பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் சூழலில்,தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கான பரமபத காய் நகர்த்தல்கள் செம விறுவிறுப்பாக நடந்து வருகிறது..
அதிமுக தனது அணியில் பாஜக, பாமக கட்சிகளை இணைத்து ஒப்பந்தம் போட்டது. திமுக தனது பக்கம் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை சேர்த்திருக்கிறது.இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீடை முடிக்கவில்லை.
இதற்கிடையே தேமுதிக.வை இழுக்க அதிமுக,திமுக, என இரு பெரும் திராவிட கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன.
தற்போது தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது
இந்நிலையில்,கடந்தவாரம்,தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்தை சந்திப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக திருநாவுக்கரசர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக கூட்டணியில் தேமுதிக எப்போது வேண்டுமானலும் இணையலாம் என்ற நிலையில்,விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு இழுப்பதற்காகவே திருநாவுக்கரசர் சந்தித்தார் என்றே பேசப்பட்டது.
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் கடந்த (பிப்ரவரி 22) தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எனினும் ரஜினிகாந்தின் சந்திப்பு, உடல் நலம் விசாரிக்கும் நிகழ்வாகவே இருந்தது.
அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தை நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் குறித்து விஜயகாந்திடம் பேசவில்லை என்றார். தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, உங்களது நல்ல எண்ணத்துக்கு பாராட்டுக்கள் என்று சூசகமாக பதில் அளித்தார்.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர்,நடிகர் சரத்குமார் விஜயகாந்தை இன்று அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் – சரத்குமார் இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெருங்கிய நண்பர்களான இவர்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் துணை தலைவராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.நடிகர் சங்க கடன் அடைக்கப்பட்டது இவர்களின் பெரு முயற்சியினால் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது