பிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்களின் பட வரிசையில் மைனா,கும்கி யை தொடர்ந்து’ கயல்’ மூன்றாவது படமாக அமைந்துள்ளது.
ஊர் ஊராக சென்று , சிறுசிறு வேலைகளை செய்து கிடைக்கும் பணத்தில் ஜாலியாக ஊரைச் சுற்றி வருகிறார்கள் நாயகனும் ( ஆரோன்) அவனது ( சாக்ரடிஸ் )நண்பனும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் ஊரைவிட்டு ஓடிவரும் ஒரு காதல் ஜோடியை அவர்கள் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு உதவி செய்கின்றனர் .ஆனால், இருவரும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிற அப் பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் ,எங்கு ஓடினர் என்கிற விபரத்தை பெற அவர்களை கட்டி வைத்து உதைக்கிறது அந்த ஊர் ஜமீன் குடும்பம் .தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்த ஜமீன் கும்பல் நம்ப மறுக்கிறது. உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது. இந்நிலையில் , ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்னநாயகன் ஆரோன் மீது கயலுக்கும் காதல் வருகிறது காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல். கயல் தன்னை தேடி அலைவதை தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத் தேட, இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா ? என்பதே கயல் படத்தின் மீதிக்கதை!ஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. துறுதுறு கண்களுடன், உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம்என ஒரு கிராமத்து தேவதையாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார். ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிருபித்து விடுகிறார்.நாயகன் சந்திரனின் நண்பராக வருபவர் நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் தோற்று விடுகிறார்.எரிச்சலே மிஞ்சுகிறது.
ஆர்த்தி அன்கோ காமெடி காட்சிகள் பல இடங்களில் வசனமே புரியாமல் போவதால் ‘தேமே’ என உட்கார வைத்து விடுகிறார்கள். சந்திரன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதை அவரது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங்காக உள்ளது.வில்லனாக வரும் யோகி தேவராஜ் கயலை பார்த்து ‘நாசமா போ என உறுமும் போது பலரின் கை தட்டல்களை அனாசயமாக அள்ளி விடுகிறார்..படத்தில் முக்கிய காட்சியாக கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமரி திரு வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை மிகவும் தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக இயக்குனருக்கு பெரிய சபாஷ் போடலாம். . சுனாமியின் பின்னணிக்காக டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை படு மிரட்டலாக இருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் இமானின் முத்தையா படங்களையே ஞாபகப் படுத்துகிறது. ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அவ்வளவே! மொத்தத்தில், மென்மையான காதலை தனது வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன், அதே சமயம் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை என்பதே நிஜம்! முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றி விடுகிறது..கயல்விழி ஆனந்திக்காகவும் ,கண்களை குளிரவைக்கும் ஒளிப்பதிவுக்காகவும் ,பிரபுசாலமனின் இயக்கத்திற்காக வும் ‘கயலை ‘ஒரு முறை பார்க்கலாம்./