மந்தைவெளியில் சிங்கப்பூர் ஹவுஸ். அதிக அளவில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கிற இடம். பத்திரிகையாளர்களின் ரொட்டீன் விசிட் நடக்கிற இடம். சற்றுத் தள்ளிப் போனால் கல்பனா ஹவுஸ்.கடலோரம் அமைந்த பங்களா. அந்த பங்களாவின் ஓனரம்மா செய்தியாளர்களை கவனிப்பது
இப்போது நினைத்தாலும்”அதெல்லாம் ஒரு பொற்காலம்யா” என சொல்லத் தோன்றும். மைதா,கோதுமை மாவு பாக்கெட்கள் கிலோ கணக்கில் கொடுத்தனுப்புவார். அவங்களுக்கு சொந்தமாக பிளவர்மில் இருந்தது என்பது பிறகு அவரே சொன்னபிறகுதான் தெரியும்.
சிங்கப்பூர் ஹவுசில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படப்பிடிப்பு.
லஞ்ச் முடித்து விட்டு அங்கிருந்த கட்டைச்சுவரில் படுத்திருந்தார் ரஜினி. கண்கள் மீது துணி! அருகில் இருந்த இரும்புச்சேரை நான் இழுத்ததும் கண்ணின் மீது இருந்த துணியை நீக்கி விட்டு என்னை பார்த்தார்.
“சாப்டிங்களா?” கேட்டார்.
“முடிஞ்சாச்சு.! “
“காரணமில்லாமல் இந்த பக்கம் வரமாட்டீங்களே?” கண்கள் மீது துணியை போட்டுக் கொண்டார்.
“இன்டர்வியூ பண்ணலாம்னுதான் இந்த டைமுக்கு வந்தேன். நீங்க ரெஸ்ட்ல இருக்கீங்க. அப்பறம் பார்த்துக்கலாம்.” என்றதும் “நோ..நோ..எவ்வளவு தூரம் வெயிலில் வந்திருக்கீங்க. நீங்க கேளுங்க.நான் இப்படி படுத்தபடியே பேசறேன்.கேளுங்க.”
நான் ஒவ்வொரு கேள்வியாக கேட்க அவர் கண்களை மூடியபடியே பதில்களை சொல்லியபடியே வந்தார்.
அத்தனை பதில்களும் அதிரடியாக இருந்தன. அவரா இப்படி சொல்கிறார் என்கிற வியப்பும் எனக்கு இருந்தது. அத்தனையும் கான்ட்ரவர்ஸி.!
என்ன நினைத்தாரோ படக்கென எழுந்து உட்கார்ந்தார்.
“நான் சொன்னது எதுவும் பத்திரிகையில் வரக்கூடாது. உங்க பத்திரிகையை சேர்ந்ததுதானே மாலைமுரசு.! கணேசன் சார் வருவார்.இந்த மாதிரியான காண்டர்வர்சி எல்லாம் கேட்க மாட்டார். நீங்க மட்டும் ஏன் இப்படி கேட்கிறீங்க.எந்த பதிலையும் போடக்கூடாது.”
“நீங்க சொன்னதுதானே! நான் கேட்கிறபோதே அவாய்டு பண்ணிருக்கலாமே?”என்றேன்.
“பழகிட்டேனே..எப்படி மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்றது மணிசார்.!மனசில வச்சுக்காதீங்க!”என்றார் அந்த மாமனிதர் ரஜினி. அவர் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கக் கூடியவர். அதை தேவி வார இதழ் நடத்திய சிறந்த நடிகர்கள் பரிசளிப்பு விழாவில் பார்க்க நேர்ந்தது. அதை பிறகு சொல்லலாம்.
கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்தலாம். கலகலப்பாக இருக்கும்.!
சோமநாதன் என்று ஒரு தயாரிப்பாளர் இருந்தார். அவரது படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது.
பனிரெண்டு பத்திரிகையாளர்கள் சென்னையில் இருந்து சென்றோம். தயாரிப்பாளரே முன் நின்று பத்திரிகையாளர் குழுவை அப்படி கவனித்தார்.
கொடைக்கானலில் இரவு நேரப்படப்பிடிப்புகள் பெரிய ஹோட்டல்கள்,தனியார் பங்களாக்களில்தான் நடக்கும். மற்றபடி பகலில் படப்பிடிப்புகள் மாலை 5 மணிக்குள் முடிந்து விடும்.
அன்றும் அப்படித்தான் முடிந்தது.
இரவு நேரக்குளிர். எங்களில் சிலர் உள்ளுக்குள்ளும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டனர்.
எல்லோரும் படுத்தாகி விட்டது. ஒரு அறைக்கு 3 பேர் வீதம் தங்கி இருந்தோம்.
கடுமையான குளிர். கம்பளியை போர்த்திக் கொண்டு படுத்தாகிவிட்டது.
நள்ளிரவு 12 மணி இருக்கலாம்.
எங்களின் அறையில் இருந்து “ஐயோ அம்மா” என அலறல்.
சக பத்திரிகையாளர் ,மாலை நேரப் பத்திரிகையில் பணி. அவர்தான் அலறினார்.
பாத்ரூம் போனவர் வெந்நீர்தான் வரும் என்பதை மறந்து கழுவ முயற்சிக்க வெந்து போனது !
அந்த இரவில் வாழை மட்டை தேடி தயாரிப்பாளர் அலைந்து எப்படியோ கொண்டு வந்து கட்டி விட்டார். அன்று அவர் துடித்த துடிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.
நாளை மறுநாள் சந்திக்கலாம்.கேப்டன்,மம்மூட்டியுடன்.