பூமராங் படத்தின் முன்னோட்ட அறிமுக விழா .
வழக்கம்போல அதர்வா பிரதர்க்காக வெயிட்டிங். வந்ததும் பிரசாத் லேப் தியேட்டர் களை கட்டியது.
கதாசிரியர் இயக்குநர் கண்ணனின் இரண்டாவது தயாரிப்புதான் பூமராங்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் திரும்பியதை வரவேற்று கரவொலி எழுப்பி விட்டு விழாவை தொடக்கி வைத்தார். இதைப்போன்று நாட்டின் அன்றாட முக்கிய நிகழ்வுகளை மட்டும் பிள்ளையார் சுழி போடுவதைப் போல திரைப்பட விழாக்களில் குறிப்பிட்டுவிட்டு தொடங்கினால் மாறுதலாக இருக்கும்.
பூமராங் முன்னோட்டத்தில் கால்வாய் வெட்டுகிற காட்சியை காட்டினார்கள். தேனி பக்கம் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு காட்சி. தண்ணீர் பிரச்னை.
“எம்.எல்.ஏ.கிட்ட சொல்லலாம்”?
கால்வாய் வெட்டியவர்களில் ஒருவர் சொல்ல ,கோபம் வருகிறது ஆர்.ஜே.பாலாஜிக்கு.!
” அம்பது வருசமா இருந்த எம்.எல்.ஏ.க்கல்லாம் குரல் கொடுத்திருந்தா அந்த காவேரியை கொண்டாந்திருக்கலாம். இந்த எம்.எல்.ஏ என்ன கிழிச்சாரு?”என்கிற ரீதியில் ஒரு வாங்கு வாங்குவார் பாருங்க..எழுந்து நின்று கைதட்டலாம் போல் இருந்தது.
ஒரு காலத்தில் நாயக நடிகர்களுக்கு சந்தானம் நண்பனாக வந்து கலக்குவார்.அவர் கதாநாயகனாக மாறியதும் அந்த நண்பன் இடத்தை தற்போது பாலாஜி பிடித்து விட்டார்.நாயகனாகவும் ஜெயிக்க முடியும் என்பதை நிருபித்து விட்டு நண்பனாகவும் நடித்து வருவதை வரவேற்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்காக பாலாஜி போட்டிருந்த ஜீன்ஸ் முழங்கால் பகுதியில் அகலமாகவே கிழிந்திருந்தது.
“மவனே மாட்டுனே”என மனதுக்குள் நினைத்துக் கொண்டு நிகழ்ச்சி முடிவதற்காக காத்திருந்தேன்.
வெளியில் ,வந்தார்.
“பாலாஜி! நான் தேவிமணி.உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?”
அவரும் நட்பாகவே ஆரம்பித்தார் “கேக்கலாமே?”
“முழங்கால் பகுதியிலே கிழிஞ்சிருக்கே,ஏன்?”
“அது பேஷன்ணா! நீங்க இந்த சட்டைய ஏன் போட்ருக்கிங்க?”
“கிழிச்சு விடலியே! படங்கள்ல மட்டுமில்ல பொது மேடைகள்ளேயும் கருத்து சொல்றீங்க.பாராட்டுற மாதிரி இருக்கு.நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது சொல்ற நீங்க முன்னுதாரணமாக இருக்க வேணாமா?”
“ஐயோ…ஆள விடுங்க.இது அமெரிக்காவ்ல வாங்கினது. இனிமே போட மாட்டேன். வேணும்னா உங்க வேட்டிய இப்ப கொடுங்க.”
“அப்ப நான் நிர்வாணமா நிக்கனுமா?”
“அய்யோ சாமி…உங்க கால்ல வேணா விழறேன் .இனிமே போட மாட்டேன்” என்று அவருக்கே உரிய தொனியில் பக்கா காமடியாக பேசிவிட்டு நகர்ந்தார் எவ்வித முகச்சுழிப்பும் இல்லாமல்.!
இதுவே வேற நடிகரிடம் நடந்திருந்தால்…?
நினைத்துப் பார்க்க முடியவில்லை.!
பாலாஜியின் வெற்றி ரகசியங்களில் இதுவும் ஒன்று!