பூமராங் (விமர்சனம்). சினிமாமுரசம் ரேட்டிங் 4/5.
‘இயக்குனர் ஆர்.கண்ணன்.நடிகர்கள் ;அதர்வா,மேகா ஆகாஷ்,ஆர்.ஜே .பாலாஜி. இசை;ரதன் ,ஒளிப்பதிவு;பிரசன்னா குமார்.
மனிதனின் அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம், அவனது ஆதார சக்தியான விவசாயத்தை அழிக்கும் முயற்சி இன்னொரு பக்கம்.
இப்படி பாசிட்டிவ் ,நெகட்டிவ் என இரு கம்பிகளை இணைத்து வாழ்வியல் யதார்த்தம் காட்டி இருக்கிறார் ‘கதாசிரியர்’கண்ணன்.
அந்த வாழ்வியலில் மனிதன் எப்படி மாறுபட்டு அழிவுக்கு காரணமாகிறான் என்பதை சினிமாவாக காட்டுகிறார் ‘இயக்குநர்’ கண்ணன்.
கண்ணன் என்பதால் காட்சிகளிலோ,வசனங்களிலோ துச்சாதனத்தனம் இல்லை.
சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை.ஆங்காங்கே சில எதிர்பார்ப்புகள்.அதற்கான விடைகள் இடைவேளைக்குப் பிறகு என பளிங்கு நீரோடையாக அவருடையை கதை பயணிக்கிறது.
சுகாசினி மணிரத்னத்தின் மகன்தான் மூளைச்சாவின் முடிவில் கிடக்கும்இளைஞன் (அதர்வா). அந்த இளைஞனின் முகத்தை தீ விபத்தில் சிக்கிய இன்னொரு இளைஞனுக்கு பொருத்துகிறது மருத்துவம்.
சுகாசினிக்கு அவர் மகனே இல்லை என்பது பிறகு தெரிகிறது. அவர் சொல்கிற காரணமும் விவாதப் பொருள் என்றாலும் பொருந்திப் போகிறது.நல்ல உத்தி.!
ஃபேஸ் ட்ரான்ஸ்பிளான்டேசன்.
கிட்னி மாற்று சிகிச்சை என்பதைப்போல முக மேல் தோலை உரித்து மாற்றி மற்றவரின் முகத்தசையை பொருத்துகிறார்கள்.அப்படி பொருத்தப்பட்ட முகம்தான் அதர்வா. முகம் மற்றவருடையதாக உடம்பு மட்டும் தன்னுடையதாகவும் மாறுபட்ட கேரக்டர் அதர்வாவுக்கு! கடினமானது.
மேகாஆகாஷின் குறும்படத்துக்கு அதர்வா சொல்லும் திருத்தம் காலங்கள் கடந்தாலும் ஒட்டுண்ணியாக சேர்ந்து பயணிப்பது ஊழல்தான் என்பது. நச் ! மேகாவின் காதலை அலட்சியமாக கடப்பதும் கவிதைதான்! மறுப்பதிலும் நாகரீகம்.பெண்ணை காயப்படுத்தாமல் காதல் சொல்வதும் சுகம்தானே!
காரியம் முடிந்ததும் கழுத்தை நெரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சித்து விளையாடல்கள்,அதற்கு ஒத்துப்போகும் அரசு நிர்வாகம் என பிற்பாதியில் தற்கால அரசியலை குட்டிவைப்பது காலத்தின் கட்டாயம்.ஆர்ஜே பாலாஜிக்கு அவ்வளவு வரவேற்பு தியேட்டரில்.! சிலர் சொன்னால்தான் அரசியல் குத்துகளுக்கு அழுத்தம் கிடைக்கிறது.
தன்னை எதற்காக கொலை செய்யத் துரத்துகிறார்கள், மாறிப்போன முகத்திற்குரியவன் யார் என்பதை கண்டுபிடிக்கும் பயணம் பிற்பாதியில் .!
சுகாசினியின் புத்திரன் அதர்வா இல்லை என்பதுடன் ,அவர் மேற்கொண்ட நதி நீர் இணைப்பின் எதிரொலியே தொடருகிற கொலை முயற்சிகள் என்பதை கால்வாய் பிரச்னை தெளிவாக்குகிறது. பிரமாண்டமான அந்த காட்சி ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.சுகுமாரின் பறவைப் பார்வை படப்பிடிப்பு கால்வாயின் பிரமாண்டத்துக்கு துணையாக இருக்கிறது. வெடி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட நிலச்சரிவை இயல்பாக படமாக்கியிருக்கிறார்.பாலாஜியின் முடிவு எதிர்பாராதது.
இரண்டு நாயகிகள் மேகா,இந்துஷா,கதையின் முக்கியத்துவம் கருதி இவர்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை என்றாலும் மனதில் பதிவதென்னவோ மேகாதான்! காந்த சக்தி உள்ள முகம்.! விவசாயம் செய்யப்போவதாக சொல்கிற மகனிடம் அப்பா சலித்துப் புளித்து சொல்வது ஸ்ரீ ரங்கம் கோவில் மதிலில் கல்வெட்டாய் செதுக்கி வைக்கலாம்.வறண்ட காவிரியை அடிக்கடி பார்ப்பது அந்த நகரமும்தானே!
“இங்க தண்ணி ஏதுடா!வீடு நெலத்தை வித்திட்டு சென்னைக்கு வரலாம்னு இருக்கோம்”என்பது விவசாயியின் வலி.!
“அங்க மட்டும் தண்ணி இருக்குன்னு யாரு சொன்னா?” என பாலாஜி கவுண்டர் அடிப்பது மாநகர மக்கள் வடித்துக் கொண்டிருக்கிற கண்ணீர் வரிகள்.!
கருத்துள்ள படங்களை பார்க்க வேண்டிய கடமை நமது கடமைகளில் ஒன்று.