இன்றைய அரசியல் நிலவரம்,கலவரம்,அந்தரங்கம் இவைகளை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஓட விட்டிருக்கிறார் லால்குடி கருப்பையா காந்தி. பெயர் சுருக்கமே எல்.கே.ஜி.
சர்காரில் இலவசங்களை இழிவு படுத்தினார்கள் என்று சொல்லி ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்.கே.ஜி.க்காக என்ன பண்ணப்போகிறார்கள். அவர்களைத்தான் பாலாஜி நாறடித்திருக்கிறார் .! வசனங்களில் வகை வகையான கிண்டல்கள்.ரசிக்க முடிகிறது.தொடக்கமே பினாமி ஆட்சி ஒழிக என்றுதான் தொடங்குகிறது.
ஒரு கட்சியைக் கூட விட்டு வைக்கவில்லை. தொண்டன் அறை வாங்கிய தியாகத்தையும் காட்டுகிறார்கள். மீடியாக்கள். மீம்ஸ் கிரியேட்டர்களையும் மரண கலாய். இப்படித்தான் மீடியாக்களின் கேள்விகள் என நக்கல் செய்வதற்கும் துணிச்சல் வேண்டும்.
கதை என்பதை அற்ப ஜந்துவாக்கி விட்டதால் பெரிதாக சொல்வதற்கில்லை. கோர்வையான திரைக்கதையும் இல்லை.
நாஞ்சில் சம்பத்தை வைத்து மேஜிக் காட்டப்போகிறார்கள் என்றால் பாவம் அவரை வாயில் காப்போன் அளவுக்குத்தான் வைத்திருக்கிறார்கள். குறள் சொல்வதற்கு சம்பத் வேண்டுமா என்ன?ஒரு சரித்திர ஆசிரியரை நாற்காலியுடன் பிணைத்து விட்டீர்களே பாவிகளா!
முதலமைச்சராக ராம்குமார் கணேசன்.அப்படியே அப்பாவின் சாயல்.அவரது கம்பீரக்குரல்.இந்த வாரிசை பட்டைத் தீட்டப்படாத வைரமாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
கார்ப்பரேட் கிரிமினல்கள்,இந்திய தேர்தல்களில் அந்நிய சக்திகளின் வியூக உதவிகள் ,உள்ளூர் அரசியல் வாதிகள் ,சமாதி சத்தியங்கள், கட்சிக்குள் கலவரம்,எல்லாவற்றையும் தோல் உரித்துக் காட்டியதற்காக பாலாஜிக்கு கலைமாமணி விருது வழங்கவேண்டும். அமரர் எம்.ஜி.ஆர்.படப்பாடல்கள் காலம் கடந்தும் நிற்கிறது.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்கிற அவரது பாடல் அவரது கட்சிக்கே பொருந்திப் போகும் என்பதை மக்கள் திலகம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
மேடைகளில் எதிரிகளை கிழிக்கும் கே.ராஜனின் மகன்தான் இயக்குநர் கே.ஆர். பிரபு. நாயகன் பாலாஜியின் வால்யூமை சற்றே குறைக்கத் தவறி விட்டார்.