்துக்காக அவர் கையாண்ட வழி என்பது.
ஒரு விவசாய பட்டதாரியின் இயற்கை விவசாய ஆர்வத்தை மேலெழுந்தவாரியாக காட்டாமல் சில காட்சிகளில் அழுத்தமாக பதிவு செய்து விட்டு காதலையும் பாசத்தையும் தெளிந்த நீரோடையாக கதை நம்மை கடத்திச் செல்கிறது. சீனு ராமசாமி தன்னை பாலுமகேந்திராவின் மாணவன் என்பதை பல இடங்களில் நினைவூட்டுகிறார்.
கலகலப்பாக படங்களில் கலாய்த்து விட்டுப் போகும் உதயநிதியை சுத்தமாக மாற்றி இருக்கிறார்கள். உதயநிதி அழும்போது நாமும் கலங்குகிறோம் என்பதே சாட்சி. அவர் ஆழ் கடலின் அடித்தட்டில் கிடக்கும் அடுக்குத் தட்டுகள் மாதிரி.!தமன்னாவை நேசிப்பதும் அதற்கு தடை வந்த பின் தவிப்பதும்,எந்த விழிகளைப் பார்த்து காதல் ஊற்று எடுத்ததோ அதற்கே சோதனை என்றதும் சுயம் இழக்காமல் தானே அதற்கு தீர்வு காண முயற்சிப்பதும் அருமை,திறமை.
அப்பத்தாவையும் மீற முடியாது, காதலியையும் கைவிட முடியாது.கைபேசியைக் கூட புறந்தள்ளும் போது தெரிகிற ஆற்றாமை.அற்புதம் உதய்!
தேர்ந்த சிற்பிகளின் கைகளில்தான் அவரை சிறப்பாக வடிவமைக்க முடிகிறது.அதற்கு கண்ணே கலைமானே சாட்சி.
பால் வண்ண அழகி தமன்னாவுக்கு இது சோதனையான வேடம்,டூயட் பாடிவிட்டு கவர்ச்சியான இடைக்கு குளோசப் கொடுப்பதை விட்டுவிட்டு அவரது கண்களுக்கு மட்டுமல்ல நமது கண்களுக்கும் இதமான சோதனை வைக்கிறாரே அருமை! வடிவுக்கரசி வந்து விட்டு சென்ற பிறகு உதயநிதியை தொடர்பு கொள்ளாமல் தவிக்கிற தவிப்பு .நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருப்பவனின் மனநிலைதானே! சிறப்பு.
அப்பத்தா அழகம்மாளாக வடிவுக்கரசி. நடிகர்திலகத்தையே எதிர்கொண்டவராச்சே! சிவீர் என நிறம் கொண்டபாரதி தமன்னா எங்கே தன்னிடம் இருந்து பேரனை பிரித்துக் கொண்டு போய்விடுவாளோ என்கிற பயம்தான் உச்சத்தில். அது அந்த மண்ணின் மணம்.பாசத்தின் உச்சம்.அந்த பயம் நீங்கிய பின் தமன்னாவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறபோது அவள் தனக்கு உடமைப்பட்டவள் என்கிற உரிமை.
பூ ராமு சிறப்பான நடிப்பு. மகனின் உள்ளம் தனது அம்மாவின் அர்த்தமற்ற பயத்தினால் பாதிக்கப்படுவதை பொறுக்காமல் “அம்மாவா இருந்த,அப்புறம் அப்பத்தாவா இருந்த,இப்ப மாமியாராயிட்டியோ..பேசாம உள்ளே போ!”என்கிற அந்த உயிர் துடிப்பான காட்சி ஒரு டர்னிங் பாயின்ட்.
முத்துலட்சுமியாக வசுந்தரா. தடுமாற்றமில்லாத வட்டாரப் பேச்சு.அவரே பேசியதா,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பேசியதா என்பது தெரியவில்லை.வட்டிக்கு கொடுத்தவனை எகிறும் கட்டம் காட்டம்.
இன்னமும் ஜீவன் இழக்காத பசுமை மிச்சம் இருக்கிறது என்பது சோழன் வந்து உவந்த சோழவந்தானில் தெரிகிறது. படத்தின் சிறப்புகளில் பசுமையும் ஒன்று.அவ்வளவு செழுமை பசுமையை பார்த்து பார்த்து ரசித்த கண்களுக்கு இனி பார்க்கமுடியாமல் போய் விடுமோ என்கிற ஆதங்கம் பாரதியை நினைத்து வருகிறது.ஜலேந்தர் வாசனின் ஒளிப்பதிவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளிக்கலாம்.
பின்னணியில் அப்பாவின் சாயல்,அந்த மண்ணின் மீது கொண்ட காதல் எல்லாமே யுவனின் இசையில் உருகி வழிகிறது.வைரமுத்துவின் வரிகளில் குற்றம் கண்டு பிடிக்க அந்த சிவன்தான் வரவேண்டும்.
கண்ணே கலைமானே ..காலமெல்லாம் ரசிக்கலாம்.