தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் 90 களில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார். நல்ல மனிதர். அதிர்ந்து பேச மாட்டார்.
அவரது தயாரிப்புதான் தளபதி.
சொந்தத் தம்பி மணிரத்னம் இயக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினி,மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்த படம். இசைஞானி இளையராஜா இசை.சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு என பிரபலங்கள் இணைந்த பெரிய படம். பட்ஜெட்டும் பெரிசு. படத்தின் நீளமும் அதிகம் 167 நிமிடங்கள்.
படத்தின் பத்திரிக்கை செய்திகளுக்கு தனது உதவியாளர் வி.பி.மணியை நியமித்திருந்தார் ஜி.வி.எனப்படும் வெங்கடேஸ்வரன். இந்த வி.பி.மணிதான் பின்னர் டி ராஜேந்தருக்கும் பி.ஆர்.ஓ.
இன்று யாரும் கவனிப்பார் இல்லாமல் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
“இந்த படத்துக்கு காலண்டர் போடலாம்னு இருக்கிறார் ஜி.வி.சார்” என்று வி.பி.மணி சொன்னதும் நான் மறுநாள் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன்.
1991-ல் படம் ரிலீஸ்.
அவ்வளவாக படம் போகவில்லை.
ஒளிப்பதிவு ஸ்டைல் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதைப் போலவே காலண்டரும் பிடிக்காமல் போனது.பளிச்சென படங்களைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு ஹாலிவுட் ஸ்டைல் இருட்டு என்னவோ செய்து விட்டது.
அந்த நேரத்தில்தான் தேவி ஆசிரியரும் சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.இராமச்சந்திர ஆதித்தன் ஒரு யோசனையை சொன்னார்.
“தேவி நல்ல சர்குலேஷன் போகுது. நாம்ம ஜிவியுடன் இணைந்து சிறந்த நடிகர்களுக்கான பரிசளிப்பு விழா நடத்தினால் என்ன? ஜீவியிடம் பேசிப்பாருங்களேன்” என்றார்.அப்போது பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் “நல்ல முயற்சி.நடத்தலாம்”என்றார்.
ஜீவியிடம் சொன்னேன். “நல்ல ஐடியா.தளபதிக்கும் ஒரு புரமோஷன் தேவை.செய்யலாம்” என்று சம்மதம் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில்தான் கொழும்பில் பிரபலமான நகைக்கடை நடத்தி வந்த சோலைமலைத் தேவரும் இந்த பரிசளிப்பு விழாவில் இணைந்து கொள்வதாக அறிவித்தார்.அவருக்கு சென்னையிலும் அப்போது ஒரு கிளை இருந்தது. அம்பிகா ஜுவெல்லர்ஸ்.
“ஐந்து பவுன் வீதம் பதக்கம் தருகிறேன்” என சொன்னார்.
இதனால் விழாவின் அடர்த்தி அதிகம் ஆனது.
சோலைமலைத் தேவருக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்தது. அங்கே பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் சிறப்பு அழைப்பாளர்.
சிறந்த நடிகராக ரஜினி என முடிவு செய்யப்பட்டது. இவருக்கு தனது கையினால் விருது வழங்க ஜீவி மிகவும் விரும்பினார். சிவாஜிக்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் வழங்குவதென முடிவு எடுக்கப்பட்டது.
இப்படி எல்லாமே முடிவாகிவிட்டது.
ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.!
மாலையில் காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி.
மதிஒளி சண்முகம் தொகுத்து வழங்கட்டும் என ஜீவி சொல்லிவிட்டார்.
நடிகர் திலகம்,சூப்பர்ஸ்டார் இருவரையும் அழைத்து வருகிற பொறுப்பு எனக்கு,
காலையில் தேவி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்களுக்கு போனில் நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். 90 சதவிகிதத்தினர் வருவதாக உறுதி அளித்தார்கள்.
11 மணி அளவில் சூப்பர் ஸ்டார் போனில் ,”:மணி சார் ,வீடு வரை வந்திட்டு போறிங்களா?”
அவசரமாக புறப்பட்டுச்சென்றேன்.
“எனக்கு சிவாஜி சார் கையினால் பரிசு வாங்க ஆசை. ஜீவி சாரிடம் வாங்கினால் ஏதோ நாங்க ரெண்டு பெரும் பேசி வச்சு வாங்குறதா சொல்லிடுவாங்க.தளபதி படம் ஓடிட்டு இருக்கிறதால இப்படில்லாம் பேசறதுக்கு சான்ஸ் இருக்கு!அவர்தானே அந்த படத்துக்கு ப்ரொட்யூசர்.” என்று ரஜினி சொன்னதும் சற்றே அதிர்ச்சி.
இதை ஜீவி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற பயம் வந்து விட்டது.
தேவி ஆசிரியர்தான் அதிகம் பதறிப்போனார்.
அழைப்பிதழில் குறிப்பிட்டதை எப்படி மாற்றுவது?
“சிவாஜியிடம் சொல்லிட்டிங்களா?”என கேட்டார்.
“இல்லிங்கய்யா. இனிமேதான் சொல்லணும்”
அன்னை இல்லம் சென்றேன்.
“என்னடா இன்னிக்கி சாயந்திரம்தானே பங்சன். ஞாபகம் இருக்குடா . நீ நாலரை மணிக்கெல்லாம் வந்திரு. சேர்ந்து போயிடலாம்!”
“அண்ணே அதெல்லாம் கரெக்டா வந்திடுவேன். ப்ரொக்ராமில் சின்ன மாறுதல். ரஜினிக்கு நீங்கதான் தங்கப்பதக்கம் கொடுக்கிறீங்க?”
“என்னடா ..இதா சின்ன மாறுதல்? ஜீவி கோவிச்சுக்கப் போறார்டா! எதனால் இப்படி? ரஜினிக்கி தெரியுமா?”
அவருடைய யோசனைதான் என இவரிடம் எப்படி சொல்ல முடியும்?`
“இல்லேண்ணே இனிமேதான் சொல்லணும்.!”
ஆனால் எல்லா விவரமும் ஜீவிக்குத் தெரிந்திருந்தது.
அவரே போன் பண்ணி “ரஜினி சொன்னபடியே ப்ரோக்ராம் நடக்கட்டும்.நான் மதிஒளியிடமும் சொல்லிட்டேன்.” என்று சிரித்த பின்னர்தான் எனக்கு நிம்மதி.
காமராஜர் மண்டபம் மட்டுமில்ல மேடையும் திரையுலக பிரம்மாக்களினால் நிறைந்து வழிந்தது.
கடுமையான சிரமங்களுக்கு மத்தியில்தான் நடிகர் திலகமும்,சூப்பர் ஸ்டாரும் மேடையில் அமர முடிந்தது.
முதன்முதலாக நாங்கள் நடத்திய திரைப்பட பரிசளிப்பு விழா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை சொல்லத் தேவையில்லை.
மம்மூட்டி -விஜயகாந்த் சந்திப்பில் என்ன நடந்தது? நாளை மறுநாள் சொல்கிறேன்.