பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜய்யின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.
பி.பாரதி ரெட்டிக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி இயக்குனர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். சுந்தரபாண்டியன் , ரம்மி ஆகிய படங்களுக்கு பிறகு சூரி 3 வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் ஸ்ரீமன் போன்றவர்கள் நடிக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் , கலை இயக்கம்.பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது.