சென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி அரசாங்கமே 2000 ரூபாய் கொடுப்பதற்காக விண்ணப்ப படிவம் கொடுக்கிறது அரசாங்கம்.!
“மாதா மாதம் ரெண்டாயிரம் கொடுக்கப் போறாங்களாம்” என சில அப்பாவி மக்கள் பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது. ஏதோ ஒரு அடிப்படையில் காசு வந்தால் சரி என்கிற கரப்ட் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம்.
இந்த நிதி வழங்கல் தேர்தலுக்காகத் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதனைகளை சொல்ல முடியவில்லை.தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை.லஞ்சம் தவிர்க்கப்படவில்லை.ஆகவே மக்களையும் கெடுத்து விடலாம் என்கிற நோக்கம்தான் அரசுகளுக்கு இருக்கிறது. ஏற்கனவே ஓட்டுக்கு காசு வாங்கிப் பழக்கப்பட்டவர்கள்தான் மக்கள்.அவர்களுக்கு இது சட்ட வழியான பாதுகாப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
வரப்போகிற நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணிக்காக கட்சிகளிடையே நடக்கிற பேச்சு வார்த்தையில் கோடிகளையும் மையமாக வைத்துதான் பேசுகிறார்களாம்.
“இத்தனை ‘சி’ இத்தனை சீட் ” என்கிற அடிப்படையில் பேசுவதாக அதிமுக மீது குற்றம் சாற்றுகிறார்கள்.
இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. முக்கிய கட்சிகளான அதிமுக -திமுக இரு கட்சிகளும் பிரசார வியூகம் வகுத்து விட்டன.
ஆனால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினியை பிரசார களத்தில் பிஜேபி இறக்கி விடுமா? அல்லது தொலைக்காட்சி வழியாக முன்னர் பேசியதைப் போல பேச வைப்பார்களா?
சாத்தியம் இருக்கா?
சத்தியமாக இல்லை என்கிறது ரஜினி வட்டாரம்.
இதைப்போல நாற்பது தொகுதிகளிலும் உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்பதாகவும் சொல்கிறார்கள்.
தேமுதிக வுக்கு கூட்டணிதான் நல்ல வழி. இதை மறுத்து தனித்து நின்றால் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்தினால் முன்னைப் போல உடலை வருத்திக்கொண்டு தேர்தல் சுற்றுப் பயணம் செய்ய முடியாது. பேசவும் முடியாது என்கிறார்கள். அவருக்குத் தேவை நல்ல ஓய்வு என்கிறார்கள் .
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பல நிபந்தனைகளை விதித்து இருப்பதாக சொல்கிறார்கள்.
1.மத்தியில் இரு கேபினட் பதவி.ஐந்து எம்.பி.க்கள்.
2.வழக்கு நிலுவையில் இருக்கிற 21 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் எட்டு தொகுதிகள் எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
3.மே மாதம் நடக்க இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகிதம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
4.இரண்டு மேயர்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பிஜேபி வழியாக அதிமுகவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.