மதுரைக்கு சென்று வரலாமே…!
அங்கு இன்னும் பல நினைவுகள் கல்வெட்டாக இருக்கின்றன.
மதுரையில் நடிகர் திலகத்தின் ‘திரிசூலம்’படத்தின் வெள்ளி விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதென முடிவு செய்திருந்தார்கள்.
அதற்கு காரணம் இருந்தது.
முன்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மதுரை மாவட்ட திமுகழகம் சார்பில் ‘நாடோடி மன்னன்’ வெற்றி விழாவை மதுரை முத்து நடத்தி இருந்தார்.
அதுவரை மதுரை நகரம் காணாத பெருங்கூட்டமாம்
அப்போது நான் பள்ளி மாணவன்.
மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலிருந்து அகில இந்திய சுற்றுலாவுக்குசென்ற 33மாணவர்களில் நானும் ஒருவனாக தேர்வு செய்யப் பட்டிருந்தேன்.அதனால் நாடோடி மன்னன் விழாவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
ஒரு மாதப் பயணம்.கல்கத்தாவில் 2 நாட்கள் இருந்தோம்.எனக்கு எனது நண்பர்கள் அனுப்பிய கடிதத்தில் நாடோடி மன்னன் விழா சிறப்புகளை வர்ணித்து எழுதியிருந்தார்கள்.
அந்த கடிதங்கள் சென்னையில் இருந்த எனது சகோதரி வீட்டு முகவரிக்கு வந்திருந்தன.
“எம்.ஜி.ஆருக்கு மதுரை முத்து தங்க வாள் வழங்கினார்.ஜன சமுத்திரம் “என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் பின்னர் மதுரை நகர சிவாஜி ரசிகர்களிடம் தாங்களும் “அண்ணனுக்கு”அந்த அளவுக்கு விழா நடத்த வேண்டும் என்கிற வெறி இருந்ததை பின்னர் நான் ‘மாலைமுரசில்’ செய்தியாளனாக பணியாற்றியபோது அறிந்து கொள்ள முடிந்தது.
அதன் முடிவாகக்கூட ‘திரிசூலம்’ விழாவுக்கு மதுரை தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.
சித்திரைத் திருவிழாவை நினைவூட்டும் வகையில் மக்களும் ரசிகர்களும் கூடி விட்டார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் பார்க்கும் அரிய வாய்ப்பு ஆயிற்றே!
லோகல் காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் காண முடிந்தது.
நகரசபைத் தலைவராக இருந்த ஏ.ஜி.சுப்பராமன்,மற்றும் பி.வி.ராஜு,என்.எஸ் வி.சித்தன் ,போன்றோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில்தான் முதன்முதலாக சிவாஜியின் புதல்வர்கள் ராம்குமார்,பிரபு ஆகியோரை பார்க்கும் வாய்ப்பு. சின்ன அண்ணன் என்று அழைக்கப்பட்ட வி.சி.சண்முகத்தை முன்னரே தெரியும். அந்த காலத்தில் சிவாஜி பிலிம்ஸ் சார்பில் ஆர்ட் பேப்பரில் ஒரு காலண்டர் வெளியிட்டிருந்தார்கள். சிவாஜியின் 12 அழகிய படங்கள் இடம் பெற்றிருந்தது. ரசிகர்கள் பொக்கிஷமாக வைத்திருந்தார்கள். அந்த காலண்டர் வாங்குவதற்காக நான் சென்னை வந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மாநாடு மாதிரி திரண்டிருந்த கூட்டத்தினர் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நடிகர்கள் மத்தியிலும் இருந்தது.
ஆனால் நடிகர் திலகம் மட்டும் “ரஜினியை பத்திரமா பாத்துக்குங்க” என்கிற அக்கறையுடன் இருந்தார்.
அன்றைய காலகட்டத்தில் ரஜினியைப் பற்றிய ‘பலவிதமான’ செய்திகள் வந்து கொண்டிருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம்.
சிவாஜியைப் பற்றி ரஜினி சிறப்பாகவே பேசினார்.
யாருக்கும் கிடைக்காத கைதட்டல்,ஆரவாரம் ரஜினிக்கு கிடைத்தது. எல்லோருக்கும் நிம்மதி.
அவர் பேசி முடித்ததும் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்காக முக்கிய பிரமுகர்களை அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி விடாமல் பலத்த போலீஸ் காவலுடன் மதுரை விமான நிலையத்துக்கு சூப்பர் ஸ்டார் அனுப்பி வைக்கப்பட்டார்.
விழா முடிந்ததும் மதுரை சர்க்யூட் ஹவுசுக்கு சிவாஜி திரும்பினார்.
காரில் இருந்து இறங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி.
“ரஜினி ஏர் போர்ட் போயிட்டாரா?”
“சேர்ந்திட்டார்.ஆனா சின்ன பிரச்னை,பெரிசா எதுவும் இல்ல!”
“என்ன சொல்றே?” பதட்டம்,பரபரப்பு.!
“ஸ்டாலில் பிரச்னை…. பெருசா ஒண்ணுமில்லேண்ணே.!”
“உடனே மெட்ராஸ்க்கு போன் பண்ணு.கே.பி.க்கு தகவல் சொல்லு!”என்றதும் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. புறந்தள்ளக்கூடியதுதான் என்றாலும் துடித்துப் போனார் சிவாஜி.
ரஜினி பத்திரமாக சென்னை வீட்டுக்கு சென்று விட்டார் என்கிற செய்தி வந்த பின்னர்தான் மதுரையில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மறுநாள் மாலையில் ‘மாலை முரசுக்கு’விமான நிலைய பிரச்னைதான் தலைப்பு செய்தி.!
படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரிடம் எடுத்த பேட்டி.
நாளை மறுநாள்.!
–தேவிமணி.