மனித ஓநாய்களின் காமம் உறவு பார்ப்பதில்லை.இனம் பார்ப்பதில்லை. நாயையும் விட்டு வைக்கவில்லை. பச்சிளம் குழந்தைகளையும் காமப் பசிக்கு இரையாக்கிக் கொல்கின்றன ….சாதாரணமாக பார்க்கப்படுகிறது.
இதைப் போன்ற செய்திகள் நாளிதழ்களில் தினமும்!
இந்த சமுதாயம் காட்டுமிராண்டித்தன்மைக்கு மாறுகிறதா? அதன்தொடக்கமா?
மனிதனின் வக்கிரம் வரும் காலத்தில் இன்னும் மோசமாகுமா?பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இருக்குமா? பயமாக இருக்கிறது.
இந்த இழிந்த நிலை பற்றி அரசுகள் அவ்வளவாக கவலை கொள்ளாதது எதைக்காட்டுகிறது?தெரியவில்லை
இதுவும் கடந்து போகும் என்பதுதானா?
ரோம் மன்னன் நீரோவைப் பற்றிய ஒரு வரலாற்று உண்மையை தெரிந்து கொள்வது தவறில்லைதான்!
ரோமாபுரி பற்றி எரிகையில் பிடில் வாசித்தான் என்பதாக சொல்வார்கள். அவனது காலத்தில் பிடில் இல்லை என்பதாக சிலர் சொல்வார்கள். ஆனால் அவன் பெற்ற தாய் ‘அக்கிப்பினா’வை அவனது படுக்கை அறை சரசங்களுக்கு பயன்படுத்திக்கொண்டான் என்பதை உண்மை என்பதாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.
பெற்ற தாயையே காமப் பசிக்கு உணவாக்கி கொண்டிருக்கிறான் அந்த கொடூரன்.
ஆனால் மக்களுக்கு அவனின் அசிங்கம் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அனுமதித்திருக்கிறார்கள்,அவர்களை மக்கள் என சொல்வதே மனித இனத்தை இழிவுபடுத்துவதாகிவிடும்.
இன்றைய சமுதாயமும் ரோம சாம்ராஜ்யத்தின் காட்டு மிராண்டித்தனத்துக்கு திரும்பிவிடுமோ ?மனதில் உறுத்தல் .
அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப்பேரனின் மிருகத்தன்மையைப் பற்றி மதன் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது..அவனது பெயர் கலிக்யூலா. முழுப் பெயர் கேயஸ்சீசர் ஜெர்மானிக்ஸ்.
மூன்று சகோதரிகளின் கணவன்களை கொன்று விட்டு தனது படுக்கை அறைக்கு சகோதரிகளை கொண்டு வந்திருக்கிறான்! இவனை எப்படி மன்னன் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பது புரியவில்லை.
இன்று மதுக்கடைகளை நாடு முழுவதும் அரசே நடத்துவதைப்போல விபசார விடுதிகளை கலிக்யூலா அனுமதித்தான்.
அந்த விடுதிகளுக்கு அவனே செல்வான். அந்தரங்கத்தில் அறைக்குள் அரை வெளிச்சத்தில் நடக்க வேண்டியதை அவன் பகிரங்கமாக நடத்தினான். அவனது காம விளையாட்டுகளை சுற்றிலும் இருப்பவர்கள் கரவொலி எழுப்பி ரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.
இவனே அந்த விடுதிகளுக்கு தீயிட்டிருக்கிறான்.அங்கிருந்தவர்கள் அவனுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். அதற்குத்தான் அந்த தீ வைப்பு!
இதைவிட கொடுமை இன்னொன்றும் இருக்கிறது.
கலிக்யூலாவின் சகோதரிகள் அரச குடும்பம். அதனால் அவர்களுடன் புணர ஆசைப்படுகிறவர்கள் ஆயிரம் தங்கக்காசு வழங்கவேண்டும்.இப்படியும் தனது சகோதரிகளை விலைமாதுகளாக மாற்றியவன்தான் அந்த வெறியன்.
இத்தகைய கேவலங்கள் சரித்திரத்தில் கறுப்பு பக்கங்களாக இருக்கின்றன.
கறுப்புப் பக்கங்கள் நாகரீகமாகி விடக்கூடாது.